தேடல் தொடங்கியதே..

Saturday 7 July 2012

கீழக்கரையில் 100 க்கு மேற்ப்பட்டோர் பயன் அடைந்த இலவச கண் பரிசோதனை முகாம் !

நம் கீழக்கரை நகரில், இராமேஸ்வரம் சங்கர நேத்ராலயா இலவச கண் மருத்துவமனையின் மாபெரும் IOL லென்ஸ் பொருத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (07.07.2012) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறப்பாக நடை பெற்றது. இந்த முகாமை ரோட்டரி கிளப் ஆப் கீழக்கரை, சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS) ஆகியோர் இணைந்து நடத்தினர். 


இந்த இலவச முகாம் நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார்கள். கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர். ஜனாப். J.சாதிக் அவர்கள், கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் A.அலாவுதீன் அவர்கள், ஜனாபா. Dr.A.அல் அம்ரா அவர்கள், கீழக்கரை காவல் ஆய்வாளர் திரு.V.M.இளங்கோவன் ஆகியோர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு இருந்தனர்.


இது குறித்து முகாமின் மருத்துவக் குழுவின் தலைவர். திரு.சச்சின் மால்வியா அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகரின் நான்கு பொது நல அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்த இலவச முகாமின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் பயன் பெற்ற இந்த முகாமில், கண் புரைக்கான அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒன்பது பேர்களை எங்களுடன் அழைத்து செல்கிறோம்.  


இவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பும் வரை உள்ள அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். இது போன்ற இலவச முகாம்களை, அனைத்து சமுதாய ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் வண்ணம் நடத்த அனைத்து பொது நல அமைப்புகளும் முன் வர வேண்டும்" என்று மிகுந்த அக்கறையுடன் தெரிவித்தார்.

முன்னதாக சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் தங்கம் இராதா கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப். செய்யது இபுராஹீம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு ) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர் (KMSS ஆலோசகர்) A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் நன்றியுரை வழங்கினார். இந்த முகாமை KMSS சங்கத்தின் செயலாளர். இஸ்மாயில் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.  

கீழக்கரையில் நடைபெறும் குரூப் 4 தேர்வு - பள்ளிகள், கல்லூரிகளில் நிரம்பி வழியும் தேர்வர்கள் !

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 10,718 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு இ‌ன்று காலை 10 ம‌ணி‌க்கு தொட‌ங்‌கியது. 10,793 காலி பணி இடங்களுக்கு 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் போட்டிப் போடுகிறார்கள்.

மக்தூமியா உயர் நிலைப்  பள்ளி, கீழக்கரை
 
அதே போல் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் நிர்வாக அதிகாரி (கிரேடு-4) பதவியில் 75 பணி இடங்களை நிரப்பிட குருப்-8 தேர்வு இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 2.30 ம‌ணி‌க்கு ம‌ணி‌க்கு தொட‌ங்கு‌கிறது. தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 4,309 தேர்வுக்கூடங்களில் நட‌ந்து வரு‌‌கிறது. பகல் 1 மணி வரை குரூப்-4 தேர்வும், பிற்பகல் மாலை 5.30 மணி வரை குரூப்-8 தேர்வும் நடைபெறு‌கிறது.

கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி
நம் கீழக்கரை நகரிலும் காலை முதலே, கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கீழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி,  கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி, இஸ்லாமியா மேட்ரிகுலேசன் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி, மக்தூமியா உயர் நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 1000 க்கும் மேற்பட்டவர்கள்  குரூப்-4 தேர்வினை எழுதிக் கொண்டிருக்கின்றனர். 

FILE PHOTO
முதல்முறையாக அனைத்து தேர்வுக்கூடங்களிலும் நடைபெறும் தேர்வு வீடியோ மூலம் பதிவு செய்யப்ப‌ட்டு வருகிறது. இதில் கீழக்கரையை சேர்ந்த தேர்வர்கள், முதன் முறையாக அதிகளவில் பங்கேற்று தேர்வு எழுதுவது, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தேர்வினை எதிர் கொண்டிருக்கும் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday 6 July 2012

கீழக்கரையில் நாளை (07.07.2012) நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாம் !

இராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் இராமேஸ்வரம் சங்கர நேத்ராலயா இலவச கண் மருத்துவமனையின் மாபெரும் IOL லென்ஸ் பொருத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (07.07.2012) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் நடை பெற உள்ளது. இந்த முகாமை ரோட்டரி கிளப் ஆப் கீழக்கரை, சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.




இது குறித்து இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர். சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு தங்கம் இராதாகிருஸ்ணன் அவர்கள் கூறும் போது "இந்த முகாமில் கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண் பிரச்சனைகள், போன்றவைகள் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் கண் புரை நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது. 


கண் புரை ஆபரேசன் செய்ய மருத்துவமனைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவுகள், உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை, சொட்டு மருந்து அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. கண் பாதிப்புள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

கீழக்கரையை சேர்ந்தவருக்கு சவூதி அரேபியாவில் கோமா நிலை - இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகோள் !

கீழக்கரை தம்பி நெய்னாப் பிள்ளை தெருவைச் சேர்ந்த, மர்ஹூம் ஜனாப். செய்யது அப்துல் காதர், மர்ஹூம். ஜனாபா. செய்யது ராவியத்தும்மால் ஆகியோர்களின் மகனார் ஜனாப். முஹம்மது மௌலா தம்பி அவர்கள் கடந்த வாரம்  உடல்நிலை குறைவு காரணமாக தற்போது சவூதி அரேபியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்து வருகிறார்.

இவர்  30 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியா நாட்டிலுள்ள ரியாத் நகருக்கு அருகில் சொந்தமாக, சிறிய அளவில் கடை வைத்திருக்கிறார். தற்போது மிகுந்த சிரமத்துடன் கோமாவில் இருக்கும் இவர்களுக்கு, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இறைஞ்சுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

யா அல்லாஹ்,  இவ்வுலகத்தில் சிரமமில்லாத வாழ்க்கையை இவர்களுக்கு தந்தருள்வாயாக.. தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக... மறுமை வாழ்க்கையை வெற்றியான வாழ்வாக ஆக்கி அருள் புரிவாயாக... ஆமீன் !

Tuesday 3 July 2012

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்ட துவங்கும். தற்போது கொஞ்சம் தாமதமாக சீசன் துவங்கி இருக்கிறது. குற்றாலம் நகரமெங்கும் சாரல் மழை பெய்து, இதமான சீதோஷ்ணம் நிலவுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேரளாவில் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அங்கும் கூட சாரல் மழையே பெய்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சீசன் துவங்கியதுமே, கீழக்கரையிலிருந்து, குற்றாலம் நோக்கி அதிகளவில் நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களும் சென்று தென் பொதிகையின் மூலிகை நீரில் மகிழ்ச்சி குளியல் போடுவது வழக்கம். தற்போது துவங்கியுள்ள சீசனால், கிழக்கரைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கீழக்கரையிலிருந்து, பலர் வாகனங்களில், இப்பொழுதே குற்றாலம் நோக்கி  படையெடுக்க ஆராம்பித்துள்ளனர். 



 
வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரை நண்பர்கள் கூட பெரும்பாலும், இந்த குற்றாலம் சீசன் நேரங்களில் தான் விடுப்பில் வருவதுண்டு. கீழக்கரையிலிருந்து, குற்றாலம் செல்வதற்காக, மகேந்திரா வேன், டாட்டா சுமோ உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூர் வாகனங்களும் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. குற்றாலத்தில் ஹோட்டல் அறைகளும், தொலை  பேசி வாயிலாக முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 




இது குறித்து நண்பர்களுடன் குற்றாலம் சென்றிருக்கும் கீழக்கரை பணியக்காரத் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது "இன்று காலை முதலே குற்றாலத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான தென்றல் காற்றும் வீசுகிறது. தொடர்ந்து சாரல் மலை பெய்து வருவதால் உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வாக இருக்கிறது. பெரும்பாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது." என்றும் மகிழ்ச்சியுடன் கூறினர்.




குற்றால அருவிகளில், அதிக கூட்ட நெரிசலில் குளிப்பதை தவிர்க்க,சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில், மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், சீசன் ஆகஸ்டு மதத்தின் இறுதி வரை தொடர வாய்ப்புள்ளது. 

தென் பொதிகையின் அழகாய் இரசிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகள், குற்றாலம் அருவிகள் தவிர, மறக்காமல் கேரளா பாடரில் உள்ள, கும்பா உருட்டி அருவி, பாலருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல மறக்க வேண்டாம்.

கீழக்கரையில் டயாலிசிஸ் நோயாளிக்கு 'A POSITIVE' இரத்தம் தேவை ! தொடர்ந்து உதவ வேண்டுகோள் !

கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த, 43 வயதுள்ள ஆபிதா பேகம் என்ற பெண்மணி, சிறுநீரக கோளாரால் (கிட்னி பெயிலியர்) பாத்திக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தொடர்ந்து A'  POSITIVE இரத்த வகை தேவைப்படுகிறது.
 

கடுமையான் நோய் பாதிப்பினால், வாரம் ஒரு முறை இரத்தம் ஏற்ற வேண்டிய நிலையில், இவர் அவதிப்பட்டு வருவதால், உடனடியாக இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :            அப்துல் ஹக்கீம் - 7639992839
                               முஹம்மது ஜாஷர் - 9942454207

           "இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்" 

Monday 2 July 2012

கீழக்கரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 'பனை ஓலை பட்டைகள்' - மீண்டும் திரும்பும் நினைவலைகள் !

கீழக்கரையில் குப்பைகளை அகற்றி, அழிப்பது சம்பந்தமான முயற்சிகளும், குப்பை கிடங்கு குறித்த பிரச்சனைகளும் நாளுக்கு நாள் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது. அதே நேரத்தில் பொது மக்களும், குப்பைகளை கையாள வேண்டிய முறைகளையும், பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை குறைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும.



இந்த சாராம்சத்தின் அடிப்படையில், மீன் கடைகளுக்கு செல்லும் பொது மக்களில் சிலர், தற்போது பனை  ஓலைகளால் செய்யப்பட்ட பட்டைகளை எடுத்து செல்ல துவங்கி இருக்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. 


இது குறித்து புது கிழக்குத் தெருவை சேர்ந்த ரமீஸ் அவர்கள் கூறும் போது "இந்த ஓலை பட்டையில் மீன் வாங்கி செல்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்டையின் விலை 25 ரூபாய் தான். இதனை கழுவி சுத்தப்படுத்தி இரண்டு மாதங்கள் வரை கூட பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள் மாதத்திற்கு 50 ரூபாய்க்கு வாங்குவதை விட, இந்த பட்டைகள் தான் இலாபமானது. அனைவரும் இந்த ஓலை பட்டைகளை வாங்கி உபயோகப்படுத்த முன் வர வேண்டும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து நடுத் தெருவை சேர்ந்த ஹாமீது இபுராஹீம் அவர்கள் கூறும் போது "இது போன்று ஓலை பட்டைகளில் மீன் வாங்கும் போது, பழைய காலத்தின் நினைவுகளை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டம் வரை, நம் கீழக்கரையில் இந்த பட்டைகளின் பயன்பாடு, அனைவரிடமும் இருந்தது. பின்னர் பிளாஸ்டிக் பைகளின் வரவால், மெல்ல மெல்ல இதன் பயன்பாடு முற்றிலும் ஒழிந்து விட்டது. பொது மக்கள் மீண்டும் பயன்படுத்த துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது." என்று பழைய நினைவலைகளை அசை போட்டவாறு தெரிவித்தார். 



முதலில் இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஒழிந்தாலே, ஓரளவுக்கு மக்காத குப்பைகளின் பிரச்சனை முடிவுக்கு வரும். நம் நகரில் தேங்கும் குப்பைகளில் 40 % க்கும் மேல் இந்த பிளாஸ்டிக் பைகள் தான் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, எளிதில் மண்ணில் மக்கும், இந்த பனை ஓலை பட்டைகள் போன்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் இல்லாத கீழக்கரையை உருவாக்கும் முயற்சிகளில் வெற்றியடைய முடியும்.

கீழக்கரை டைம்ஸின் புதிய பரிணாமமாக 'கீழக்கரை டைம்ஸ்.காம்' துவக்கம் - குவியும் வாழ்த்துக்கள் !

நம் கீழக்கரையின் இளவல்களும், வளைகுடாக்களில் இளமையை தொலைத்தும் கூட, இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் வயதில் மூத்தவர்களும், சொந்த மண்ணின் சொந்தங்களை அத்தனையும் பிரிந்து, சோகங்களை சுமந்தவர்களாக, பிழைப்புக்காக கடல் கடந்து, தன் வாழ்நாளின் காலங்களை எல்லாம்  குடும்பங்களுக்காய் கரைத்துக் கொன்றிருக்கிறார்கள்.

துபாயில் நடை பெற்ற துவக்க விழா நிகழ்ச்சி




அவ்வாறு வெளி நாடுகளில் வசிக்கும் நம் கீழக்கரை நண்பர்களும், அன்பர்களும், நம் சொந்தங்களும், நமது சொந்த மண்ணின் செய்திகளை, தெரிந்து கொள்ள ஏதுவாக, எவ்வித பிரதிபலனும் பாராமல், இது வரை கீழக்கரை டைம்ஸ் வலை பதிவகம் செய்து வந்த பணி மகத்தானது.

பிறந்த மண்ணை பிரிந்து, இன்று உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் நண்பர்கள் அனைவரும், பல வேலை பளுக்களின் மன உளைச்சல்களுக்கு மத்தியிலும், உடனுக்குடன் நமதூர் செய்திகளை அறிவதால், மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அது மிகையாகாது. 




இறைவனுடைய மாபெரும் கருணையால், இது வரை கீழ‌க்க‌ரை டைம்ஸ் பிளாக் http://keelakaraitimes.blogspot.in அமோக‌ வ‌ர‌வேற்பை பெற்று, குறுகிய காலத்தில் அனைவரின் பேராதரவுடன், 2 ல‌ட்ச‌த்து 50 ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ ஹிட்க‌ளை பெற்றுள்ள‌து குறிப்பிடத்தக்கது. த‌ற்போது இந்த செய்திகளின் வீரியம் கொஞ்சமும் குறையாமல், 'கீழ‌க்க‌ரை டைம்ஸ்.காம்' www.keelakaraitimes.com என்று முழுமையான‌ வ‌லைத‌ள‌மாக‌ பரிணாமித்துள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று முன் தினம் துபாயில் சிறப்பாக நடைபெற்றது.



 
இந்த நல்ல தருணத்திலே, கீழ‌க்க‌ரை டைம்ஸ்.காமின் ஆணி வேராக திகழும், கீழ‌க்க‌ரை டைம்ஸ்சின் நிர்வாகிகள் ஜனாப். அஹமது குத்புதீன் ராஜா அவர்களுக்கும், ஜனாப். ஹ‌மீது யாசீன் அவர்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, மென் மேலும் தங்கள் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.