தேடல் தொடங்கியதே..

Saturday 30 June 2012

கீழக்கரையில் வரலாற்று மாணவர் ஆய்வு - தகவல்கள் அளித்து உதவ வேண்டுகோள்!

நம் கீழக்கரை நகரில் வரலாற்று ஆய்வுகள் செய்து, முனைவர் பட்டம் பெறுவதற்காக சென்னையை சேர்ந்த நண்பர். திரு. சுந்தர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அவர் தற்போது அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்திலுள்ள பல்கலைகழகத்தில் வரலாற்று மாணவராக பயின்று வருகிறார். இவர் "பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் முஸ்லீம்களின் கடல் வணிகமும், சமூகமும்" என்ற சிறப்பான தலைப்பின் கீழ் ஆய்வுகள் செய்து வருகிறார். 




இது சம்பந்தமாக நமதூரின் மூத்த குடி மக்களை சந்தித்து வரலாற்று பதிவுகளை திரட்டி வருவதோடு மட்டுமல்லாமல், அரிதாக சில மூத்தவர்களிடம் இருக்கும் ஓலை சுவடிகளையும், சில இடங்களில் காணக் கிடைக்கும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து வருகிறார். 




 இதற்காக இவர் தமிழகத்தின் அனைத்து கடலோர முஸ்லீம்கள் வாழும் ஊர்களுக்கும் சென்று தகவல்கள் பெற்று வருகிறார். இது வரை பழவேற்காடு முதல் கடலூர், நாகப்பட்டினம், நாகூர், அதிராம்பட்டினம், தொண்டி, குளைச்சல் , தேங்காய் பட்டினம், காயல் பட்டினம் சென்று அறிய பல தகவல்களை சேகரித்து இருக்கிறார்.

ஒரு நல்ல தலைப்பின் கீழாக, ஆய்வு மேற்கொண்டிருக்கும் நண்பர். திரு. சுந்தர் அவர்களுக்கு, இன்னும் சிறப்பாக, அவர் ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கும் வகையில், இது பற்றி உங்களுக்கு தெரிந்த விபரங்களை அளித்து அவருக்கு உதவுமாறு, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் : திரு சுந்தர் அவர்கள் 9952009052

கீழக்கரையில் மின்சார வாரிய கணக்கெடுப்பு பணியாளர்களின் மெத்தனப் போக்கால் தொடர்ந்து அவதியுறும் பொதுமக்கள் !

நம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார எல்லைக்குள் சுமார் 10000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறது. இவை அனைத்திற்கும் சுழற்சி முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு மின் இணைப்புகள் மற்றும் கடை மின் இணைப்புகளுக்கான கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியினை அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின் துறை கணக்கெடுப்பு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




அவர்களில் சிலர் சரியான மின் அளவுகளை, அதற்குரிய அட்டைகளில் பதியாமல், கூடுதலாக பயனீட்டு அளவுகளை பதிவதாக, பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் இரண்டு மடங்கு தொகைக்கும் அதிகமாக பணம் செலுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுவதாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து பாதிக்கப்பட்ட ஹமீதியா மேனிலைப் பள்ளியின் ஓய்வு ஆசிரியர். லெப்பை தம்பி அவர்கள் கூறும் போது " முஸ்லீம் பஜாரில் இருக்கும் எனது கடையின் மின் இணைப்பு மீட்டரின் அளவு, இன்றைய தேதியில் 647 என்று உள்ளது. ஆனால் 955 என்று மீட்டரை பார்க்காமலே அதிகமாக எழுதியதோடு மட்டுமல்லாமல், அதிகமான தொகையை கட்டணமாக பதிந்துள்ளனர்.



கீழக்கரையில் மின்சார வாரியத்தின் வசூல் மையம் தற்போது வண்ணாந்துறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகரிலிருந்து இது சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சம்பந்தமாக வன்னாந்துறைக்கும், கீழக்கரைக்கும் அலைந்து திரிந்தது தான் மிச்சம். மின்சார வாரிய  அலுவலர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால் பணம் கட்ட தாமதமாவதால், இப்போது பீஸையும்  பிடுங்கி சென்று விட்டார்கள்" என்றும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.


இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த நஸ்ருன் கரீமா அவர்கள் கூறும் போது, "கணக்கெடுக்க வருபவர்கள் வீட்டின் கதவுகளை கூட தட்டுவதில்லை. வீட்டின் வாசலை திறந்து வைத்திருந்தால் மட்டும் கணக்கெடுத்து செல்கிறார்கள். அப்படி இல்லை என்றால் மனக்கணக்காகவே, தாங்கள் வைத்திருக்கும் மின்னணு பதிவியில் ஏதாவது ஏகத்துக்கு கிறுக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.

எங்கள் வீட்டில் இதே போன்று ஆள் இல்லை என்று கூறி ஒவ்வொரு தடவையும் (மூன்று முறை) மின் பயனீட்டு அளவினை 100 என்று எழுதி விட்டு, தற்போது மொத்த வசூலாக, மிகக் கூடுதல் பயனீட்டு அளவாக, 820 என்று குறிப்பிட்டு உள்ளார்கள். மின் பயனீட்டு அளவு கூட, கூட, மின்சார கட்டணமும் உயர்கிறது. அந்த வகையில் நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம். பலர் இந்த குளறுபடிகள் தெரியாமல் இவர்கள் கிறுக்கி செல்லும் கட்டணத்தை அப்படியே கட்டி செல்கின்றனர்." என்று பெரும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.




இது குறித்து சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பாளரிடம் கேட்ட போது, "ஏதோ ஒரு முறை தவறு நடந்து விட்டது. விடுங்கள்" என்று மட்டுமே கேசுவலாக பதில் வந்தது. ஆனால் இதே போன்று, புகார்களை அளிக்க பலர் அங்கு காத்திருந்ததை பார்க்கும் போது, மின் வாரிய கணக்கெடுப்பாளர்களின் தவறான அணுகுமுறையை உறுதி செயவதாய் இருந்தது. ஏற்கனவே அமுலில் இருக்கும் மின்சார கட்டணத்தின் உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், இது போன்ற மின்சார வாரிய அலுவலர்களின் மெத்தனப் போக்கால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Friday 29 June 2012

கீழக்கரை கடற்கரை பகுதிகளில் சுகாதாரக் கேடு எதிரொலி - கலெக்டர் திடீர் ஆய்வு !

நம் கீழக்கரை நகரின் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரப்பும் மனித கழிவுகளின் எச்சங்களையும், துர் நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளின் மிச்சங்களையும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளின் சொச்சங்களையும் மலை போல் கொட்டி குவித்து வருகின்றனர். 




இதனால் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமாக திகழ்ந்த நம் கீழக்கரை, தற்போது கண்டுபிடிக்க முடியாத, பல புதுப் புது வியாதிகளின் தாயகமாக, குபைக்கரையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை புனரமைப்பு செய்து, மீண்டும் புதுப் பொலிவுடன் மாற்ற, நம் நகரின் பல்வேறு அமைப்புகளிலுள்ள சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 




கடந்த வாரம் நம் நகருக்கு வருகை புரிந்த  மீன் வளத் துறை அமைச்சர் மாண்பு மிகு. கே.ஏ.ஜெயபால் அவர்களிடம் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக (KMSS) இந்த சுகாதார கேடு குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கண் துடைப்புக்காக நகராட்சி ஊழியர்களின் திடீர் கிளீனிங் !


இந்நிலையில் இந்த பகுதிக்கு இன்று (29.06.2012) காலை 11 மணியளவில் திடீர் நேரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்கள் கடற்கரை பெட்ரோல் பங்க் பகுதியிலிருந்து கால் நடையாகவே துர் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல்,  குப்பைகள் குவிந்த கிடக்கும் பகுதியின் கடைசி எல்லை வரை சென்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டார். துர்வாடை அதிகமாக இருந்த காரணத்தினால் வந்த வழியே திரும்பாமல், 18 வாலிபர்கள் தர்ஹா பாதையின் வழியாக திரும்பி சென்றனர். உடன் கீழக்கரை நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான், கலங்கரை விளக்க அதிகாரிகள், கடலோர கண்காணிப்பு அதிகாரிகள், கீழக்கரை சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் சென்றிருந்தனர். 




இது குறித்து மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்களிடம் கேட்ட போது " இந்த குப்பைகள் அனைத்தும் 'மாஸ்டர் கிளீனிங்' என்ற அடிப்படையில் விரைவில் அகற்றப்படும். மீண்டும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டாதவாறு அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர் முயற்சிகள் மட்டுமே திருவினையாக்கும்... என்பதோடு மட்டுமல்லாமல், பொது மக்களின் மேலான ஒத்துழைப்பும் இத் தருணத்தில் அவசியமான ஒன்றென்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

Wednesday 27 June 2012

கீழக்கரையில் நடைபெற்ற KMSS சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி !

நம் கீழக்கரை நகரில், பொது நல சேவைகளை முன்னிறுத்தி பல்வேறு சங்கங்களும், கழகங்களும், அமைப்புகளும், இயக்கங்களும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதன் வரிசையில், பணியக்காரத் தெருவில் செயல்பட்டு வரும்  கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS சங்கம்) தன் மூன்றாமாண்டு துவக்க விழா நிகழ்ச்சியினை சென்ற வாரம் (21.06.2012) வியாழக் கிழமை அன்று இனிதே நடத்தியது. 




இந்த விழாவிற்கு நகராட்சித் துணை தலைவர் ஜனாப். H.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார்கள். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், அனைத்து பள்ளிகளின் தாளாளர்களும், தலைமையாசிரியர்களும், அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் முன்னிலைபடுத்தப்பட்டு இருந்தார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.M.ஹாமீது இபுறாகீம் அவர்கள், கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர். J.சாதிக் அவர்கள், கடந்த நகராட்சி தேர்தலின் சேர்மன் போட்டியாளர்.ஓய்வு ஆசிரியை.ஹாஜியானி. K.M.V ஆபிதா பேகம் அவர்கள், சமூக நல நுகர்வோர் சங்கத்தின் செயலாளர்.தங்கம் இராதாகிருஸ்ணன் அவர்கள், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளரும், இந்த சங்கத்தின் ஆலோசகரும், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின்  ஆலோசகருமான A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை  வழங்கினார்கள்.




முன்னதாக, இந்த சங்கத்தின் செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, சங்கத்தின் ஆண்டறிக்கையும் சமர்ப்பித்தார். கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் A.அலாவுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, 300 க்கும்  அனைத்து சமுதாய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் உறுப்பினர். B.பைசல் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நன்றியுரையினை சங்கத்தின் தலைவர். ஜமால் அஸ்ரப் அவர்கள் வழங்கினார்கள்.



அனைத்து சமுதாய ஏழைப் பிள்ளைகளுக்கான கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், இரத்த தானம், வட்டியில்லா கடன் திட்டங்கள், சமூக நலப் பணிகள் என எண்ணிலடங்கா பொது நல சேவைகளுடன் மிளிர்ந்து கொண்டிருக்கும் KMSS சங்கத்தின் சமூக நலப் பணிகள் தொய்வின்றி மென் மேலும் சிறக்க எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday 26 June 2012

கீழக்கரையில் குளிர்ச்சி தரும் மங்குஸ்தான், லிச்சி பழங்களின் அனல் பறக்கும் விற்பனை - கடும் விலையால் பொதுமக்கள் வருத்தம் !

நம் கீழக்கரை நகரின் வள்ளல் சீதக்காதி சாலையில் (ஜும்மாபள்ளிவாசல் முன்புறம்), மங்குஸ்தான் மற்றும் லிச்சி பழங்களின் விற்பனை களை கட்டி இருக்கிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் விளையும் இந்த பழங்கள், நம் ஊருக்கு வருடம் தோறும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குற்றாலம் சீசன் துவங்கப்படாத நிலையில், இந்த பழங்களின் விலை ஒரு கிலோ ரூ.200 க்கு விற்பனையானாலும், இதனை போட்டி போட்டு வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். 



இது குறித்து திருநெல்வேலி பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் அவர்கள் கூறும் போது "சென்ற ஆண்டு சீசன் முன் கூட்டியே துவங்கிய காரணத்தினால், இந்த பழங்களின் விலை ரூ.120 ஆகவே இருந்தது. இறைவன் நாடினால், இன்னும் ஒரு மாத காலத்தில் விலை படிப் படியாக குறையும். இந்த கீழக்கரை பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை மினி லாரிகளில் பழங்களை கொண்டு வந்து விற்கிறோம். இந்த முறையும் விற்பனை சிறப்பாக இருக்கிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



இருப்பினும் பொது மக்களில் பலர் விலையை கேட்டதும், வந்த வழியே திரும்பி விடுகின்றனர். தற்போது நடுத்தர வாசிகளுக்கு, கடும் விலை உயர்வால் எட்டாக் கனியாக இருக்கும் இந்த பழங்கள், வரும் மாதங்களில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழக்கரை அருகே கட்டப்பட்டு வரும் 'குப்பை கிடங்கு' சுற்றுச்சுவர் இடித்து தரை மட்டம் - தொடரும் மர்ம கும்பலின் அட்டூழியம் !

நம் கீழக்கரை நகரின் மிகப் பிரதான பிரச்சனையாக இருக்கும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில், தில்லையேந்தல் பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், குப்பை கிடங்கை சுற்றி சுற்று சுவர் எழுப்பும் பணி  ரூ.21,00000  மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் சில வாரங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள், தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவருடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சமீபத்தில் மீண்டும் தொடங்கியது


இந்நிலையில் நேற்று முன் தினம் 24.06.2012 அன்று, மீண்டும் சில மர்ம ஆசாமிகள் கட்டி முடிக்கப்பட்டிருந்த, சுற்றுச்சுவரின் பெரும் பகுதிகளை உடைத்து தரை மட்டம் ஆக்கியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேன்க் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை நாசப்படுத்தி, 10 க்கும்  மேற்ப்பட்ட சிமிண்டு மூட்டைகளையும் கிழித்து அதனுள் நீரை ஊற்றி அட்டூழியம் செய்துள்ளனர். இதனை நேரில் சென்று பார்வையிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.



இது குறித்து இன்னும் சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்  சார்பில், காவல் துறையில் புகார் அளிக்கப்படாத காரணத்தால், வழக்குப்பதிவில் சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நாச வேலைகள் மீண்டும் தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சித் தலைவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களை தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமைகளை தெரிவித்தார். சில பொது நல அமைப்பினர்களும் காவல் துறையிடம் இது குறித்து முறையிட்டனர்.




இது குறித்து நகராட்சி ஆணையர், கீழக்கரை காவல்துறை ஆய்வாளாரிடம்  உடனடியாக புகார் தெரிவித்து, நாசவேலையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்  இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரனை நடத்திவருகிறது.


தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற பல்வேறு அசம்பாவித காரணங்களால், குப்பை கிடங்கின் சுற்றுச் சுவர் கட்டும் பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீண்டும் இங்கு பணிகளை தொடர அச்சப்படும் வகையில் மர்ம கும்பலின் செயல்பாடுகள் உள்ளது. இதனால் கீழக்கரை நகர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் பால‌த்தில் அமைச்ச‌ர்க‌ள் ஆய்வு - KMSS சங்கத்தினர் கோரிக்கை மனு !

நம் கீழக்கரை புதிய கடல் பாலம் பகுதிக்கு இன்று (24.06.2012) காலை 9 மணியளவில் மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ ஜெயபால் மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மற்றும் மீன் வளத் துறை சம்பந்தமான அரசு அலுவலர்கள், அதிமுக‌ மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆனிமுத்து, கீழக்கரை ந‌க‌ராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் வருகை தந்தனர்.



புதிய கடல் பாலத்தின் கடைசி முனை வரை சென்று ஆய்வு செய்த அமைச்சர்கள், பாலத்தின் அடியில் தேங்கி இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி, மீண்டும் மணல் குவியாத வண்ணம், நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 15 நிமிடங்கள் முழுமையாக பார்வையிட்ட அமைச்சர்கள், சில அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை அந்த இடத்திலேயே கண்டித்தனர்.





இந்த வருகையின் போது,  கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) செயலாளர் இஸ்மாயில் தலைமையில் தலைவர் ஜமால் அஸ்ரப் முன்னிலையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன் மொழியப்பட்டிருந்தது.

1. கீழக்கரை நகரில், மிகப் பிரதானமான பொழுது போக்கும் இடமாக இந்த கடற்கரை பகுதி இருப்பதால் புதிய கடல் பாலம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர் பூங்கா மற்றும் பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைத்து தர ஆவன செய்ய வேண்டும்.

2. கீழக்கரை நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில், துர் நாற்றம் வீசும் குப்பைகளையும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளையும், கோழிக் கழிவுகளையும் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் கடல் நீர் மாசுபடுத்துவதொடு, மீன் வளமும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை ஆய்வு செய்து உடனடியாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் குப்பைகளை வீசி செல்லும் இந்த விசமிகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, நகராட்சி கமிசனருக்கு உத்தரவிட வேண்டும்.

3. தமிழக அரசால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ2000த்தை உயர்த்தி அதிகமாக்கி தர மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




பாலத்தின் அடியில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளில் துரித நடவடிக்கை எடுத்து, விரைவில் புதிய கடல் பாலத்தின் திறப்பு விழா நடத்த முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதும், KMSS சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும், இங்கு திரண்டிருந்த பொது மக்கள் அனைவரின் ஆசையாக இருக்கிறது.

Monday 25 June 2012

கீழக்கரையில் 110 வயது இளைஞரின் வபாத்து (மரண) அறிவிப்பு !

நம் கீழக்கரை நகரின் மிக மூத்த குடிமகனும், எதிர் கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த உழைப்பின் சிகரம், பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த 'செய்யாப்பா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இளைஞர். செய்யது அபுதாகிர் அவர்கள் நேற்று (24.06.2012) காலை 11 மணியளவில்  வபாத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).




இது குறித்து செய்யாப்பா அவர்களின் பேரன் ரிபாய்தீன் அவர்கள் கூறும் போது "எப்போதும் எறும்பு போல சுறு சுறுப்பாக உழைத்த எங்கள் செய்யாப்பா கடந்த வாரம் தூங்கும் போது, கட்டிலில் இருந்து விழுந்ததில் மூர்ச்சையுற்றார்கள். அன்றிலிருந்து சுய நினைவிழந்து நேற்று இறைவனடி சேர்ந்தார்கள். செய்யாப்பாக்கு பீடி, சிகரெட், குடி என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. தங்கள் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும்  காரணங்களை அவர்களிடம் கேட்கும் போதெல்லாம் நல்ல எண்ணங்களும், அல்லாஹ்வின் நாட்டமும் தான் என அடிக்கடி கூறுவார்கள்" என்று தெரிவித்தார்.


செய்யாப்பா அவர்களின்  ஜனாஸா நல்லடக்கம் நேற்று (24.06.2012) மாலை அஷர் தொழுகைக்கு பின்னர்  4.30 மணியளவில் பழைய குத்பா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருடைய நல்லறங்களை அனைத்தையும் அங்கீகரித்து, பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக!ஆமீன்.

           தொடர்புக்கு : ரிபாய்தீன் - 95973 34355, சிக்கந்தர் - 99448 66876