தேடல் தொடங்கியதே..

Saturday 8 September 2012

கீழக்கரையில் காலை நேரங்களில் கழிவறையாகும் கலங்கரை விளக்கம் பகுதி - பொதுக் கழிப்பறை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரையில் பழைய கஸ்டம்ஸ் கட்டிடம் பகுதியிலிருந்து 18 வாலிபர்கள் தர்ஹா பகுதி வரையுள்ள கடற்கரை ஓரங்களில் அதி காலை 5.30 மணியிலிருந்து காலை 8 மணி வரை கட்டணமில்லா கழிவறை பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்த நேரங்களில் கலங்கரை விளக்கம் பகுதியில் நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்கள், மனம் நொந்து, மூக்கையும், கண்களையும் பொத்தியவர்களாக ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகி விடுகின்றனர். இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் முடித்து செல்பவர்களால், இந்த பகுதியில் சகிக்க முடியாத துர்நாற்றத்துடன், மிக மோசமான சுகாதாரக் கேடு நிலவுகிறது.



இது குறித்து நடைபயிற்சிக்கு வந்திருந்த கிழக்குத் தெருவைச் சேர்ந்த அகமது ஜமால் அவர்கள் கூறும் போது "நான் இன்று தான் இந்த பகுதியில் நடைபயிற்சிக்காகவும், அதி காலை நேரத்தில் கடல் அழகாய் இரசிப்பதற்காகவும் வந்தேன். ஆனால் இங்கு காணும் காட்சிகளும், வீசும் துர்நாற்றமும் தாங்க முடியாததால்,'இன்றோடு இப்படம் கடைசி'... அவ்வளவு அருவருப்பாக, மோசமாக காட்சியளிக்கிறது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அரை நிர்வாணமாக குந்தி அமர்ந்திருக்கிறார்கள்" என்று தன் மனக் குமுறலை கொட்டினார்.

இதுக்கு கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லையா ???

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் நிர்வாகி ஜனாப்.சீனி முஹம்மது சேட் அவர்கள் கூறும் போது "நானும் எனது நண்பரும் தினமும் இந்த பகுதிக்கு வாக்கிங் வருகிறோம். முதலில் துர் நாற்றம் தாங்க முடியாமல் தலை கிறு கிறுத்துப் போனது. இப்போது போகப் போக பழகி விட்டது. புதிதாக் யாரும் வந்து, இந்த செயலை செய்யவில்லை. வழக்கமாக வருபவர்கள் தான் இங்கு 'டிசைன் டிசைனா' கழித்துச் செல்கிறார்கள். இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. வேறு வழியின்றி தான் இங்கு வருகிறார்கள். இந்த 'சுதந்திர மனிதர்களுக்கு' நகராட்சியில் இருந்து பொதுக் கழிப்பிட வசதி உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்." என்று வேண்டுகோள் விடுத்தார்.


இது குறித்து இந்த பகுதியில், ஹாயாக காலை கடனை முடித்து விட்டு திரும்பிய ஒருவரிடம் பேசிய போது கீழக்கரை நகரில் பெரும்பாலான வீடுகளில் தற்போது கழிப்பறை வசதிகள் உள்ளது. இருப்பினும் பல தெருக்களில்  மிகச் சிறிய பரப்பளவுள்ள வீடுகளில், அதிக எண்ணிகையிலான குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர். காலை நேரங்களில் ஒரே நேரத்தில், அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதால், கடற்கரை போன்ற இடங்களை நாட வேண்டியுள்ளது.  பொது கழிப்பறை வசதி இருந்திருந்தால், நாங்கள் ஏன் இங்கு வருகிறோம் ?" என்று கேள்வி எழுப்பியவராக நடையை கட்டினார்.


என்ன செய்யலாம் ? ஒரு  ஆலோசனை சொல்லுங்கப்பா...




கீழக்கரை ஜின்னா தெருவில் மட்டுமே காணப்படும் மகளீருக்கான பொதுக் கழிப்பறையும் பல வருடங்களாக உபயோகமில்லாமல் சுகாதார சீர்கேடுடன் பூட்டியே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூடுதல் கழிப்பறைகளும் கட்டப்பட்டு, இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. டிரான்ஸ்பார்மர் பின்னணியில் இந்த கழிவறை அமைந்திருப்பதால், பொது மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக 'புதிய கழிவறைகள்' கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பொதுமக்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்காமல், கடற்கரையில் காலை கடன் முடிக்க வருபவர்களை குறை கூறி பயனொன்றுமில்லை..


5 comments:

  1. பன் முகம் கொண்ட தாங்கள், நகரின் அவல நிலமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு நில்லாது அது சமபந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாகவும் செய்திகளை பதிவு செய்வது அனைவருக்கும் ஏற்புடைய பாராட்டுக்குரிய விஷயமாகும்..

    இத்துடன் கடமை முடிந்து விட்டது என வெருமனே இருந்து விடாமல் அவல நிலைமையை சீர் களைய சம்பந்தப்பட்ட அதிகார வர்கத்திற்கு தகவலை எத்த வைப்பதோடு அதை நடவடிக்கைக்கு உள்ளாகும் வரை தொடர் முய்ற்சியில் ஈடுபடுவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இது முகஸ்துதிக்காக சொல்லப்படுவதில்லை..அடி மனதிலிருந்து வரும் இதயங் கனிந்த பராட்டுகளாகும்.

    மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் (முஸ்லீம்:4638)எனற் சத்திய ஹதீஸ் வசனங்களுக்கு ஏறப நிச்சயமாக கருணை மிக்க அல்லாஹுதாலாவிடத்தில் கூலி உண்டு.தாங்களுக்கு மட்டும் அல்லாது தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் அனைத்து சமூக நல அமைப்பை சார்ந்த சகோதரர்களுக்கும் அந்த கூலியில் பங்கு உண்டு..

    நகரில் உள்ள அனத்து சமூக அமைப்புகளைப் பற்றி முழு அளவில் (அமைப்பின் பெயர், தொலைபோசி எண்ணுடன் முகவரி, நிர்வாக உறுப்பினர்கள)தந்தால் உதவிகரமாக இருக்கும்.
    ReplyDelete
  2. கீழக்கரைக்கு நவீன கழிப்பரைபற்றி கீழக்கரை சேர்மன் வளைதளத்தில் நான் ஏற்க்கனவே என்னுடைய கருத்தை பதிவுசெய்திரிக்கிறேன் எவ்வித பயனுமில்லை ஜின்னாதெருவில் அமைந்திருக்கும் நவீன கழிப்பறையை சுத்தம் செய்வதற்கும் பாதுகாக்கவும் கீழக்கரையில் பரவிக்கிடக்கும் சங்கங்கள் சொந்த செலவில் நகராட்சி அனுமதியுடன் காலை மாலை நேரங்களில் மட்டுமாவது பகுதிவேலைக்கு ஒரு பாதுகாவலரை நியமிக்கலாமே..
    ReplyDelete
  3. மிகவும் அவசியமான இடங்களில் பொது கழிப்பறைகள் நம்து நகரில் கட்டுவது என்பது நடக்காத காரியம். காரணம் நகருக்குள் அனைத்துமே வீட்டடி நிலங்கள்..சத்ர அடி ரூ.2000 முதல் 2500.. அரசு நிலங்களும் அறவே கிடையாது.. இருக்கும் ஒரு இடமும் (ஜின்னா தெருவில்) பயன்பாட்டிக்கு வர முடியாத நிலையில் உள்ளது.. ஆங்காங்கே பொது கிணறுகள் இருந்த இடங்கள் சில உண்டு.அவைகளை இந்த பயன்பாட்டிற்கு கொண்டு வர முனைந்தால் பொது மக்களின் பல்த்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்..

    இன்றைய நிலையில் நகரில் ஏழை, பணக்காரன் என பேதம் இல்லாமல் அனைவரின் வீட்டிலும் கழிப்பறைகள் உண்டு.(கை விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வீடுகளில் இல்லாமல் இருக்கலாம்)..கடற்கரை அருகே குடி இருக்கும் சிலரும், வெளியூரிலிருந்து இங்கு வந்து மீன் பிடி தொழில் ஈடுபட்டிருக்கும் சிலரும் வெட்கத்தை துறந்து இந்த அசிங்கத்தை செய்கிறார்கள்.. இவர்கள் மனது வைத்தால் குறிப்பாக உள்ளூர் வாசிகள் (மீன் பிடி தொழிலுக்காக குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே வருவார்கள்)இந்த இழிநிலை நிச்சயமாக மாறும்..
    ReplyDelete
  4. முன் காலங்களில் நகரில் கட்டுமான வீடுகளில் எடுப்பு கக்கூஸ் முறை இருந்தது.. அதாவது மனித கழிவுகளை மனிதனே எடுத்துச் செலவது. வீடுகளில் முகப்பு ப்குதியில் ஒரு சிறிய அறை எடுத்து அதில் சுமார் மூன்று அடி உயரத்தில் ஒரு சிமெண்ட சிலாபின நடுவில் ஒரு வட்ட வடிவ துளை போட்டு அதன் கீழே ஒரு இரும்பு வாளியை வைத்து, தெருவில் கதவுடன் கூடிய சிறிய நிலையை வைத்து விடுவார்கள்..தினமும் காலையில் துப்பரவு தொழிலாளி துப்பரவு செய்து விடுவார். அந்த காலக் கட்டங்களில் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். இதனால் சாம்பல் கிடைக்கும்..இதை கழிப்பறையில் சேகரித்து வைத்து காரியம் முடிந்ததும் கழிவை மூடி விடுவார்கள். இதனால் வீட்டிற்குள் துர்நாற்றமும் இருக்காது..

    இது போக பெண்களுக்காக நகரின் சில முக்கிய பகுதிகளில் “கொளக்காடு” எனும் சுற்று சுவருடன் கூடிய திறந்த வெளி கழிப்பிடங்கள் இருந்தது.. அங்கு ஒன்றோ, இரண்டோ பொதுக் கிணறுகளும் இருக்கும். அதிகாலையில் வயதுக்கு வந்த பெண்கள் உட்பட கொளக்காடு சென்று காலை கடன்களை முடித்து, கொண்டு சென்ற துணிமணிகளை துவைத்து, பின் குளித்து விட்டு வருவார்கள்..அப்போதெல்லாம் கொளக்காட்டை சுற்றி மாடி வீடுகள் கிடையாது. அனேகமாக எல்லாமே மாடி இல்லாத ஓட்டு வீடுகளும், தென்னங்கூரை வெய்த வீடுகள்தான்.. இதனால் பெண்கள் அச்சமின்றி பயன் படுத்தினார்கள்..T B C >>>
    ReplyDelete
  5. மேலும் முன் காலங்களில் ஆண்கள் குளிக்க, துணி துவைக்க. காலைக் கடன்களை முடிக்க, இப்போது புது கிழக்குத் தெருவாக மாறி இருக்கும் இடத்திலும், மேலத்தெரு ஹமீதியா பள்ளி விளையாட்டு திடலுக்கு மேற்கு பகுதியை சுற்றிலும் நிறைய தென்னந் தோப்புகள் இருந்தன.. அங்கு கிணறுகளும், தண்ணீர் இறைக்க வாளியுடன் கூடிய திலா மரமும். தண்ணீரை சேகரிக்க சிமெண்ட் தொட்டி களும் இருக்கும். அனுமதி இலவசம்.(இதன் நிழல் காட்சியை காண வேண்டுமானால், பேஸ் புக்கில் Mke Moulana என்ற பக்கத்தில் போட்டோ தொகுப்பில் கண்டு களிக்களாம்).. இது போக நகரில் ஆண்களின் குளியல் பயன்பாட்டிற்கு நிறைய குளக்களும் இருந்தன.. அது ஒரு கனாக்காலம்.. சீதன வீடு பிரச்சனையாலும் , கல்விச்சாலை களுக்கு இடமின்மையாலும் கால ஓட்டத்தில் அவையெல்லாம் மறைந்து மூத்த குடி மக்களின் மலரும் நினைவுகளாகி விட்டன..



    Riffan Zyed : Kind request to Mr. keelai ilayavan : Please prepare a complaint letter and send it to concerned department officials. mere news is not a solution.
     
     
    Keelai Ilayyavan அன்பு Riffan Zyed அவர்களுக்கு, தங்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி.. கீழை இளையவன் வலை தள பக்கத்தில் பதியப்படும் அனைத்து புகார் செய்திகளும், வெறும் பதிவோடும், பகிர்வுகளோடும் மட்டும் நின்று விடுவதில்லை.

    மாறாக, தகுந்த புகைப்பட ஆதாரங்களுடனும், பொது மக்களின் ஆதாரப்பூர்வ பதியப்பட்ட வாக்கு மூலங்களுடனும், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு, பொது நல அமைப்புகளின் உதவியோடு அனுப்பப்படுகிறது. மேலும் அந்தந்த மனுக்கள், முறையாக FOLLOW-UP செய்யப்பட்டு, நல்ல தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நல்ல தருணத்தில், அதற்காக பெரும் ஒத்துழைப்புகளை நல்கி வரும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS), கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் நல இயக்கம், பிக்ருல் ஆகீர் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு சங்கம் மற்றும் இதற்காக காலம் நேரம் பாராமல் பாடுபடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்
    கீழை இளையவன்

Friday 7 September 2012

கீழக்கரையில் பாலிதீன் குப்பைகளுக்கு தீ வைக்கும் கும்பல் - பாதிப்பை எதிர் நோக்கும் பள்ளிக் குழந்தைகள் !

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பள்ளிச் சாலைகளில் பாலிதீன் அதிகம் நிறைந்த குப்பைகள் கொட்டிக் குவிக்கப்படுகிறது. சமீப காலமாக முகம் தெரியாத ஒரு கும்பல், இந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து சென்று விடுகிறது. இதனால் கிளம்பும் துர்நாற்றம் மிகுந்த கரும் புகையால் அந்த பகுதியை கடக்கும் பள்ளிக் குழந்தைகளும், பொது மக்களும் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதுடன் சுற்றுப்புற சூழலும் வெகுவாக பாதிப்படைகிறது.

 கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி நுழைவாயில்

பருத்திகாரத் தெரு ரைஸ் மில் அருகாமையில் நச்சுப் புகை

கிழக்குத் தெரு கைராத்துக் ஜலாலியா மேனிலைப் பள்ளியினை சுற்றி கொட்டபட்டிருக்கும் குப்பைகளுக்கு  வைக்கப்படும் நெருப்பால், குப்பைகள் தொடர்ந்து பல மணி நேரம் வரை எரிகிறது. இதன் மூலம் அந்த வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் பலரும் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தோய்ந்த குரலில் தெரிவிக்கின்றனர். தொடர் புகை காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

இது குறித்து பருத்திக்கரத் தெருவைச் சேர்ந்த தாஹா உம்மாள் அவர்கள் கூறும் போது "இது போன்ற தீ வைப்பு செயல்களை செய்பவர்கள், கீழக்கரை நகராட்சியின் துப்பரவுப் பணியாளர்கள் தான். குப்பைகளை அப்புறப் படுத்துவதற்கு முனையாமல், வேலையை மிக சுருக்கமாக முடிப்பதற்காக, 'ஒரே தீக்குச்சியில் குப்பைகளை அழித்து  சாதனை' படைத்து சென்று விடுகின்றனர். சமீபத்தில் நகராட்சி குப்பைகளை விரைந்து அகற்ற மூன்று சக்கர மிதி வண்டிகள் வாங்கி பயனில் உள்ளதாக அறிகிறோம். ஆனால் இங்கு அவர்கள் தங்கள் வேலையை முறைப்படி செய்யாமல், பணி ஏய்ப்பு செய்து வருகின்றனர். புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் கமிசனர் அவர்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த வேளானூர் அரசு மருத்துவர் டாக்டர்.ராசிக்தீன் அவர்கள் கூறும் போது, "கீழக்கரையை பொருத்தமட்டில் சட்டத்துக்கு புறம்பாக, பாலிதீன் குப்பைகளை எரிப்பது எல்லா இடத்திலும் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இவற்றை எரிக்கும் போது புற்றுநோயை உருவாக்கக்கூடிய டையாக்சின் எனப்படும் கொடிய நச்சுப்புகை வெளியாகிறது. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை பொதுமக்கள் உணர்வதில்லை. இந்த நச்சுப் புகையால் புற்றுநோய், இனப்பெருக்க கோளாறுகள், மனநிலை பாதிப்பு, நோய் எதிர்ப்புத்திறன் குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும், மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை பொது மக்கள் கை விட வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.


பிளாஸ்டிக் எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த போதிய விழிப்புணர்வு பொது மக்களிடையே இல்லை. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நோய்கள் அதிகரிக்கும் என்பதை பொதுக்களுக்கு விளக்கும் வகையில் நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுத்து, குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday 6 September 2012

கீழக்கரையில் கலை நயத்துடன் இன்றும் வாழும் 'திண்ணை வீடுகள்' - நீங்காத நினைவலைகள் !

இன்றைய பரபரக்கும் வாழ்க்கையில் 'உட்காரவும் நேரமில்லை, உறவாடவும் பொழுதில்லை' என்பது போல காலம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.  ஒரு காலத்தில் ஓய்வு எடுக்க திண்ணை தேடிய மனிதன் மறைந்து போய் இப்போது, திண்ணைகள் எல்லாம் வீடுகளை தேடிக் கொண்டிருக்கிறது, என்று சொன்னால் அது மிகையில்ல.

இன்றைய சந்ததியினருக்கு, திண்ணை என்றால் என்ன ? முற்றம் என்றால் எப்படி இருக்கும் ? என்று பாடம் நடத்த வேண்டிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் கடற்கரை நகரம், மிக வேகமான மக்கள் தொகை வளர்ச்சின் பின்னணியில், குறுகிய தெருக்களுக்குள்ளும், அருகிய வீடுகளுக்குள்ளும் தொலைந்து போன பாரம்பரிய கலாச்சார வீடுகளில் ஒன்றிரண்டு மட்டும், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.


கீழக்கரை நகரின் பரதர் தெருவிலும், கிழக்குத் தெரு மற்றும் நடுத் தெருவின் சில பகுதிகளிலும், அழகிய கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திண்ணை  மற்றும் பெரிய முற்றத்துடன் கூடிய வீடுகள் இன்றும் காணப்படுகிறது. இந்த வீடுகளின் வெளிப் பகுதிகளிலும், உட்பகுதியிலும் காணப்படும் வேலைப்பாடுகள் மிகுந்த பர்மா தேக்கு மரத்தினாலான தூண்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. மூன்று நூற்றாண்டுகளை தாண்டி கம்பீரமாக நிற்கும் இந்த வீடுகள் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.



மரபுவழிக் கட்டிடங்களில் காணப்படும் இந்த திண்ணைகள் பல்வேறு சமூக பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தம்முள் அடக்கியுள்ளன. கீழக்கரை பகுதிகளில் காணப்பட்ட அந்த காலத்து வீடுகளில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான உட்பகுதி, பொதுப் பயன்பாட்டுக்கான வெளிப்பகுதி திண்ணைகள் என்ற அமைப்பிலேயே பெரும்பாலும் அமைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

திண்ணைகள் பயன்பாட்டிலிருந்த இடங்களில், குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சில வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், தொழில் செய்யும் இடமாகவும் இவை பயன்பட்டு இருக்கிறது.  முற்காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை பயன்பட்டதுண்டு. திண்ணைப் பள்ளிக்கூடம், திண்ணைத் தோழர்கள்,  திண்ணைப் பேச்சு, திண்ணைத் தூங்கி போன்ற சொற்றொடர்களிலிருந்து திண்ணை பயன்பட்ட முறை பற்றி நம்மால்  அறிய முடிகின்றது.



பழங்காலத்தில் கீழக்கரை நகருக்கு கடல் வணிகமாக வரும் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களும், வழிப் போக்கர்களும் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் திண்ணைகளின் பயன்பாடுகள் குறித்த சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும். நம் கீழக்கரையில் இது போன்ற பழங்கால வீடுகளை கண்ணுறும், இன்றைய பொறியியல் பயிலும் இளவல்கள் அதிசயித்தே போகின்றனர்.

இது குறித்து கருப்பட்டிக்காரத் தெருவை சேர்ந்த ஜனாப்.A.M.தீன் சாலிஹ் (வயது 87) அவர்கள் கூறும் போது "அந்தக் காலத்து வீடுகள் இன்றும் என் நினைவில் நீங்காது இடம் பெற்று இருக்கின்றன. தெருவுக்கு இரு புறமும் வீடுகள் ஒரு ஒழுங்காகக் கட்டமைக்கப் பட்டிருக்கும். நடுவாக்குக்கு இரு புறமும் மயிர்க் கற்றைகள் படிந்துள்ளது போன்று, பார்ப்பதற்கு  மிக அழகாக இருக்கும். நம் கீழக்கரை நகரில் பெரும்பாலும் ஓடு மற்றும் கூரை வேய்ந்த வீடுகள் பரவலாக நிறைந்திருந்தது.

வஜ்ஜிரக்கட்டு என்று சொல்லப்படும் காளவாய்க் (சுண்ணாம்பு) கலவையில் தான் வீடுகள் கட்டப்பட்டிருக்கும். நான் சிறு வயதாயிருக்கும் போது, கீழக்கரை மேலத் தெருவில் 'காளவாய் மரைக்கா' என்றே ஒருவர் வாழ்ந்தார். திண்ணை, முற்றம் இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தேக்கு மரத் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

சிலர் வீட்டுத் திண்ணைகள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒவ்வொரு திண்ணையிலும் பத்துப் பேர்கள் கூட தூங்கலாம்.  இப்போது கால ஓட்டத்தில் எல்லாம் மறைந்து விட்டது. ஒரு சில வீடுகள் மட்டும் இடிக்கப்படாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தன் நினைவலைகளை சொல்லி காட்டி பழங்காலத்து கீழை நகருக்கே பிரயாணிக்க வைத்தார்.

தற்போது கீழக்கரை மேலத் தெரு பகுதியில் கட்டப்படும் சில வீடுகளில், பெரிய பரப்பளவுடன் பழங்கால பாரம்பரியங்களை நினைவு கொள்ள தக்க வகையில், திண்ணை, முற்றம், தூண்கள் என்று கலை நயத்துடன், மனதை கொள்ளை கொள்கிறது.

Comments  : 


 
அந்த காலத்தில் வழிப்போக்கர்கள் ஓய்வு எடுக்கவும், மாலை வேளைகளில் வீட்டு சொந்தக்காரர்கள் தங்கள் உறவினர்களுடன் அமர்ந்து உரையாடவும் திண்னைகள் கட்டப்பட்டன.

நம் ஊரில் எல்லா தெருக்களிலும் திண்னண வீடுகள் இருந்தன. அதில் இளைஞர்கள் செட் செட்டாக இருந்
து கதை பேசி மகிழ்வார்கள். அது காலப்போக்கில் 5 கோல் வீடாக, 4 கோல் வீடாக மாறி போகும் காலம் கட்டம் வந்து விட்ட காரணத்தால் அவைகள் முற்றிலும் அழிந்து விட்டன.

இந்த பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது கேள்வி குறியாகி எந்த நேரமும் டிவி, கம்பியுட்டர் என முடங்கி விட்ட காரணத்தாலும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 2 பிள்ளைகள் என குறுகி விட்டக்காரணத்தாலும் விளையாட்டுகள் குறைந்து, திண்னைகளில் தோழர்களுடன் அலவளாவும் நிலைகளும் முற்றிலும் இல்லாமல் போய் விட்டன.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட என் தாய் வீடு இப்போதும் நீண்ட திண்னையை கொண்டுள்ளது.

ஆனால் என் மனைவிக்கு கட்டிய வீடு திண்னை இல்லாமல்தான் இப்போது கட்டப்பட்டுள்ளது.

-கீழை ஜமீல் முஹம்மது.

                                                            ---------------------------------------

Syed Abusalique Seeni Asana  அபு சாலிஹ் (வரலாற்று ஆய்வாளர் )
ithil kappalil ubayoham seitha siru kannadi jannal meal pohum padi kattu aruhil ullathu.. 2nd floor pohum pathai miha kuruhiyathaha erukkum.. thanks Keelai ilayyavan enga veetu alahu enakea photola parthu tha theriyuthu..

Wednesday 5 September 2012

தபால் துறையில் 621 காலி பணியிடங்கள் - கீழக்கரை பகுதி ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் !

தபால் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்டிங் அசிஸ்டென்ட், போஸ்டல் அசிஸ்டென்ட் (ரிட்டர்னிங் லெட்டர் ஆபீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (மெயில் மோட்டார் சர்வீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (பாரின் போஸ்ட் ஆர்கனைசேஷன்), போஸ்டல் அசிஸ்டென்ட் (எஸ்.பி.சி.ஒ) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 621 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1 ஆம்  தேதி கடைசி நாளாகும். வயதுவரம்பு 18 வயதிலிருந்து 27 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எஸ்.சி, எஸ்.டி பிரிவுக்கு 5 ஆண்டுகள் வரையும், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை உண்டு. 


12 ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியோடு, ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். 10, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், எழுத்து தேர்வு மதிப்பெண், கம்ப்யூட்டர் டைப்பிங் டெஸ்ட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.50. விண்ணப்பங்கள் வினியோகம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறும். 

இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.200. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிநாள் ஆகும். தேர்வர்கள் இது தொடர்பான மேலும் விவரங்களை  www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘டைரக்ட் ரெக்ரூட்மென்ட் செல், நியூடெல்லி எச்ஒ, நியூடெல்லி 110001' என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நல்ல வாய்ப்பினை கீழக்கரை பகுதியை சேர்ந்த ஆர்வமுடையவர்கள், பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணிகள் - கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சிறப்பான சேவை !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள்  வழங்கும் நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவிகள் பயனடைந்தனர். இதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நேற்று (30.07.2012) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுராகிம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) தலைமை வகித்தார்.


கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர். J.சாதிக், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் செயலாளர். ஜனாப். முகைதீன் தம்பி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் திரு. இராஜேந்திரன், திரு.விஜயன், திரு. கெஜி என்கிற கெஜேந்திரன், கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா, முகைதீன் இபுறாகீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக பள்ளியின்  தலைமை ஆசிரியர் முஹம்மது மீரா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர்.சந்திர மோகன் நன்றி கூறினார். இதில் 118 பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டன.  மேலும் ஹமீதியா பெண்கள் மேனிலை பள்ளியில் இன்று (05.09.2012) காலை 9 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆசிரியர் தின நிகழ்ச்சியில், கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக 140 மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி திரு.விஜயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tuesday 4 September 2012

கீழக்கரையில் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏ முயற்சி - அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் !

கீழக்கரை நகரில் தொடர்ந்து மின்சார விநியோகத்தில் பிரச்சனை எழுந்த வண்ணம் உள்ளது. தமிழகமெங்கும் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டினையும் தாண்டி நடு நிசி இரவுகளில், டிரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் திடீர் கோளாறுகளால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார  வாரிய ஊழியர்களால் உடனுக்குடன் கோளாறுகள் பழுது நீக்கப்படாததால் மாதத்தின் பாதி நாள்கள் உறங்காத இரவுகளாகவே மாறிப் போனது.
FILE PHOTO
கீழக்கரையின் பல்வேறு பொது நல அமைப்பினர்களும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் திரு.இரா.விஸ்வாதன் அவர்களை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்.

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது:

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும், புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்னதாக 01.09.2012 சனிக்கிழமை இராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்களில், கீழக்கரை நகரின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




கீழக்கரைக்கு தனி தாலுக்கா அந்தஸ்து 
 
அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் பாதாள சாக்கடை
 
இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கடல் அட்டை மீதான தடையை நீக்குக
 
கடல் அட்டை மீதான மத்திய அரசின் தடை அர்த்தமற்றது என இப்பொதுக்கூட்டம் கருதுகிறது. எனவே பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும் கடல் அட்டை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வாக்களித்தது போல் கடல் அட்டை மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சங்கு, சிப்பி மீதான தடையும் நீக்கப்பட வேண்டுமென இப் பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Sunday 2 September 2012

கீழக்கரையில் நாளை (03.09.2012) மின்சார விநியோகம் இருக்காது - முன்னேற்பாடுகள் அவசியம் !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால், கீழக்கரை நகர், ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த, சுற்று வட்டார பகுதிகளில் நாளை திங்கள்கிழமை (03.09.2012) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.




ஆகவே நம் பகுதி பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் வாசிக்கும் இந்த தகவலை, நம் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தடுமாற்றம் - முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால் பெண்கள் கடும் அவதி !

கீழக்கரையில் கடந்த வாரம் முதல் 'ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான, தகவல் சேகரிக்கும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. தற்போது 3, 4, 5 ஆம் வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான அடையாள அட்டைப் பணிகள், கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த பகுதிபொதுமக்கள், நேற்று காலை முதலே திரளாக வந்து தேசிய அட்டை பெறுவதற்கான தகவல்களை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கான தகவல்களை சேகரிக்கும் பணியினை இந்திய தேசிய ஆணையத்தால் (UIDAI) பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர். கீழக்கரை நகராட்சியின் ஊழியர்கள் சிலரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.




ஆனால் முறையான வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாததால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். முதலில் யாரை அணுக வேண்டும்? தகவல்களை யாரிடம் சொல்வது? புகைப்படம் எங்கு எடுப்பது? போன்ற தகவல்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைத்துள்ளனர். காலையிலிருந்தே சிறு குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் சொல்ல முடியா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பெண்களும், முதியவர்களும் அமர்வதற்கு இருக்கை வசதிகள் இல்லை. சரியான வரிசை முறை கடைபிடிக்கப் படாததால் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. 




இது குறித்து கீழக்கரையில் ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணிகளின் ஒருங்கிணப்பாளர். திரு ஜெயச்சந்திரன் அவர்களிடம் கேட்ட போது "ஆரம்ப நிலையிலேயே பொது மக்களுக்கு வழி காட்ட கூடுதல் பணியாளர்களை நகராட்சியில் கேட்டுள்ளோம். பொது மக்கள் சிரமமின்றி தகவல் தர போதுமான வசதிகள் இனி வரும் அனைத்து வார்டுகளுக்கும் செய்து தரப்படும். பொதுமக்கள் அதிகமாக வரும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாள்கள் கால அவகாசம் நீட்டித்து தரப்படும்." என்று தெரிவித்தார்.

Comments :

கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நகராட்சியில் இருந்து கூடுதல் பணியாளர்களை தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்காமல், நமது ஊரின் சமூக நல அமைப்புகள், பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினால் நல்லது.
 
Ali Batcha Says : கீழக்கரை ”புதிய ஒற்றுமை” யின் வேண்டுகோள் வரவேறகத்தக்கது..குறைந்த கால அவகாசமே இருப்பதால் உடனடியாக செயல் பட வேண்டியது சமூக நல அமைப்புகளின் கடமையாகும். முதலில் பதிவுக்கு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சபையான நகராட்சியும் மற்றும் மக்கள் பிரதநிதிகளும் இதில் அதிக அக்கரை காட்ட வேண்டும்..

கீழக்கரையில் சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் ஏற்பாடு !

கீழக்கரை நகரின் பல பகுதிகளில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பில் அதன் நிர்வாகிகளான கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம், முஹம்மது சாலிஹ் ஹுசைன்,பாபா பக்ரூதீன், மாணிக்கம், உள்ளிட்டோர் சுகாதாரத்தை வலியுறுத்தி, தாங்களே முன் வந்து நகரில் குப்பைகள் நிறைந்துள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பலகைகளை நிறுவி வருகின்றனர். கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) தலைவர். ஜமால் அஸ்ரப் அவர்கள் கூறும் போது  "தங்கள் சங்கமும் இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது, "சுற்றுப் புற சுகாதாரம் நம் வாழ்வின் ஒரு பாதி. சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணாமல் நலமான வாழ்க்கையை  நாம் எதிர்பார்க்க முடியாது. நாளுக்கு நாள் பல பெயர் தெரியாத நோய்களால் அல்லல்பட்டும் கூட,  நம் நகர் மக்களுக்கு சுகாதாரம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகவே தான் பொது மக்கள் குப்பைகளை கொட்டும் பல்வேறு இடங்களிலும், சுகாதாரத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் கூடிய, பேனர்களை  ஒவ்வொன்றாக நிறுவி வருகிறோம். 




நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற போர்டுகளை ஏற்படுத்த உள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு சிறிதேனும் பயன் கிடைத்தாலும் அதனால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் கீழக்கரை நகராட்சிக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார். 

கீழக்கரையில் 'ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான பணிகள் தீவிரம் - ஆர்வமுடன் பதியும் பொதுமக்கள் !

கீழக்கரையில் ஆதார் என்று அழைக்கப்படும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நேற்று துவங்கியது. கீழக்கரை நகரில் இதற்கென பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களில் அதற்கான பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தங்கள் தகவல்களை அளித்த வண்ணம் உள்ளனர். 

'ஆதார்' - தேசிய அடையாள அட்டை ஏன் ? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகத் தான் இந்த தேசிய அடையாள அட்டை இருக்கும்.


ஏனெனில் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க இந்திய தேசிய ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

முதன்மை அட்டை

நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். அது மட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும் போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

 
அடையாள அட்டையில் என்ன இருக்கும் ?

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

கீழக்கரையில் 'ஆதார் அட்டை' பெற எங்கு செல்ல வேண்டும் ?

கீழக்கரையில்  இந்த முகாம்கள் எங்கெங்கு நடை பெறும்  என்பதை துவங்கி நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 

ஆக 30 முதல் செப் 2 வரை 1, 2, 6 ஆகிய வார்டுகளுக்கு மறவர் தெரு ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,

செப் 2 முதல் 5 வரை 3, 4, 5 வார்டுகளுக்கு கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியிலும்,

செப் 6 முதல் 8 வரை 7, 8, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு மஹ்தூமியா பள்ளியிலும்,

செப் 9 முதல் 11 தேதி வரை 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்கு மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 12 முதல் 14 வரை 15, 16, 17 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு தெற்குதெரு இஸ்லாமியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 15 முதல் 17 வரை 18, 19 ஆகிய வார்டுகளுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும்,

செப 18 முதல் 20 வரை 20, 21 வார்டுகளுக்கு வடக்குதெரு சிஎஸ் ஐ பள்ளியிலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.
 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி, இருப்பிடச் சான்றிதழ், சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு http://uidai.gov.in/ என்ற இணைய
தள முகவரியை சொடுக்கி பார்வையிடலாம்.