தேடல் தொடங்கியதே..

Saturday 10 November 2012

கீழக்கரை நகரின் 'சுகாதார தாகம்' தீர்க்க வடக்குத் தெரு அறக்கட்டளையினரின் புதிய முயற்சி !


நம் இந்திய தேசத்தில் கடந்த நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்களிடம் இருந்தும் அடிமை தளையிலிருந்தும் விடுபட வேண்டி அன்றைக்கு வாழ்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உள்ளத்தில் 'சுதந்திர தாகம்' ஒன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக விடுதலையும் பெற்றோம், துன்பங்களையும் தொலைத்தோம். ஆனால் அறிவியல் தொழில் நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இமய சாதனைகளால் எழுந்து நிற்கும் நம் இனிய இந்திய தேசத்தின் மூலை  முடுக்கெல்லாம் அங்கிங்கெனாதபடி, எங்கும்... முந்தைய சுதந்திர தாகத்தை காட்டிலும், அசுர வேகத்தில் புதிதாக, 'சுகாதார தாகம்' ஒன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நம் கீழக்கரை மட்டும் என்ன விதி விலக்கா ??



நன்றி : கீழக்கரை டைம்ஸ் (படம்) 
தற்போது நம் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதார சீர்கேட்டிற்கு யார் காரணம் ? நகராட்சி நிர்வாகமா ? சுகாதாரத் துறையினரா ? பொது மக்களா ? என்று பட்டி மன்றம் நடத்துவதை காட்டிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும். "காரணங்களை சொல்லி வீழ்வதைக் காட்டிலும், நல்ல காரியங்களை செய்து வாழ்வது தான் முக்கியம்". நம்முடைய நல வாழ்விற்கு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் தாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் சுற்றுப் புற சுகாதாரத்தை பேணுவதன் மூலம், கொலை வெறி கொசுக்களை ஒழிப்பதோடு  மட்டுமல்லாமல், டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, போன்று நீளும் நோய்களின் பட்டியலையும் தகர்க்க முடியும். 

                                                                       ஆக்கம் : கீழை இளையவன் 

கீழக்கரையில் பூட்டியே கிடக்கும் 25 சதவீத வீடுகளில் இருந்து உருவாகும் டெங்கு கொசுக்களாலும், 75 சதவீதம், கீழக்கரை நகரின் பிரதானப் பகுதிகளில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில், துப்புரவு செய்யப்படாமல் தேங்கியே கிடக்கும் குப்பைகளில் உருவாகும் டெங்கு கொசுக்களாலும், உயிர்கொல்லி  டெங்கு மிக வேகமாக பரவி வருகிறது. கீழக்கரையில்  5 வயதிற்கு குறைவான குழந்தைகள், 10 வயதிற்கு குறைவான சிறுவர், சிறுமிகள் டெங்குவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரத்திலும், மதுரையிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள் எல்லாம் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பல முன்னணி மருத்துவமனைகள் 'HOUSE FULL' அறிவிப்புப் பலகைகளை வைத்து விட்டன. இராமநாதபுரத்தில் உள்ள இரத்தப் பரிசோதனை நிலையங்கள் எல்லாம், 'ஒரு டெங்கு டெஸ்ட் எடுத்தால், ஒரு மலேரியா டெஸ்ட் இலவசம்' என்ற புதிய  ஸ்கீம்களை அறிவித்த வண்ணம் உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் 

இதையெல்லாம் கருத்தில் கொண்டு. கீழக்கரை நகரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக S.S.முஹம்மது யூசுப் - K.M.S.ரசீனா பீவி அறக்கட்டளையின் சார்பாக, வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபை மூலமாக, 18, 19, 20, 21 வது வார்டு பகுதியில் குவியும் குப்பைகளை அகற்றுவதற்காக, 'குட்டி யானை' வாகனம் ஒன்றினையும், புகை மருந்து அடிப்பதற்கான இயந்திரம் ஒன்றினையும் அர்பணித்துள்ளனர். அதற்கான விழா கடந்த வியாழக்கிழமை (08.11.2012) அன்று சிறப்பாக நடை பெற்றது. இதனை முன்னுதாரணமாக கொண்டு அந்தந்த பகுதியில் இருக்கும் அறக்கட்டளையினர்கள், சமூக நல அமைப்பினர்கள் முன் வந்து, இது போன்ற அறப்  பணிகளை செய்ய வேண்டும் என்பதும், நகராட்சி நிர்வாகமும், தங்கள் துப்புரவுப் பணிகளை தொய்வில்லாமல் செய்ய வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.