தேடல் தொடங்கியதே..

Saturday 18 May 2013

கீழக்கரை ரேசன் கடைகளில் ஐந்து மாதங்களாக பச்சரிசி போடாததால் பொதுமக்கள் அதிருப்தி - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கலெக்டருக்கு கடிதம் !


கீழக்கரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரை நகர் பகுதிகளில் 9 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் தமிழக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி, பயனடைந்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களாக இங்குள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி முறையாக விநியோகம் செய்யப்பட வில்லை என்று புகார் எழுந்துள்ளது. 


இது குறித்து ரேசன் கடை நிர்வாகிகளிடம் கேட்ட போது "பச்சரிசி கடந்த 5 மாத காலமாக அரசாங்க குடவுன்களில் இருப்பு இல்லாததால், ரேஷன் கடைகளுக்கு போதிய அளவு சப்ளை செய்யப்படவில்லை. பச்சரிசி கேட்டு வரும்  குடும்ப அட்டைதாரர்களை வேறு வழியின்றி திருப்பி அனுப்ப வேண்டிய நிலை உள்ளது." என்று தெரிவிக்கின்றனர். 

கீழக்கரை நகரை பொருத்தமட்டில், காலை மற்றும் இரவு வேளைகளில் இடியாப்பம், ஆப்பம், வெள்ளடை போன்றவைகள் முக்கிய உணவாக இருப்பதால், அதற்கு தேவையான பச்சரிசி கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் வெளியே கள்ள மார்கெட்டில் பச்சரிசி விற்பனை அமோகமாக நடை பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். (படம் : கீழக்கரை டைம்ஸ்)


இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் M.U.V.முஹைதீன் இபுறாகீம் அவர்கள்தங்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் சென்று கடந்த 13.05.2013 அன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளன்று நேரில் மனு செய்தனர். அந்த மனுவில் கீழக்கரை நகர் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நியாய விலைக் கடைகளில் பச்சரிசி வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

கீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் !


கீழக்கரை நகரின் மிக பிரதானமான பொழுது போக்காக, விடுமுறை தினங்களில் இருக்கும் நண்பர்களுக்கு, உள்ளூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பிக்னிக் செல்வது, தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. அது போன்று பிக்னிக் செல்பவர்களின் அதி முக்கிய ஸ்பெசலாக, பட்டை சோறு இருக்கிறது.



பனை ஓலைப் பட்டையில் கமகமக்கும் வாசத்தில், வசக்கிய மாட்டுக் கறியுடன், தாளிச்சா ஊற்றி பரிமாறப்படும் தேங்காய் சோறு சாப்பாடு, உண்பர்களின் பசியை போக்குவதுடன், மீண்டும் இது போன்று பட்டையில் சாப்பிடும் காலம் எப்போது வரும்.? என்று ஏங்கத் தூண்டுகிறது. இப்போது பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையில் இருக்கும் மாணவ மணிகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் உள்ளூர் பகுதிகளில் உள்ள தோட்டங்கள், பட்டை சோறு வாசனையால் களை கட்ட துவங்கி இருக்கிறது.



வருடம் ஒரு முறை வளைகுடா நாடுகளில் இருந்து விடுமுறையை சொந்தங்களுடன் கழிப்பதற்காக கீழக்கரைக்கு வரும் நண்பர்கள், மறக்காமல் ஒரு முறை தேர்ந்தெடுக்கும் பொழுது போக்காக பக்கீர் அப்பா தர்கா அருகில் இருக்கும் மூர் தோட்டமோ, செய்யது அப்பா தர்ஹா அருகில் இருக்கும் M.L.A. தோட்டமோ செங்கல் நீரோடையில் இருக்கும் மேலத் தெரு பெரியவர்களின் தோட்டமோ அல்லது  சாராம்மா தோட்டமோ இடம் பெற்று விடுகிறது.

இங்கு காலையிலேயே நண்பர்களுடனும், சொந்த பந்தங்களுடனும் செல்பவர்கள், அந்த தோட்டங்களில் இருக்கும் பெரிய நீர் தொட்டிகளில் குளிப்பதுடன், கடலிலும் ஒரு நீச்சலை போட்டு விட்டு, மதிய வேளையில் அகோரப் பசியுடன் அமரும் போது, அவர்களுக்கு பனை ஓலைப் பட்டை கைகளுக்கு எட்டுகிறது. 



பட்டை சோறை ஒரு பிடி பிடித்து விட்டு, இயற்கையின் அரவணைப்பில் தென்னந்தட்டிகளை விரித்து ஒரு குட்டி தூக்கத்தை போடும் நண்பர்கள், மன அழுத்தங்களை எல்லாம் நொடிப் பொழுதில் தொலைத்து விட்டு புத்துணர்வோடு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்புகின்றனர்.

இது குறித்து துபாய் ETA STAR STEEL நிறுவனத்தில் பணியாற்றும் கீழக்கரை நசீர் சுல்தான் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதி இருக்கும் கவிதை வரிகள் :

நாளெல்லாம் 
தட்டையில் சோறு உண்டோர்...
பட்டையில் சோறு உண்ண 
பக்கீரப்பா செல்வோம்..!

தலையில் ஈரம் சொட்டும் 
தலை துவட்டா குளியலுக்கு 
கடல் காற்றே மின் விசிறி...
கீழக்கரையின் 
பட்டை சோற்றுக்கு நான் 
பரம விசிறி..!

கடல் குளித்து 
மண்ணில் உருண்டு 
மணலை பூசி 
சிப்பி பொறுக்கி 
சிறு நண்டுடன் விளையாடி 
சட்டிக்கு அருகில் 
சாய்ந்து உட்கார்ந்து 
பட்டையில் இட்டதை 
பார்க்கும் போதே...
பசி பட்டையை கிளப்பும்.!

எப்படியும் 
பட்டையில் 
இறைச்சியுடன் தாளிச்சா 
கெட்டிதேங்காய் பாலில் 
கட்டியாய் கரைத்த புளியாணம் 
கட்டாயம் இருக்கும்...
கப கப என்ற காட்டு பசிக்கு 
கட்டாயம் இனிக்கும்..!

உண்டு களைத்து 
உறக்கம் மீறும் போது
கிடைக்கும் 'கட்டாங் காப்பி' 
களைப்பை விரட்டும் - மாலை 
கருக்கலில் ஊர் திரும்ப 
மறு வருட இடை வெளி 
நினைத்து மனசு வலிக்கும்.!?

(கீழை இளையவன் மறு மொழி: உங்கள் கவிதை வரிகளை படித்துக் கொண்டிருக்கும் போதே.. 'பட்டை சோறு' நினைப்பில் பசி பட்டையைக் கிளப்புகிறதே...)



இது குறித்து தின மலர் நாளிதழின்  மதுரை பதிப்பில் அக்கம் பக்கம் பகுதியில் இன்று (18.05.2013) கீழக்கரையின் பட்டை சோறு பற்றிய செய்திக் குறிப்பை மூத்த பத்திரிகையாளர். அருமை சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 

நன்றி : தின மலர் 'அக்கம் பக்கம்' 

என்ன நண்பர்களே... 
நாமும் ஒரு பட்டை சோறு பிக்னிக்கை போடலாமா ??

Thursday 16 May 2013

கீழக்கரை கடற்கரை பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1000 அபராதம் - நடவடிக்கை எடுக்க முனைந்திருக்கும் நகராட்சிக்கு பொது மக்கள் நன்றி !


கீழக்கரை நகரின் எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளில், மீண்டும் குப்பைகளையும், கோழிக் கழிவுகளையும், மனித மலங்களின் எச்சங்களையும் கொட்டி வருவதால், குப்பை பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த நகராட்சி நிர்வாகத்தின் மோசமான நிர்வாகத்தால் உருக்குலைந்து குப்பைகரையாகிப்  போயிருந்த கீழக்கரை நகரத்தை மீட்டெடுக்க சமூக அமைப்பினர்களும், பொதுநல சிந்தனையாளர்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

நன்றி : (படம் ) A.S.TRADERS, கீழக்கரை 

இந்நிலையில் கடந்த ஆண்டு கீழக்கரை கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதிக்கு திடீர் நேரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்கள் கடற்கரை பெட்ரோல் பங்க் பகுதியிலிருந்து கால் நடையாகவே துர் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல்,  குப்பைகள் குவிந்த கிடக்கும் பகுதியின் கடைசி எல்லை வரை சென்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டார். 

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி பார்க்க (கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்)

(கீழக்கரை கடற்கரை பகுதிகளில் சுகாதாரக் கேடு எதிரொலி - கலெக்டர் திடீர் ஆய்வு !)

இறுதியில் ஒரு வழியாக கீழக்கரை நகரின் கடற்கரை பகுதிகள் குப்பைகளின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்றது. இப்போது மீண்டும் பழைய நிலைக்கே மெல்ல மெல்ல  திரும்பி வருகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.



இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் சார்பாக கடந்த 09.05.2013 அன்று  கீழக்கரை நகராட்சி ஆணையர் அவர்களை நேரடியாக சந்தித்து, கடற்கரை குப்பை பிரச்னையை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் செய்யது இபுறாகீம், நகர் பொருளாளர் ஹாஜா அனீஸ், நகர் செயலாளர் பசீர் அஹமது, உறுப்பினர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்டோர் நகரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விசயங்களை முறையிட்டனர்.


இதன் எதிரொலியாக கீழக்கரை கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் இந்த பகுதியில் கட்டிட இடுபாடுகளின் மிச்சங்கள், சாக்கடை மண் மூடைகள், செங்கல், ஜல்லி போன்றவற்றை கொட்ட வரும் வாகனங்களை கண்காணித்து, பறிமுதல் செய்யப்படும் என்பதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கீழக்கரை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கீழக்கரையில் வபாத் (மரண) அறிவிப்பு !


கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ மர்ஹூம்.ஜனாப்.சேகு முஹம்மது அவர்களின் மகனும், ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஜனாப்.முஹம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும், ஜனாப்.பத்ருஸ் சமான்  அவர்களின் சகோதரருமான ஜனாப். 'பி.எஸ்.எம் உபைதுல்லா' அவ‌ர்க‌ள் இன்று (16.05.2013) அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

தற்போது அன்னாரின் ஜனாஸா சென்னையில் இருந்து கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருப்பதால், நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ஹூம். பி.எஸ்.எம் உபைதுல்லா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : 
ஜனாப். செய்யது அபு சாலிஹ் - 9944541789

Wednesday 15 May 2013

கீழக்கரையில் களை கட்டும் மாம்பழ விற்பனை - ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள் அவசியம் அறிய வேண்டிய விடயங்கள் !

மாம்பழ சீசன் துவங்கியதை அடுத்து கீழக்கரையில் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தங்கம் போல ஜொலிக்கும் வண்ணத்தில் இருக்கும் இந்த பழங்களை தெருக்களில் கொண்டு வரும் வியாபாரிகள் கிலோ 75 முதல் 90 ரூபாய் வரை விற்கின்றனர். முக்கனிகளில் முத்தான கனியான இந்த மாம்பழங்களை பார்க்கும் போதே, அதன் தித்திக்கும் சுவையை நினைத்து நாவில் நீர் சுரக்கிறது. விற்பனைக்கு வந்திருக்கும் பல்வேறு வகையான மாம்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கி செல்கின்றனர்.



தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு போதிய மா விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் போதிய மழை இல்லாத போதும் இந்த ஆண்டு அதிகம் மா விளைச்சல் ஏற்பட்டுள்ளது.  அதே நேரம் செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் உண்போருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து கோகா அஹமது தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர், அஸ்வான் சங்கத்தின் செயலாளர் 'மஸ்தான்' என்கிற அஹமது  இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் தற்போது பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சிறிய கடைக்காரர்களும், கூடைகளில் வைத்து பழம் விற்பவர்களும் மாம் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் சல்பர், கார்பைடு, பிளானோசிக்ஸ்' உள்ளிட்ட ரசாயன கற்கள், ஆசிட் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிட்டால் குடல் புண், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதோடு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும், எனவே, மாம்பழங்களை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன், தரமான மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது" என்று தெரிவித்தார். 



இதுகுறித்து குற்றாலம் வல்லம் பகுதியில் இருந்து கீழக்கரைக்கு மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் மசூது அவர்கள் கூறும் போது "இறைவன் அருளால் இந்த ஆண்டு மாம்பழம் சீசன் தொடங்கி அதிகம் பழம் வரத்தொடங்கி உள்ள நிலையில் சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம் பசந்த், குண்டு என்கிற அல்போன்சா, நடுச்சாலை, செந்தூரா, அமர்பாலி உள்பட 10-க்கும் மேற்பட்ட ரக பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது கீழக்கரைக்கு இமாம் பசந்த், அல்போன்சா உள்ளிட்ட  வகை மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். மொத்தம் 60 வகை மாம்பழங்கள் உள்ளது. இதில் 10 ரக பழங்கள் தான் வந்துள்ளது. இந்த மாம்பழ சீசன் இன்னும் 3 மாதத்தற்கு இருக்கும். இன்னும் மற்ற ரக பழங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

கல் வைத்து பழுக்கும் 'விஷ மாம்பழத்தை' கண்டு பிடிப்பது எப்படி ?

செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்கிற செய்தியை நாம் தினப் பத்திரிகைகளில் வாசிப்பதுண்டு. இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. 



மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித் தோற்றமே பழம் போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகை மூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும் போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம் போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை. ஆகவே இந்த மாம்பழ சீசனில் மிகுந்த கவனத்துடன் பொதுமக்கள்  மாம்பழங்களை வாங்கிஉண்ண வேண்டும்.


  • Hassan Ali மாம்பழ சீசன் வந்தாலே இந்த பாயை கீழக்கரையில் பார்க்கலாம் கீழக்கரைதான் வந்தவர்களை வாழவைக்கும் அதுனாலத்தான் வருடம் தவறாமல் நம்பிக்கையுடன் கீழக்கரைக்கு போனால் விற்றுவிடலாம் என்று வருகிறார் அவர் நம்பிக்கை வீணாகாது

கீழ‌க்க‌ரையில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை - கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை !


கீழக்கரையில் சமீப காலமாக வெறி நாய்களின் பெருக்கம் அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. கீழக்கரை நகருக்குள் உள்ள பெரும்பாலான தெருக்களிலும், சாலைகளிலும் ஏராள‌மான‌ சொறி நாய்களும் சுற்றித் திரிந்து வந்தன. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடப்பதற்கே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர் 



இதனிடையே கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, கீழக்கரை நகரில் பெருகி வரும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும்,  சொறி நாய்களின் அட்டகாசத்திலிருந்து பொது மக்களை காப்பாற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை நகர் நல இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பி இருந்தனர். 


இது குறித்து நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்த செய்தி 


கீழக்கரையில் சுற்றித் திரியும் சொறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மாவட்ட ஆட்சியருக்கு மனு !


இதையடுத்து, கீழக்கரை நகராட்சியின் சுகாதாரத் துறையினரின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில், கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அதிக‌ரித்து வ‌ரும் நாய்களை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவைக‌ளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு, கீழக்கரை நகருக்குள் சுற்றி திரிந்த 50க்கும் மேற்ப‌ட்ட, நாய்களை ந‌க‌ராட்சி துப்புரவுப் ப‌ணியாள‌ர்க‌ள் உத‌வியுட‌ன்‌ நாய்களை பிடித்தனர். 




இது குறித்து கீழக்கரை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.திண்ணாயிர மூர்த்தி அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகரில் பெருகி வரும் நாய்களால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாய்களுக்கும் மயக்க ஊசி போட்டு கருத்தடை குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனும் நாய்களுக்கு வெறி தன்மை குறையும் ஊசியும் போடப்பட்டது. இதனால் கீழக்கரையில் நாய்களின் பெருக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். 


FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் முப்பது வருடங்களுக்கு முன்னால் எல்லாம், நகராட்சி சார்பாக நாய் பிடிக்க வருபவர்கள் கைகளில் ஒரு கம்பி வளையமும், ஒரு உருட்டுக் கட்டையும் வைத்திருப்பார்கள். வளையத்தை வைத்து நாயின் கழுத்தில் மாட்டிய உடன், உருட்டுக் கட்டையை வைத்து நாயின் தலையில் 'நச்' என்று ஒரே அடி. தலையில் ரத்தம் சொட்ட செத்துப் போகும். பின்னர் இது சாகடிக்கும் மொத்த நாய்களையும், ஏதாவது ஒரு தோட்ட முதலாளியிடம் விற்று, மரங்களுக்கு உரமாக்கி விடுவார்கள்.

    ஆனால் இப்போது அப்படி எல்லாம் செய்து விட முடியாது. பளு கிராஸ் அங்கத்தினர்கள் குதறி விடுவார்கள். வெறி நாயாக இருந்தாலும் சரி, சொறி நாயாக இருந்தாலும் சரி, அதற்கு குடும்ப கட்டுப்பாடு எல்லாம் செய்து, ஊட்ட சத்து ஊசிகள் போட்டு மீண்டும் நகருக்குள்ளேயே விட்டு விட வேண்டுமாம்.. இந்த நாய்கள் ஒரு வேலை யாரையாவது கடித்தால் சாக மாட்டார்களாம். கடி பட்ட காயத்திற்கு மட்டும் சாதாரண சிகிச்சை பெற்றால் போதுமாம்.

    எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர், பிடித்து சிகிச்சை அளித்த நாய்களையும், அதன் தாய்களையும், பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் நகருக்குள் விடாமல் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குள் விடுவது நல்லது. முன்னொரு காலத்தில் நகராட்சி, இவ்வாறு பிடிக்கும் நாய்கள் மொத்தத்தையும், படகுகளில் ஏற்றி எதேனும் தனி தீவுகளில் விட்டு வந்தார்கள் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
    2 hours ago · Unlike · 3
  • Fouz Ameen உங்க தகவலுக்கு நன்றி காக்கா
    2 hours ago · Unlike · 1
    • Hassan Ali தெருக்களில் குப்பை கூளங்கள் அதிகமாக கிடப்பதினால்தான் நாய்கள் கூட்டம் கூட்டமாக இரையை தேடிவருகிறது அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில்தான் நாய்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது தினமும் குப்பையை அகற்றினாலே போதும் நாய்களின் நடமாட்டம் குறைவும் அதுக்கு போய் குடும்ப கட்டுப்பாடுலாம் தேவையா

Tuesday 14 May 2013

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, விரைந்து அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் முயற்சி !


கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் (கடை எண் : 6983) கடையால், இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கீழக்கரை வாழ் பெண்களும், குழந்தைகளும், எல்லா நேரங்களிலும் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் அச்சப்படும் வகையில் அமைந்திருக்கும், இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்கள் பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கீழக்கரை மக்களை நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி, நேற்று (13.05.2013) திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

இந்த மனுவை பெற்றுக் கொண்ட, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இராஜ கிருபாகரன் அவர்கள், இந்த மனு மீது விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு பரிந்துரை செய்தார்.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் A.M.S.தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இந்த டாஸ்மாக் கடையின் அருகில் தான் மின்சாரக் கட்டணம் செலுத்தும் மையம் செயல் படுகிறது. தினமும் பெண்களும், முதியவர்களும் இங்கு வந்து போகக் கூடிய சூழல் இருக்கிறது. இந்த கடையின் முன்னால் எப்போதும் போதையில் குடிமகன்களின் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கீழக்கரை சார் பதிவாளர் அலுவலக கட்டிடமும் இதன் அருகாமையில் உள்ள மருதன் தோப்பு பகுதியில் தான் வரப் போவதாகவும்  தெரிய வருகிறது. ஆகவே எந்த சூழ் நிலையிலும், இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை நாம் தொடர அனுமதிக்கக் கூடாது." என்று சமுதாய அக்கறையுடன் தெரிவித்தார்.

கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ் சாலையில் குளிர் பானம் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து - சாலையெங்கும் குளிர்பானம் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு !

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில், தேவிப் பட்டணத்திலிருந்து, கீழக்கரை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, விற்பனை செய்வதற்காக  குளிர்பானம் ஏற்றி வந்த லாரி, நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் இருந்து 200 மீட்டர் முன்னதாக உள்ள பாலையாறு அருகே வரும் போது, நண்பகல் 12.30 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 



இறைவன் அருளால் அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டுனர் உட்பட யாருக்கும் எந்த பதிப்பும் இல்லை என தெரிய  வருகிறது. இந்த விபத்துக்கு காரணம் வாகன டயர் வெடித்ததால் ஏற்பட்டதாக சிலரும், நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் போதை ஏற்றிய ஒரு குடிமகன் குறுக்கே வந்ததால் ஏற்பட்டதாக வேறு சிலரும் தெரிவிக்கின்றனர்.



இந்த விபத்தினால் சாலையில் உடைந்து நொறுங்கிய குளிர் பான பாட்டில்களால், சாலையெங்கும் குளிர்பானம் ஆறாக ஓடியது அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் பலர், மீட்பு பணியில் ஈடுபட்டு உதவினர். இந்த விபத்து நடந்ததை அறிந்த கீழக்கரை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.  



கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் கடந்த மாதம் நடை பெற்ற விபத்து குறித்த செய்திக்கு இங்கு சொடுக்கவும். 

கீழக்கரையில் 'டாஸ்மாக்' மது பானக்கடை முன்பு விபத்து - இருவர் படு காயம் - 'குடிமகன்' போதையில் சாலையை கடந்ததால் விபரீதம் !