தேடல் தொடங்கியதே..

Sunday 15 April 2012

கீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி !

கீழக்கரையில் குப்பைகள் பிரச்சனை எங்கு நோக்கினும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை காண தற்போது தில்லையேந்தல் பகுதியில், குப்பை கிடங்கு கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெரு முயற்சி மேற் கொண்டு  'எக்ஸ்னோரா' என்ற தொண்டு அமைப்பின் உதவியோடு திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை, பொது மக்கள் மத்தியில் குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பான சேவைகளை, நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செயல் படுத்தி வருகிறார்கள்.


வழங்கப்பட்டு வரும் குப்பை வாளிகள்

இந்த வரவேற்க்கத்தக்க முயற்சியின் ஒரு பகுதியாக, மேலத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அஹமது லாபீர் மற்றும் அவர்கள் சார்ந்த குழுவினர் 'யூத் எக்ஸ்னோரா' அமைப்பினரின் வழிகாட்டுதலின் படி, சோதனை முயற்சியாக, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை, வீடுகளிலேயே பிரிக்க, பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்திலான, இரண்டு பிளாஸ்டிக் வாளிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.





இதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி லாபீர் காக்கா அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அஸ்கான் தலைவர் சபீர் காக்கா, அஹமது லாபீர் காக்கா, இஸ்மாயில் காக்கா, கேப்டன்.ஜாபர் ரிபாய் காக்கா, மெஜஸ்டிக் ஜாவித் காக்கா, நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, ரிஸ்வான் காக்கா, இஞ்சினியர் கபீர் மற்றும் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது குப்பை பிரச்சனை சம்பந்தமான பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


வாளிகளுடன் கொடுக்கப்படும் கையேடு

இது குறித்து அஹமது லாபீர் அவர்கள் கூறும் போது "முதற்கட்டமாக, 2000 வாளிகளை மேலத்தெரு, சங்கு வெட்டி தெரு, பன்னாட்டார் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் கொடுத்து வருகிறோம். விரைவில் நம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் வாளிகள் வழங்கப்படும். வாளிகளோடு ஒரு கையேடும் வழங்கியுள்ளோம். அதில் குப்பைகளை, இல்லத்தரசிகள் சுலபமாக பிரிப்பதற்கு ஏதுவாக, படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.


 வாளிகளுடன் கொடுக்கப்படும் கையேடு
 
அதனை பொதுமக்கள் அனைவரும் புரிதலுடன் படித்து, குப்பைகளை பிரித்து வெல்பேர் பணியாள்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இறைவன் நாடினால், குப்பை கொட்டும் தளத்தின் வேலைகள் நிறைவடையும் தருணத்தில், 'குப்பை மேலாண்மை' (WASTE MANAGEMENT) நகராட்சி ஒத்துழைப்போடு முழு வீச்சில் துவங்கும்" என்று மிகுந்த எதிர் பார்ப்புடன் தெரிவித்தார்.

நம் கீழக்கரை நகரை குப்பையில்லா நகராக மாற்ற, மாபெரும் முயற்சி எடுத்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

1 comment:

  1. i didn't recive any bucket frm anyone, do u think giving me is waste!...

    ReplyDelete