தேடல் தொடங்கியதே..

Saturday 12 May 2012

கீழ‌க்கரை காவல்நிலையத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு நாள் !

கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று (12.05.2012) மாலை 4.30 மணியளவில் பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடை பெற்றது. இதில் காவ‌ல்துறை சார்பில் டி.ஐ.ஜி ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ன் அவர்கள் மற்றும் எஸ்.பி காளிராஜ் மகேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் ஏராளாமான‌ பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு கோரிக்கை ம‌னுக்கள் அளித்த‌ன‌ர்.


கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது, கீழ‌க்க‌ரையில் புறக்காவ‌ல் நிலைய‌ம் அமைப்ப‌து, போக்குவ‌ர‌த்து காவலர்களை நிய‌மிப்ப‌து, அனுமதிக்கப்படாத வேளைகளில் மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதை தடுப்பது, ஏர்வாடியில் அடையாள‌ம் தெரியாத‌ ந‌ப‌ர்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை க‌ண்காணிப்ப‌து, க‌ள் விற்ப‌னையை த‌டுப்ப‌து.



இலஞ்சம் பெரும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, 'நோ பார்க்கிங்' பகுதிகளில் அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி பொதும‌க்க‌ள் சார்பில் 42 ம‌னுக்க‌ள் காவ‌ல்துறையின‌ரிட‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌து.




இந்த நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என‌ காவ‌ல் துறை உய‌ர் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கீழக்கரை நகருக்குள் சாக்கடை ஆறுகளை கடக்க 'படகு போக்குவரத்து' - பொது மக்கள் வேண்டுகோள் !

கீழக்கரை நகரின், இரண்டு முக்கிய பகுதிகளில் காலம் காலமாக... சாக்கடை கழிவு நீரில் கால் நனைக்காமல் கீழக்கரை வாசிகள் கரையை கடப்பது என்பது குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது.

என்ன கொடுமை சார் இது !  (இடம் : கொந்தக் கருணை அப்பா பள்ளி அருகில்)
பகுதி 1 : கீழக்கரை 21 வது வார்டுப் பகுதிக்குட்பட்ட கொந்தக் கருணை அப்பா தொழுகைப் பள்ளி மற்றும் வள்ளல் சீதக்காதி பிரதான சாலையை இணைக்கும் இணைப்பு சாலை

பகுதி 2 : கீழக்கரை 1 வது வார்டுப் பகுதியை சேர்ந்த பருத்திக்கார தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் புதிய பேருந்து நிலையம், புதிய மீன் கடை (சந்தை கடை) பகுதியை இணைக்கும் இணைப்பு சாலை

என்ன கொடுமை சார் இது !  (இடம் : தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி அருகில்)
 

இந்த இரண்டு பகுதிகளிலும், சாக்கடை நீர் ஆறாக பெருக்கெடுத்து, மடை திறந்த வெள்ளமென ஓடி மணம் கமழ்ந்து வருகிறது !?.. இதனால் இந்த பகுதியின் கரைகளை கடக்க முடியாமல் முதியவர்களும், பெண்மணிகளும், பள்ளிக் குழந்தைகளும், தொழுகைக்கு செல்பவர்களும் தட்டுத் தடுமாறி வருகின்றனர். இந்த சாக்கடை பள்ளங்களுக்குள், நடை நீச்சல் அனுபவம் இல்லாத பலர் விழுந்து 'சாக்கடை குளியல்' போட்டுச் செல்வது அன்றாட நிகழ்வாகி வருகிறது.


இது குறித்து அந்த பகுதி பொது மக்களிடம் கேட்ட போது "நாங்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை? இந்த வழிந்தோடும் சாக்கடையில்  எங்கள் வாழ்க்கை கழிந்து வருகிறது. இப்படி ஆண்டாண்டு காலமாய் தேங்கும் சாக்கடையால் மலேரியா, யானைக்கால் மட்டுமல்ல.. விரைவில் சாவும் எங்களுக்கு வந்து விடும். 

எனக்கு யானைக்கால் வருமோ !  (இடம் : கொந்தக் கருணை அப்பா பள்ளி அருகில்)
'நல்லா படம் எடுத்து போடுங்க.. நீங்க மகாராசனா இருப்பிய..' ஏதாவது நல்லது நடக்கட்டும். முடிஞ்சா இந்த கீழக்கரையில்  இக்கரையிலிருந்து அக்கறைக்கு போக காலையிலும் மாலையிலும் ஒரு இரண்டு மணி நேரமாவது படகு போக்குவரத்து துவங்கினால் தேவலை" என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் சாக்கடையை கடந்தபடியே கவனத்துடன் பேசினார். 


இது குறித்து 21 வது வார்டு கவுன்சிலர் ஜெயப் பிரகாஷ் அவர்கள் கூறும் போது "இந்த சாக்கடை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க கோரி நகராட்சி அலுவலர்கள் முதல் மாவட்ட கலெக்டர் வரை மனுக்கள் கொடுத்தாகி விட்டது. இது வரை எந்த ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளும் இல்லை. இந்தப் பகுதியில் முறைப்படி வாறுகால்கள் விரைவில் அமைத்துக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாத போது, பொது மக்களை ஒன்று திரட்டி, மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 


கீழக்கரை நகரின் எல்லை பகுதிகளாக இருக்கும்  21 வது மற்றும் 1 வது வார்டு பகுதிகளில் சாக்கடை கழிவு நீரில் உருவாகும் கொலை வெறி கொசுக்களும், தண்ணீர் புழுக்களும் நகரின் மையப் பகுதிகளுக்கு, நம் வீட்டின் முற்றத்திற்கு வரவா போகிறது ? என்று எகத்தாளம் பேசுவதை விட்டு விட்டு.. சற்று சுற்றுப் புறத்தை சீர் படுத்துவோம்.. வரும் முன் காப்போம் !

Thursday 10 May 2012

கீழக்கரை - இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டிருக்கும் 5000 நிழல் தரும் மரக்கன்றுகள் !

கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வன்னார்துறை (காஞ்சிரங்குடி) பகுதியிலிருந்து, சாலையின் இரு புறங்களிலும் ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும், ஒரு மரம் வீதம் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 


எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயலாற்றப் பட்டிருக்கும் இந்த நல்ல திட்டம், தமிழக சாலை போக்குவரத்து துறையினரின் வழிகாட்டுதல் படி, தமிழக வனத் துறையினர்  செய்துள்ளனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து  மரக்கன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு, தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட தட்டிகளை கொண்டு பாதுகாப்பு தடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து வனத் துறை நிர்வாக ஆய்வாளர். பாரி அவர்கள் கூறுகையில் "கிழக்கு கடற்கரை சாலை அமைக்க முற்படும் போது பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. அதற்கு பகரமாக, அதை விட இரண்டு மடங்கு மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிழல் தரும் புங்கை, வேம்பு, கொன்றை, இலுப்பை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

 
 ஓராண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி, இது வரை குளத்தூர் முதல் காட்டுமாவடி வரை 27000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது.

நடுவது மட்டுமல்லாமல், இன்னும் ஓராண்டுகளுக்கு, நீர் விட்டு பராமரிப்பதும் எங்களுடைய வேலை தான்.

அது வரை தொடர்ந்து இந்த பகுதியில் தான் ஆய்வுகள் மேற்கொண்டு வருவோம்" என்று கணீரென்று தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேனிலைப் பள்ளியின் சார்பில், மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் முகமாக, இலவச மரக் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி நிர்வாகத்தினரால்,  இராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

விழிப்புணர்வு கட் அவுட் (இடம் : ரோமன் சர்ச் பகுதி, இராமநாதபுரம்)

'அசோகர் ஆட்சி காலத்தில் சாலையோரங்களில் மரங்களை நட்டு வளர்த்தார்' என்று சிறு வயதில் பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் தற்போது நிஜமாகவே சாலையோரங்களில், நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்க முனைந்திருக்கும் தமிழ் நாடு சாலை போக்குவரத்து துறையினரின் இந்த ஆக்கப்பூர்வ செயல் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Wednesday 9 May 2012

TNPSC நடத்தும் 10718 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு - கீழக்கரை பகுதி மக்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 30 ஆண்டுகாலமாக இளநிலை உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன.


குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., அன்று தன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். (விரிவான விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும்) இத்தேர்வுகளுக்கு, மே 28ம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்.நடராஜ் அவர்கள் (தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)

எல்லாமே "ஆன்-லைன்' தான்: தேர்வர்கள் அனைவரும், "ஆன்-லைன்' மூலமே தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கென, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 805 இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைத்துள்ளது. இங்கு சென்று, இணையதளம் வழியாக, தேர்வுக்கு பெயரை பதிவு செய்யலாம்.

TNPSC அதிகாரப்பூர்வ இணையதள முகவரி (தேர்வுக்கு விண்ணப்பிக்க )
www.tnpsc.gov.in 


தேர்வு கட்டணம்: குரூப் - 4 தேர்வர்கள், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும், செயல் அலுவலர் தேர்வை எழுதுபவர்கள், விண்ணப்பக் கட்டணத்துடன், தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலட்சக்கணக்கானோர் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எழுத இருக்கும் இந்த தேர்வினை, நம் பகுதி ஆர்வமுடையவர்கள், தகுதியுடையவர்கள் அனைவரும், கடைசி நேர பரபரப்பினைத் தவிர்க்க, விரைந்து விண்ணப்பிக்குமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.