தேடல் தொடங்கியதே..

Saturday 4 May 2013

கீழக்கரையில் 'தீரன் திப்பு சுல்தான்' நினைவு தினம் அனுசரிப்பு - கீழக்கரை வரலாற்று ஆய்வுக் குழு ஏற்பாடு !


கீழக்கரையில் இந்திய விடுதலைப் போரின் முன்னோடியான 'தீரன் திப்பு சுல்தானின்' 213 ஆம் நினைவு நாள் (04.05.2013) இன்று, கீழக்கரை வரலாற்று ஆய்வுக் குழுவினரால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வரலாற்று ஆய்வுக் குழு அமைப்பாளர். அ.மு.சுல்த்தான், செயலாளர் சீனி முஹம்மது தம்பி, நிர்வாகி முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தீரன் திப்பு சுல்தான் அவர்கள் கி.பி.1753 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாளன்று, கருநாடக தேவஹல்லி எனும் இடத்தில் அரசர். ஹைதர் அலி, இளவரசி பஹ்ருன்னிசா ஆகியோர்களுக்கு மகனாகப் பிறந்தார். 



இந்திய வரலாற்றில் தனக்கெனத் தன்னிகரில்லாத் தனிப் பெரும் பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்டோரில் 'மைசூர் வேங்கை' தீரன் திப்பு சுல்தான் முதன்மையானவர். இவர் மனித நேயமும், மத நல்லிணக்க செயற்பாடுகளையும் கொண்டவர். கி.பி. 1782 டிசம்பர் 26 ஆம் நாள் மைசூரின் ஆட்சியில் பொறுப்பை ஏற்ற போது, அவரின் ஆட்சி எல்லை, வடக்கே கிருஷ்ணா ஆறும், தெற்கே திருவான்கூரும், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்கே அரபிக் கடலும் இருந்தன. அவரின் தலை நகரம் சீரங்கப் பட்டினம்.

அ.மு.சுல்த்தான் வர்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியம் 



இளம் வயதிலேயே போர்ப் பயிற்சி பெற்ற திப்பு சுல்தான் அன்றைய காலக் கட்டத்தில், இந்தியா முழுமையையும் அடிமைப்படுத்த முற்பட்ட ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆங்கிலேயரின் என்னத்தை முன் கூட்டியே யூகித்த திப்பு சுல்தான் ஆங்கிலேயரின் திட்டங்களை முறியடிக்க உள் நாட்டு சக்திகளையும், வெளி நாட்டுத் துணையையும் ஒருங்குபடுத்தி, அன்னியரான, ஏகாதிபத்திய இன வெறி, மொழி வெறி கொண்ட ஆங்கிலேயரின் ஆதிக்கம், இந்திய தேசத்தின் எந்த மூலையிலும் கோலோச்சி விடக் கூடாது என்று முழு மூச்சுடன் போரிட்டார். 

மைசூரில் நான்காவது போரில் வலிமை வாய்ந்த ஆங்கிலேயப் படை மைசூரின் மீது வெறி கொண்டு பாய்ந்த போது, ஆங்கிலேயருக்கு அடி பணிய மறுத்த திப்பு சுல்தான், இறுதி வரை போரிட்டார். இறுதியில் கயவர்களின் காட்டி கொடுக்கும் தன்மையால், கி.பி.1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாளன்று, இதே நாளில் வீர மரணம் அடைந்தார். 

தீரன் திப்பு சுல்தான் அவர்கள் தன் ஆட்சி காலங்களில் பல தீர்க்கமான திட்டங்களை செயற்படுத்தினார். அவற்றுள் சில :

  • பூரண மது விலக்கை அமல் படுத்தினார். 
  • ஜமீன்தாரி முறையை ஒழித்து, உழவர்களுக்கு விளை நிலங்களை பகிர்ந்தளித்தார்.
  • சாமுண்டி மலைக் கோவிலில் நடந்து வந்த நர பலியை தடுத்து நிறுத்தினார்.
  • அடிமை வணிகத்தினை தடுத்தார்.
  • மங்களூரில் கப்பல் கட்டும் தொழிற்சாலையை நிறுவினார். 
  • கிருஷ்ன ராஜ சாகர் அணையைத் தொடங்கினார். 
  • நியாய விலைக் கடைகளைத் திறந்தார். 
  • ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், முதன் முறையாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். 
  • ஓமன் தலை நகரம் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை, இறக்குமதி செய்து, பட்டு உற்பத்தி செய்ய வழி கோலினார். 
  • ஒடுக்கப்பட்ட பெண்டிர், மேலாடை அணிய வலி வகை செய்தார். 
  • சமய பாகுபாடுகள் இன்றி, இந்து கோவில்கள், கிருத்தவ மாதா கோவில்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் உதவிகள் செய்தார். 
  • மேல் கோட்டை நாராயண சாமி கோவிலுக்கு 12 யானைகளைப் பரிசளித்தார். 
  • சிருங்கேரி சாரதா மடத்திற்கு, பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார் 
  • புலி வெண்ட்லாவில் உள்ளா தேவாலயத்தைப் புதுப்பிக்க உதவி செய்தார். 
  • இஸ்லாமியர்களுக்கென பல பள்ளிவாசல்களை கட்டினார்.

"இந்திய திரு நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் உயிர் நீத்த தியாகிகளில் திப்பு சுல்த்தானுக்கு நிகராக எவரும் கிடையாது. வருமான இழப்புகளைப் பற்றி கவலைப்படாது, பூரண மது விலக்கை அமுல்படுத்திய திப்பு சுல்தான்.. ஓர் உன்னதமான மனிதர்."

-- காந்தியடிகள் -- 


இரத்தம் சிந்திய உடலோடும், ஆங்கிலேயர்களின் இரத்தம் குடித்த வாளோடும், நாட்டிற்காக தன்னுயிரை ஈந்த தியாகி மைசூர் வேங்கை தீரன் திப்பு சுல்தானின் தியாகங்களையும், மனித நேயம், வீரம், விவேகம், யூகம், அனைத்து சமய மக்களையும் அரவணைக்கும் பண்பு என அனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே பெற்ற திப்பு சுலதானின் தனித்துவத்தையும் இன் நன்னாளில் நினைவு கூறக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

வரலாற்றுத் தகவல் :
அ.மு.சுல்த்தான் - அமைப்பாளர், வரலாற்று ஆய்வுக் குழு, கீழக்கரை 
அலைப் பேசி எண் : 98655 69595

  • Keelai Ilayyavan இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரை வித்திட்ட மாவீரர் திப்பு சுல்தான் குறித்து இன்றைய தினம் நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும்.


    மைசூர் மன்னன் ஹைதர் அலியின் மகனான மைசூர்புலி (Mysore Tiger) என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானால் (Tipu Sultan, 1750 – 1799) தயாரிக்கப்பட்டிருந்த உலகின் முதல் உலோக ராக்கெட் (Knows as Mysorean Rocket) கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

    20 சென்டி மீட்டர் நீளமும் 8 சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்புக்குழல்களுக்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு நான்கு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டப்பட்டு ஏவப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் (1800 AD) உலகிலேயே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திப்புவினுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    திப்புவிடம் போரிட்டு வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் திப்புவின் அண்டை அரசர்கலான திருவிதாங்கூர் சமஸ்தானம் (Kindom of Travancore), ஹைதராபாத் நிஜாம் (Nizam of Hydrabad), மராத்தியர்கள் (Maratha Empire) ஆகியோர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு லஞ்சம் என்ற சதிவலையை பின்னி திப்புவின் அமைச்சரான மிர் சாதிக்கை (Mir Sadiq) துரோகியாக மாற்றியது, இதன் பின்னரே திப்புவை ஆங்கிலேயர்களால் வெல்லமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 30 April 2013

கீழக்கரையில் சுற்றித் திரியும் சொறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மாவட்ட ஆட்சியருக்கு மனு !


கீழக்கரையில் இப்போது வெறி நாய்கள், சொறி நாய்கள்  தொல்லை பெரும் பிரச்சினையாக, பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. கீழக்கரை நகர் மக்கள் தொகை பெருக்கத்திலும், நகரின் எல்லை விரிவாக்க வளர்ச்சியிலும் உச்சம் அடைந்து வருகிறது. அதே நேரம் வெறி நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும், தெருக்களில் தளர் நடை போடும் முதியவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை நகர் நல இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பி உள்ளனர். 


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். ஜனாப். பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்போர் அதை முறையாக பராமரித்து தடுப்பூசி போட்டு வெளியில் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். இருப்பினும் பெரும்பாலானோர் நாங்களும் 'நாய் வளர்க்கிறோம்' என்று சொல்லி கொண்டு அதை தெருவில் விட்டு விடுகிறார்கள். 
கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கலெக்டருக்கு அனுப்பி இருக்கும் மனு 

இவ்வாறு தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து, நாக்கில் எச்சில் வடிந்து சொட்ட சொட்ட, பொதுமக்களை கடித்துக் குதற, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து பொதுமக்களை காக்கும் நல் எண்ணத்தோடு கலெக்டருக்கு மனு அனுப்பி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.       


கீழக்கரையின் புற நகர் பகுதிகளான புதுக் கிழக்குத் தெரு, 500 பிளாட், வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பள்ளி பகுதி, மேலத் தெரு போன்ற தெருக்களில், மூர்க்கமாக அலையும் சொறி நாய்களின் பயத்தால் இரவில் மக்கள் நடமாட அச்சம் கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலையை காண முடிகிறது. இந்த வெறி நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இரவில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. என்று புற நகர் பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பல நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்திக் செல்வதால் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக இருக்கிறது.

Monday 29 April 2013

கீழக்கரையில் 'டாஸ்மாக்' மது பானக்கடை முன்பு விபத்து - இருவர் படு காயம் - 'குடிமகன்' போதையில் சாலையை கடந்ததால் விபரீதம் !


கீழக்கரை - இராமநாதபுரம்  நெடுஞ்சாலை வழியாக, இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் கேரளாவில் இருந்து, 15 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் பயணித்து வந்த  மினி சொகுசு பேருந்து, வண்ணாந்துறை மின்சார வாரியம் அருகே, 'நெடுஞ்சாலை  டாஸ்மாக்' மதுபானக் கடையின் வாசல் நெருக்கத்தில் வரும்  போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த இருவர் படு காயங்களுடன், இராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.




இது குறித்து சம்பவ இடத்தில், இருந்த விபத்துக்குள்ளான பயணிகளிடம் விசாரித்த போது " எங்கள் வாகனத்தை, மிக மிதமான வேகத்தில் தான் ஓட்டுனர் ஒட்டி வந்தார். (மின்சார வாரியம் அருகே, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை  சுட்டிக் காட்டி) இந்த சாராயக் கடையில் இருந்து போதையில் தடுமாறி வந்த, ஒரு மூத்த வயதை மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நபரால தான், இந்த விபத்து ஏற்பட்டது.

அந்த குடிமகன் மீது மோதாமல் இருப்பதற்காகத் தான், ஓட்டுனர் வண்டியை வேகமாக திருப்பியதில் இந்த கோர சம்பவம் நடை பெற்று விட்டது. எங்களுடன் பயணித்த அத்தனை பேருக்கும் ஆங்காங்கே பலமான மற்றும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது."  என்று மலையாளத்தில்  கண்ணீருடன் தெரிவித்தார்.


தற்போது அடிபட்ட நபர்களின் நிலைமை என்ன என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தினால் கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன், கீழக்கரை காவல் துறையினர் விரைந்து வந்து, தங்கள் கடமைகளை செய்தனர். மேலும் கீழக்கரை பொதுமக்களும் திரண்டு வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் உதவிகளும் செய்தனர்.





இது குறித்து நாம் சென்ற வாரம் வெளியிட்டிருந்த செய்தி 

கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!


http://keelaiilayyavan.blogspot.in/2013/04/blog-post_21.html
(முந்தைய செய்தியை படிக்க இங்கே 'கிளிக்'கவும்.)

விபத்து நடந்த நேரம் கூட, கடையை திறந்து,  கல்லா கட்டிக் கொண்டிருக்கும் , 'கண் கொள்ளாக் காட்சி' !



இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் கூறும்  போது "இந்த மோசமான வளைவு உள்ள இடத்தில் 'வாரத்திற்கு ஒரு விபத்து' என, சிறிய, பெரிய அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை, இந்த பகுதியில் நடைபெறும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மது அருந்துபவர்களால், தொடர்ந்து பேராபத்துக்கள் நிகழ்ந்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

  • Keelai Ilayyavan தற்போது வெளியாகிருக்கும் தகவலின் படி, தேசிய மற்றும் மாநில நெடுச்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் மது பானக் கடைகளை, மூடுவது குறித்து ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு, தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற 
    உத்தரவை ஏற்று, கடையை அகற்ற "இன்னும் எங்களுக்கு 
    ஐந்து மாத கால அவகாசம் வேண்டும்" என மனு செய்திருப்பதன் மூலம் தமிழக அரசு, பொது மக்களுக்கு என்ன சேதியை சொல்ல வருகிறது என்று தெரியவில்லை. 

    இருப்பினும் உச்ச நீதி மன்ற நீதிவான்கள், இந்த மனுவை ஏற்று கொள்வார்களா ? அல்லது தள்ளுபடி செய்வார்களா ?? என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்குள்ளாக அனு தினமும், குடிமகன்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் எத்தனை பேர் மாண்டு போவார்களோ என்ற அச்சம் மட்டும் பொதுமக்கள மத்தியில் நிலை கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
    21 hours ago · Like · 1

கீழக்கரையில் விற்பனைக்காக குவிந்திருக்கும் 'பலாப் பழங்கள்' - பலாப் பிரியர்கள் மகிழ்ச்சி !


கீழக்கரையில் தற்போது கோடை வெயில், வாட்டி எடுக்க துவங்கியுள்ள நிலையில், பொது மக்கள் கோடை காலத்துக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களை மாற்ற துவங்கியுள்ளனர். ஆகேவே சூடான ஆகாரங்களை தவிர்த்து, குளிர்ந்த நீர் சத்துள்ள பழங்களையும், நன்னாரி சர்பத், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, நுங்கு சர்பத்  அதிகம் விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். ஆண்டு தோறும் கேரளா, கடலூர் பண்ருட்டி பகுதிகளில் மார்ச் மாதங்களில் சீசன் துவங்கி ஜூன் மாதம் வரை பலாப் பழ விற்பனை களை கட்டும். 


இந்நிலையில் கீழக்கரைக்கு, நா வறட்சியை போக்கும் தர்பூசணி, பலாப் பழங்களும் விற்பனைக்கு அதிகம் வரத் துவங்கியுள்ளது. இந்த பலாப் பழங்களின் விற்பனை தற்போது, கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக் கடை அருகில்) களை கட்ட துவங்கியுள்ளது. கீழக்கரைக்கு விற்பனைக்கு வரும் பலாப் பழங்களை பொறுத்த வரையில், வெளி மாவட்டங்களான புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், பழங்களை விட கேரள மாநில பகுதியிலிருந்து பலாப் பழங்கள் அதிகமாக வருகிறது. 

தற்போது, பலாப் பழ சீஸன் துவங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து பலாப் பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. இது போன்ற மொத்த விற்பனை கடைகளில் இருந்து கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகளில் பழங்களை விற்பனை செய்கின்றனர்.



இது குறித்து கோட்டயம் பகுதியில் இருந்து வந்திருக்கும் பலாப் பழ வியாபாரி ஷாஜி அவர்கள் கூறும் போது "ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில், கேரளாவில் இருந்து பலாப் பழங்களை, கீழக்கரை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்.  ஒரு பலாப் பழம், அதன் உருவ அளவிற்கேற்ப  ரூ.80 முதல் ரூ.230 வரை விற்பனை நடை பெற்று கொண்டிருக்கிறது. இறைவன் அருளால் தற்போது விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் வசிக்கும் 'வீனஸ்' பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் கூறும் போது "கோடை நா வறட்சியை சற்று போக்கும் என்பதோடு, மற்ற பழங்களை விட விலையும் மலிவாக கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலாப் பழங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். புதுக்கோட்டை, பண்ருட்டி பகுதிகளில் விளைந்த பலாப் பழங்களின் நாவிற்கினிய ருசி போலவே, இந்த கேரளப் பழங்களுக்கும் உண்டு. கீழக்கரை நகரில் நீண்ட காலத்திற்குப் பிறகு, பலாப் பழங்களை பார்த்த மகிழ்ச்சியில், பலாப் பிரியர்கள் விரும்பி வாங்குகின்றனர்." என்று சுவைக்க தூண்டும் விதமாக பேசினார். 



முக்கனிகளில் முக்கிய கனியாகக் கருதப்படும், இந்த பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்  சிறந்தது. இந்த பலாக்காயை வாங்கி வந்து, கூட்டு செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய்க்கு உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் உண்டு.ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

Sunday 28 April 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றிய தாளாளருக்கு 'பிரிவு உபசார விழா' - ஜமாத்தார்கள், சமூக நல அமைப்பினர்கள், பங்கேற்பு !


கீழக்கரை கிழக்குத் தெரு, கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல், நேற்றைய தேதி வரை, ஏறத்தாழ 18 ஆண்டு காலங்கள், தொடர்ச்சியாக பள்ளி தாளாளராக, சிறப்பாக பணியாற்றிய  ஜனாப்.செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று (27.04.2013) சனிக் கிழமை மாலை 4.30 மணியளவில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. 



இந்த சிறப்பான விழாவிற்கு கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் சாகிபு காக்கா, கல்விக் குழு பொறுப்பாளர் ஜனாப். சுஐபு காக்கா,  கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் பொறுப்பாளர். ஜனாப்.முஹைதீன் தம்பி காக்கா, கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர். முனைவர்.சாதிக் காக்கா, சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தாளாளர். ஜனாப்.ஜமாலுதீன் காக்கா, பள்ளியின் புதிய தாளாளர் ஜனாப். ஜவஹர் சாதிக் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.



இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின்   செயலாளர் ஜனாப். பசீர் அகமது,  நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு. தங்கம் இராதா கிருஷ்ணன், பள்ளியின் ஆசிரிய பெருந்தகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், நிர்வாகி திரு. விஜயன், மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் சதர்ன் இரயில் வேயில், தமிழ் நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.  மேலும் சதர்ன் இரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலத்தில் விபத்துகளே இல்லாமல் மகத்தான சேவை புரிந்தமைக்காக  இரயில்வே அமைச்சரின் கைகளால் விருது, ரொக்கப் பரிசு, பாராட்டிதழ் போன்றவை பெற்று இருக்கிறார். தற்போது இவர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, இளமை துடிப்போடு, எந்நேரமும்  'எறும்பு போல்' சுறுசுறுப்பாகவும்,   நேரம் தவறாமையை தன் வாழ்வில் கடை பிடித்து வருகிறார்.

கீழக்கரை நகரின் சமூக நலனில் அக்கறை கொண்ட  இந்த 86 வயதை கடந்த  இளைஞர், தன் ஓய்வு நேரம் முழுவதும் பொது நல பணிகளுக்காக தன்னை அர்பணித்து வருகிறார். இப்போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவராக தலைமையேற்று சேவை ஆற்றி வருகிறார். ஏற்கனவே நுகர்வோர்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரையில் நுகர்வோர் சேவை இயக்கம் ஒன்றை உருவாக்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இறைவன் அருளால், இளைஞர். ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலங்கள், நீண்ட ஆயுளுடனும், சரீர சுகத்துடனும் வாழ்ந்து, அவர்களின் சமூகப் பணிகள் செழித்தோங்க, கீழை இளையவன் வலை தளம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.