தேடல் தொடங்கியதே..

Saturday 9 November 2013

கீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து !

கீழக்கரை லெப்பை தெருவில், பெண்கள் தொழுகைப் பள்ளி (மதரஸா) அருகாமையில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று இருந்தது. அதன் மீது சட்ட விரோதமாக நகராட்சியின் முறையான அனுமதி இன்றி அவசர கதியில், வெறும் பத்தே நாளில் கட்டி முடிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் மட்டுமே பூர்த்தி அடைந்திருந்த 'சாதனை' வீட்டின் பால்கனி திடீரென இன்று (09.11.2013) மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த நேரம் மதரஸாவில் இருந்து பிள்ளைகள் வந்து கொண்டிருந்தனர். இறைவன் அருளால்.. இந்த பெரிய விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை.



இது குறித்து லெப்பை தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர். பைரோஸ் கான் அவர்கள் கூறும் போது "குறுகிய தெருக்களை கொண்ட நமது நகருக்குள் இது போன்று சட்ட விரோதமாகவும், தரமில்லாமலும், அவசர கோலத்தில் கட்டப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்கள் மீதும் காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வீட்டின் ஏனைய பகுதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உடனடியாக இடிக்க ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.



கீழக்கரையில் இது வரை  பழைய கட்டிடங்களின் சிலாப்புகள்  மட்டும் தான் திடீர் திடீரென இடிந்து விழுந்து விபத்து நேர்ந்தது. ஆனால் தற்போது அனுமதியின்றியும், பிளேன் அப்ரூவல் இன்றியும் அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்படும் வீடுகளும் இடிந்து விழும் நிலை  ஏற்பட்டுள்ளது.  இவை இடிந்து விழும் முன்னரே நகராட்சியினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வீட்டை இடிக்க முன் வர வேண்டும். இல்லாத போது  வீட்டில் குடியிருப்பவர்களே விரைவில் விபத்தை சந்திக்கும் அபாயம்  ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.



கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !


கீழை இளையவன் வாசக நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ! 

(UPDATED 11.11.2013 11 am)

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெப்பை தெருவில், நகராட்சி கிணற்றை ஆக்கிரமித்து அவசர கோலத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விழுந்தது குறித்து, பொதுமக்கள் நலன் கருதி ஒரு செய்தியினை பகிர்ந்திருந்தோம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் அத்தனையும் உண்மை தான் என்பதை விளங்கி கொள்ளாமல் நண்பர்கள் சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். 

பொது சொத்துக்களை சமூகத்திற்கு பயனளிக்கும் விதமாக, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தால் அதில் யாரும் குறை கூறவோ, அதை மீட்டெடுக்கவோ முனைந்திட மாட்டார்கள். மாறாக தனி நபரின் ஆக்கிரமிப்பிற்கு, சம்பந்தப்பட்ட பொது சொத்து சிக்கும் போது, அதற்கு எதிராக குரல் கொடுப்பது அவசியமாகிறது. அது ஒரு சதுரடி நிலமாக இருந்தாலும் சரியே.

அன்பு நண்பர்களே.. கீழை இளையவன் வலை தளத்தின் வாசகராக, இதற்கு முன்னர் பகிரப்பட்ட முந்தைய பதிவுகளையும் வாசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். எந்த பதிவாக இருந்தாலும் அதில் ஆதாரங்களுடன் உண்மைகள் மட்டுமே பேசப்பட்டு இருக்கும். இதிலும் அவ்வாறே பதியப்பட்டுள்ளது. பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, சொந்த  பந்தங்களுக்காகவோ, அரசியல் இலாபத்திற்காகவோ செயல்படுபவன் நான் அல்ல. அவ்வாறு செயல்பட்டு வரும் தளமும் இதுவல்ல. 

மேற்குறிப்பிட்டுள்ள பொது சொத்து குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பதில் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரியும், சர்வேயரும் முறைப்படி ஆய்வு செய்து, நகராட்சிக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் கீழக்கரை நகராட்சியும் முறைப்படி கடந்த 11.10.2013 அன்று இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றிடுமாறு, சம்பந்தப்பட்ட வீட்டாருக்கு அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை அகற்றிடவில்லை. அவ்வாறு உரிய நேரத்தில் வீட்டை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு  பகுதிகளையும், ஆபத்தான பகுதிகளையும் அகற்றி இருந்தால் இது போன்ற விபத்தை தடுத்து இருக்கலாம்.



கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களை கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களும், மதரசா சிறுவர்களும் செல்லும் பாதை இது. இனி இது போல் யாரும் அவசர கதியில் கட்டிடங்களை கட்டி, மகத்துமிக்க மனித உயிர்களுடன் விளையாடி விடக் கூடாது என்பதும், பொது சொத்துக்களை யாரும் எள்ளளவும் அபகரித்து விடக் கூடாது என்கிற நல்ல நோக்கம் கொண்ட பதிவு இது. இது சம்பந்தமாக வீட்டின் உரிமையாளர், முகநூல் வாயிலாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும் உரிய பதிலை அளித்து  இருக்கிறேன். இதற்கு மேல் தேவையற்ற விவாதங்கள் தொடர்ந்திட வழி  வகை செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். எனினும் இதனை சட்டத்தின் துணை கொண்டு எதிர் கொள்கிறேன்.

கீழக்கரை சாலை தெருவில் 'இப்போதே' பல்லை காட்டும் பைப்புகள் - தரமற்ற பணிகளால் பொது மக்கள் எரிச்சல் !

கீழக்கரை சாலை தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிக்கப்பட்ட கழிவு நீர் பைப்புகள், நகராட்சி செய்து முடித்ததாக சொல்லப்படும் பணிகளின் தரம் இப்போதே பல்லை காட்ட ஆரம்பித்து விட்டது.  முறையாக ஆழப்படுத்தி தோண்டப்பட்டு குழாய்கள் பதிப்பட்டாத காரணத்தால் குழாய்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவர்கள் இதன் மேல் நடந்து சென்றால் கூட உடைந்து விடும் அளவுக்கு இருக்கிறது. இன்னும் சில இடங்களில் தரமற்ற குழாய்கள், அதற்குள் உடைபட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். 


இது குறித்து இந்த பகுதியின் (12வது வார்டு) முன்னாள் கவுன்சிலர் அமீது கான் அவர்கள் நம்மிடையே பேசும் போது "முன் அனுமதி என்கிற பெயரில், ரூ.280000 திட்ட மதிப்பீட்டில், அவசர கோலத்தில் போடப்பட்டு இருக்கும் இந்த குழாய்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது தான், மக்களுக்கு உண்மை விளங்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போதே அதன் தரம் பல்லை இளிக்க ஆரம்பித்து விட்டது. முறையாக ஆழப்படுத்தி தோண்டாமல் ஜே சி பி இயந்திரத்தை வைத்து அதிரடி வேலை செய்து முடித்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் அவ்வாறு இல்லை. அதே போல் இடையிடையே கட்டப்பட்ட  கழிவு நீர் சுத்தம் செய்யும் தொட்டிகள் செங்கலால்  கட்டப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் தரமில்லாத லோக்கல் உறைகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

கழிவு நீர் ஓடுவதற்கு முறையான வாட்டமும்  வைக்கப்படவில்லை. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செய்வதால் வருங்காலத்தில் பொதுமக்கள் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த வார்டு கவுன்சிலரும், நகராட்சி நிர்வாகமும் புரிந்து செயல்பட வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Friday 8 November 2013

கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் ஆபத்தான மரக் கிளைகள் அதிரடியாக அகற்றம் - துரித நடவடிக்கை எடுத்த கவுன்சிலருக்கு நன்றி !

கீழக்கரை சின்னகடை தெரு பகுதியில்  (முத்தலிபு மாமா அரிசிக் கடை அருகாமையில்) நிற்கும் மரத்தின் கிளை, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் உரசி செல்வதால், மின் கம்பத்தில் (மின் கம்ப எண் : 18/29) நகராட்சியால் பொருத்தப்பட்டு இருக்கும் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகி வந்தது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடையும் (FUSE) ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாகியது. இது சம்பந்தமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி  வெளியிடப்பட்டது.





                      நேற்று வரை.....                                                            இன்று....

இது குறித்து நாம் நேற்று வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இந்நிலையில் இன்று 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்களின் முயற்சியில் மரக் கிளைகள் வெட்டி அகற்றபட்டதோடு, தெருவிளக்கும் பழுது இல்லாமல் இரவில் ஒளி உமிழ்வதற்கு  வழிவகை செய்யப்பட்டது. 



முழுமையாக அகற்றப்பட்ட மரக் கிளைகள் 

இது குறித்து இந்த மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் சகோதரர். முஹம்மது ஹுசைன் அவர்கள் கூறும் போது 

"இந்த பகுதியில் ஆபத்தான நிலையில் மரக்கிளைகள், மின்சார வயரில் உரசி அடிக்கடி பிரச்சனை எழுந்து வந்தது. கடந்து சில தினங்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலைதளத்தில், புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு இன்று மரக்கிளைகள் அகற்றப்பட்டு விட்டது. 

இது உணமையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும் முகமாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்ட கீழை இளையவன் வலை தளத்திற்கும், உடனடியாக மரக் கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுத்த 18 வது வார்டு உறுப்பினர் முகைதீன் இபுறாஹீம் அவர்களுக்கும், எங்கள் தெரு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்கள் கூறும் போது 

"இங்கு பல்லாண்டு காலமாக மின்சார உயர் அழுத்த வயர்களின் மீது மரக் கிளைகள் உரசிக் கொண்டிருந்தது. இதனால் விரைந்து சரி செய்யக் கோரி இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இது சம்பந்தாக, கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி வெளியிட்டமைக்கு நன்றி. இது போன்ற செய்திகளால் துரிதமாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற முடிகிறது. இன்று மரக் கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. தெருவிளக்கும் முறையாக சரி செய்யப்பட்டு விட்டது.

இதே போல் சின்னக்கடைத் தெருவில் (கருவாட்டுக் கடை சமீபம் ) நிற்கும் பட்டுப் போன மரத்தையும் விரைவில் அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்தினரின் ஒத்துழைப்போடு முயற்சி மேற்கொள்கிறேன்." என்று தெரிவித்தார். 

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் - 10.11.2013 அன்று நடைபெறுகிறது !

கீழக்கரையில் நவம்பர் 10 ஆம் தேதி பயங்கராவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமனையினருடன் இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 10.11.2013 அன்று (ஞாயிற்றுக் கிழமை) கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடை பெற இருக்கிறது. இந்த முகாமினை INTJ மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் தலைமையில், கீழக்கரை நகர் மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் துவங்கி வைக்கிறார்.



இந்த முகாமில் தொற்றில்லா நோய்களை கண்டறியும் இலவச முகாமும் நடை பெறுகிறது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கபடுகிறது. இந்த நல்ல நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

Thursday 7 November 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு - பழைய குத்பா பள்ளி ஜமாஅத் !

கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ கச்சு மரைக்காயர் தெரு மர்ஹூம்.முஹம்மது அப்பாஸ், மர்ஹூமா 'பிள்ளைக்கனி' என்கிற உசேன் பீவி ஆகியோர்களின் மகனும், மர்ஹூம். நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், சுபைதா அவர்களின் கணவரும், ஜெமீமா, யாஸ்மீன், பக்ருதீன், முஹம்மது அமீன் ஆகியோர்களின் தகப்பனாரும், முஹம்மது ரபீக், பாதுசா மரிக்கா ஆகியோர்களின் மாமனாருமாகிய 'முஹம்மது காசீம்'அவர்கள்  நேற்று (07.11.2013) அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (07.11.2013) இரவு 8.30 மணியளவில், பழைய குத்பா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. மர்ஹூம். முஹம்மது காசீம் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : அமீன் - 9003433325

முன் அனுமதியின்றி பேஸ்புக், வலை தளங்களில் செய்தி வெளியிட வேண்டாம் - கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் முக்கிய அறிவிப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் நேற்று (06.11.2013) ஒரு முக்கிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை அறிவிப்பு பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜமாஅத் சம்பந்தப்பட்ட செய்திகளை, ஜமாத்தினரின் முன் அனுமதியின்றி, யாரும் சமூக வலை தளங்களிலோ, இணைய தளங்களிலோ வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


தகவல் : பரக்கத் அலி 

கீழக்கரையில் '105 வயது' மூத்த குடிமகனாரின் (வபாத்து) மரண செய்தி !

கீழக்கரை தெற்குத் தெரு பள்ளி ஜமாத்தை சேர்ந்த மூத்த உறுப்பினரும், ஜனாப். சேட் என்கிற சேகு சீனி இபுறாகீம் அவர்களின் மாமனாரும், மர்ஹூம்.செய்யது முஹம்மது ஆலீம், மர்ஹூம்.அஜ்மீர் பாதுசா, முஹம்மது ஹாஜர் பீவி, துரதுல் பைலா பீவி, ஜென்னத்துல் பிர்தவுஸ், முஹம்மது வருசை பாத்திமா ஆகியோர்களின் தகப்பனாருமாகிய 'அக்கலா மறைக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 105 வயதுடைய, முக்காணி கினா.முனா.செனா செய்யது முஹம்மது தம்பி அவர்கள் இன்று (07.11.2013) நண்பகல் சுமார் 12 மணியளவில், கீழக்கரை தெற்குத் தெருவில் உள்ள அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகி விட்டார்கள்.




 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).  

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (08.11.2013) காலை 9 மணியளவில், கீழக்கரை சேகப்பா மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூம்.அக்கலா மறைக்கா மாமா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


 படங்கள் : கீழக்கரை தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க வலை தளம்


தொடர்புக்கு :

ஜனாப். சேட் என்கிற சேகு சீனி இபுறாகீம் - 9994521812

கீழக்கரையில் கடந்த வருடம் நாம் வெளியிட்டிருந்த 110 வயதுடைய இளைஞரின் வபாத்து (மரண) செய்தியினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


Tuesday 5 November 2013

கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் மின்சார கம்பிகளில் உரசும் ஆபத்தான மரக் கிளைகளால் அடிக்கடி பழுதாகும் 'தெரு விளக்குகள்' - கவுன்சிலர் சிகாமணி கவனிப்பாரா ?

கீழக்கரை சின்னகடை தெருவில் இருந்து நடுத்தெரு செல்லும் பாதையில் (முத்தலிபு மாமா அரிசிக் கடை அருகாமையில்) நிற்கும் மரத்தின் கிளை, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் உரசி செல்வதால், மின் கம்பத்தில் (மின் கம்ப எண் : 18/29) நகராட்சியால் பொருத்தப்பட்டு இருக்கும் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடை (FUSE) ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போது மின்சாரம் தடைபடும் என்று தெரியாததால், இங்கு வசிக்கும் பொதுமக்கள் இரவு வந்து விட்டால் மெழுகுவர்த்தி சகிதம் மின்தடையை எதிர் நோக்கி இருக்கின்றனர். 



இதே போல் 18 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சின்னக்கடை தெரு கருவாட்டுக்கடை அருகாமையில், எந்நேரமும் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் பட்டுப் போன மரத்தில் இருந்து முறிந்து விழும் நிலையில் அதன் கிளைகள் பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.  அதுவும் முறிந்து விழ நேர்ந்தால் உயர் அழுத்த மின்சார வயர்கள் மீது தான் விழும். தற்போது கீழக்கரையில் மழை பெய்து வருவதால், மகத்துவமிக்க மனித உயிர்களுக்கு, மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.  


இது குறித்து நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இது குறித்து இந்த மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் சகோதரர். முஹம்மது ஹுசைன் அவர்கள் நம்மிடையே பேசும் போது 

"இந்த பகுதியில் உள்ள மரத்தில் இருந்து செல்லும் கிளைகள் மின் கம்பிகளை உரசி செல்வதால், இரவு நேரங்களில் திடீர் திடீரெனெ வயர்கள் தீப்பிடித்து கருகுகிறது. 

மேலும் இதனால் வயர்கள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது. இது பெண்கள் அதிகம் புழங்கும் பாதை. வாரம் ஒரு முறை தெருவிளக்கில் பழுது ஏற்பட்டு விடுவதால், இந்த பகுதியில் இரவு ஆனதும், தெருவிளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாகி விடுகிறது.

இதனை உடனடியாக சீர் செய்யக் கோரி 18 வது வார்டு கவுன்சிலரிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் இன்னும் ஒரு நல்ல வழி பிறக்கவில்லை. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று வருத்துத்துடன் பேசினார். 

கீழக்கரையில் உயிர் பலி கேட்டு காத்திருக்கும் மரங்கள் குறித்த முந்தைய பதிவுகள்:



கீழக்கரை நகராட்சி.. இது போன்ற மரங்களை இனியும் வெட்டாமல் காலம் தாழ்த்துவது, பொதுமக்களின் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் விதமாகவே அமையும். இந்த அபாய மரங்களால் ஏதேனும் உயிர் சேதமோ, விபத்தோ ஏற்படுமாயின் அதற்கான தார்மீக பொறுப்பு முழுக்க நகராட்சி நிர்வாகத்தையே சாரும். 

Monday 4 November 2013

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி !

துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல் நிலைத் தேர்வை தமிழகம் முழுவதும் நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

சுற்றறிக்கை (தமிழில்)


சுற்றறிக்கை (ஆங்கிலத்தில்)


இந்நிலையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் எதிர் வரும் 06.11.2013 முதல் 22.11.2013 வரை நடை பெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தங்கள் பெயரை நாளை (05.11.2013) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அலைப் பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை கீழக்கரை பகுதி ஆர்வமுடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

கீழை இளையவன் வலை தள செய்தி எதிரொலி - சாலை தெருவில் குவிந்து கிடந்த அபாய கற்கள் உடனடியாக அகற்றம் !

கீழக்கரை சாலை தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும், கீழக்கரை நகராட்சியின் ஒப்பந்த பணிகள் நடைபெற்றது. அப்போது ஜேசிபி இயந்திரத்தால் சாலை உடைக்கப்பட்டு, அதன் கற்கள், தெரு முழுவதும் அலங்கோலமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலை தெரு பகுதி பெண்கள், பள்ளி சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில், பள்ளத்தில் சிக்கிய ஒரு குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் வேன் கவிழும் சூழல் ஏற்பட்டது.



இது குறித்து நாம் நேற்று வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இந்நிலையில் நாம் வெளியிட்டிருந்த செய்தியின் எதிரொலியாக இன்று காலை, இந்த பகுதியின் கவுன்சிலர் 12 வது வார்டு சித்தீக் அலி அவர்களின் துரித ஏற்பாட்டின் பேரில், நகராட்சியின் ஒத்துழைப்போடு, சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை அலங்கோலமாய் குவிந்து கிடந்த ஆபத்தான கற்குவியல்கள், அப்புறப்படுத்தப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட்டு வருகிறது. 


இது குறித்து நம்மிடையே பேசிய சாலை தெருவை சேர்ந்த சீனி ஆலீம் அவர்கள் கூறும் போது " இந்த பகுதியில் தோண்டி போட்ட கற்களால் சாலை தெரு மக்கள், நடக்க கூட முடியாமல் பெரும் துயரப்பட்டு வந்தனர். மேலும் இந்த பகுதியில் வரும் வாகனங்களும், இரு சக்கர வாகனம் ஓட்டி வருவோரும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இது  குறித்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும் முகமாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்ட கீழை இளையவன் வலை தளத்திற்கும், உடனடியாக வேலைகளை முடுக்கி விட்ட நகராட்சிக்கும், 12 வது வார்டு உறுப்பினர் சித்தீக் அலி அவர்களுக்கும், ஒப்பந்ததாரர் பழனிக்கும், சாலை தெரு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீழக்கரை நகராட்சிக்கு இன்றும் தொடரும் 'தீபாவளி விடுமுறை' - அதிகாரிகள் இல்லாததால் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் !

தமிழகம் முழுவதும் தீபாவளி விடுமுறையை மகிழ்வுடன் களித்த அரசு அலுவலர்கள், இன்று நேரம் காலத்துடன் அலுவலகங்களுக்கு வந்து (புதிய உற்சாகத்துடன்..!)  தங்கள் வேலைகளுக்கு திரும்பி பணியாற்றி வருகின்றனர். ஆனால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு மட்டும் இன்று (04.11.2013) திங்கள் கிழமையும் தீபாவளி விடுமுறை தொடர்கிறதா? என என்னும் அளவிற்கு, அலுவலர்கள் இல்லாமல் அலுவலகமே வெறிச்சோடி கிடக்கிறது.




ஹலோ ஹலோ.. நாங்கல்லாம் கலெக்டர் கூட மீட்டிங் லே இருக்கோம். ஓவர் ஓவர் 


இந்த  செய்தி வெளியிடும் நேரமான காலை  11.45 மணி வரைக்கும் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரோ, தலைமை அலுவலரோ, சுகாதார ஆய்வாளரோ காணக் கிடைக்காமல் பொதுமக்கள் தங்கள் மனுக்களுடன் அலைந்து திரிந்ததை காண முடிந்தது.

கீழ் மட்ட வரி வசூலிப்பாளர்கள் சிலரும், துப்புரவு பணியாளர்கள் சிலரும் மட்டுமே தென்பட்டனர். நகராட்சி அலுவலகத்திலுள்ள அலுவலர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தது.




இது குறித்து கடந்த ஆண்டு நாம் வெளியிட்ட பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.


'மக்களுக்காக உழைப்பதும் தீபாவளி தான்..', என தீபாவளி பண்டிகை தினத்திலும் கூட மக்கள் பணியாற்றிய எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட அரசு அலுவலர்களின் உன்னதமான சேவைக்கு மத்தியில், இது போன்ற வேலைகளை ஒ.பி. அடிக்கும் வஞ்சக செயல், பொதுமக்கள் மத்தியில் கடும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது. 

Sunday 3 November 2013

கீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கால் அவதியுறும் சாலை தெரு பொது மக்கள் - தோண்டி போட்ட கற்களால் தொடரும் ஆபத்து !

கீழக்கரை சாலை தெரு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் வேலைகளை 'அதிரடியாக' செய்தது. அப்போது ஜேசிபி இயந்திரத்தால் அவசர கோலத்தில் தோண்டப்பட்டதால், வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் குழாய்கள் சரமாரியாக உடைக்கப்பட்டதுடன், அங்கு தோண்டி வைக்கப்பட்ட கற்களாலும், குவித்து வைக்கப்பட்ட மண் குவியலாலும் பொதுமக்கள் நடந்து செல்ல கூட வழியின்றி தடுமாறினர். 



குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக மாறிப் போன சாலை தெரு பகுதியில் தற்போது வேலைகள் முடிவடைந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், நகராட்சியால் இந்த பகுதியில் தோண்டி வைக்கப்பட்டுள்ள கற்களும், மண்ணும் அள்ளப்படாமல் கை விடப்பட்டுள்ளது. 



தற்போது கீழக்கரை நகரில் மழை பெய்து வருவதால், இந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் எந்த பகுதியில் குழி இருக்கிறது ? எங்கு பள்ளம் இருக்கிறது ? என்று தெரியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள், தடுமாறி விழுந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று காலை, தண்ணீர் ஏற்றி சென்ற குட்டி யானை பள்ளத்தில் சிக்கி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாக இருந்தது. இறைவன் அருளால் நல்ல வேலையாக அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சாலை தெரு நண்பர்கள், வண்டியை பள்ளத்தில் இருந்து மீட்டு உதவினர். 


இது குறித்து சாலை தெருவை சேர்ந்த சீனி ஆலீம் அவர்கள் கூறும் போது "குழாய் பதிக்கிறோம் என்கிற பெயரில் சாலை தெருவை அலங்கோலப்படுத்தி விட்டு போய் விட்டனர். இதனால் பள்ளி சிறுவர்கள் முதல் பெண்மணிகள், முதியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வருகிறார்கள். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர், இங்கு தோண்டி வைத்திருக்கும் கற்களை அப்புறப்படுத்துவதொடு, உடனடியாக சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை புதிய சாலை அமைத்து தர வேண்டும்." என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

கீழக்கரையில் பலத்த இடியுடன் கூடிய மழை !

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (02.10.2103) இரவு 10 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியுள்ளது.   இறைவன் அருளால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக  கடும் வறட்சியில் சிக்கி தவித்து வந்த பொதுமக்கள் பெரிதும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டாலும், அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது. தொடர் மழை பொழிவின் காரணமாக தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்பதை காண முடிகிறது. இது போன்ற மழை நேரங்களில், பழைய கட்டிடங்களின்  சிலாப்புகளுக்கு கீழ் நிற்பதை தவிர்ப்பது நல்லது.

பட விளக்கம் : அடாது பெய்யும் மழைக்குள்ளும், குடை பிடித்து வந்து வீட்டிற்கு காய்கறி வாங்கி செல்லும் சிறுவன் (இடம் : சாத்தான் காய்கறிக் கடை, அத்தியிலை தெரு)