தேடல் தொடங்கியதே..

Saturday 2 June 2012

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் அனல் பறக்கும் விற்பனையில் 'சக்கர கோட்டை வெள்ளரிக்காய்' !

தமிழகத்தின் அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக வெள்ளரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகிறது. ஆனால்  நம் பகுதி சக்கரை கோட்டை வெள்ளரிக்காயின் சுவை போன்று வேறெங்கும் ருசிக்க முடியாது. வெள்ளரிக்காயில் பல்வேறு ரகங்கள் இருக்கிறது. அதில் நம் இராமநாதபுரத்தில் உள்ள சக்கரகோட்டை வெள்ளரிக்காய் மிகவும் சுவை மிகுந்தது. இந்த பகுதியில் கிடைக்கும் பிஞ்சு வெள்ளரிக் காய்க்கு, என்றும் மவுசு அதிகமாகவே இருக்கிறது.  நம்மில் சில நண்பர்கள் இந்த வெள்ளரிக்காயை வெளிநாடுகளுக்கும் கொண்டு போவதுண்டு.



தற்போது இராமநாதபுரம் சக்கர கோட்டை கண்மாயில் நீர் முழுவதும் வற்றி காணப்படுவதால், இந்த பகுதி விவசாயிகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ளனர். சக்கர கோட்டை செக் போஸ்ட் பகுதியிலிருந்து, இராமநாதபுரம் இரயில்வே கேட் வரையிலும், சாலையோரங்களில் வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் போன்றவற்றின் வியாபாரம் களை கட்டி இருக்கிறது.



இது குறித்து இந்த பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் திருமதி. மங்களேஸ்வரி அவர்கள் கூறும் போது "இந்த வருடம் இறைவன் அருளால் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையின் இரு மருங்கிலும் விற்பனையாகும் வெள்ளரிக் காய்களை ருசி பார்த்த வண்ணம் செல்கின்றனர். வீடுகளுக்கும் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர். ஏழு முதல் பத்து வரை உள்ள சிறிய வெள்ளரி பிஞ்சுகளின் கூறுகள் ரூ. 10 க்கு விற்பனையாகிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



இந்த வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் கண் பொங்குதல், உடல் சூடு, சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள், உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள்,  இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை இதில் அடங்கியுள்ளது. ஆகவே நாமும் தாராளமாக நம் கைகளுக்கு கிட்டும் இந்த இறைவனின் அருட்கொடையை, தவறாமல் ருசிக்கலாம் தானே....

Friday 1 June 2012

கீழக்கரையில் நடைபெற்ற 'நகர் நலன்' குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி - கீழக்கரை நகர் நல இயக்கம் முயற்சி !

நம் கீழக்கரை நகரின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு, நிரந்தர தீர்வு காணும் நல்ல நோக்கோடு, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முயற்சியில், கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்திருக்கும் அஹமது முஸ்தபா வணிக வளாகத்தில் (பாண்டியன் கிராம வங்கி அருகில்) நேற்று (31.05.2012) காலை 11 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, நகராட்சித் துணைத் தலைவர் ஹாஜா முகைதீன்,  நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 



மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.ஹமீது அப்துல் காதர் மற்றும் முன்னாள் ஸ்டேசன் மாஸ்டர் ஜனாப். செய்யது இபுறாகீம், சமூக ஆர்வலர். 'மஸ்தான்' என்கிற ஜனாப்.அஹமது இபுறாகீம், வெல்பேர் அசோசியேசன் டிரஸ்ட் பொறுப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.ரவி சங்கர், ஆகியோர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 



இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகளான குப்பை மற்றும் சாக்கடை கழிவு நீர் பிரச்சனைகள், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாத வண்ணம் வாறுகால்களுக்கு மூடி போடுவது, கொசுக்களை ஒழிக்க தொடர்ந்து புகை அடிப்பது,  வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கீழக்கரை நகருக்குள் நிழல் தரும் மரங்களை நடுவது மற்றும் பராமரிப்பது, கீழக்கரை நகருக்குள் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்வது போன்ற ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியின் முடிவில், தற்போதைக்கு அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட அனைத்து விசயங்களும், முழுமையாக நிறைவேற்றி தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல, கீழக்கரை நகர் நல இயக்கத்தினரும், வெல்பேர் அசோசியேசன் சார்பாகவும், தங்களால் இயன்ற அளவிற்கு, அனைத்து உதவிகளும், ஒத்துழைப்புகளும் நகர் நலன் கருதி செய்வதாக உறுதி அளித்தனர்.

Wednesday 30 May 2012

கீழக்கரையில் மீன்பிடித் தடை காலம் முடிவடைந்ததால் கடலுக்குள் செல்லும் விசைப் படகுகள் - மீனவ நண்பர்கள் மகிழ்ச்சி!

தமிழக கடல் பகுதிகளில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு தோறும் 'ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை' கடலில் மீன் பிடிப்பதற்கான தடை காலம் அமல் படுத்தப்படுகிறது. இதையொட்டி அமலுக்கு வந்த  மீன் பிடி தடை காலம் இன்றோடு (29.05.2012) முடிவடைகிறது.  இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.


நம் கீழக்கரை நகரின் பூர்வீக தொழிலாக, இந்த மீன் பிடித் தொழில் கருதப்படுகிறது. கீழக்கரை மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. கடந்த 45 நாள்களும் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விசைப் படகுகள் தற்போது டீசல் நிரப்பப்பட்டு, கடலுக்குள் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இத்தனை நாளும் விதிக்கப்பட்டிருந்த தடை நாட்டுப்படகுகளுக்கு பொருந்தாது என்பதால், நேற்று  வரை மீனவர்கள், பைபர் படகு மற்றும் கட்டு மரத்தில் மட்டும் சென்று கடற்கரை ஓரங்களில் மீன் பிடித்து வந்தனர்.



இவர்கள் பிடித்து வரும் மீன்களையும், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குவதால், கரை வலையில் பிடித்து வரப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஆழ்கடலில் மீன் பிடிக்க விசைப் படகுகள் செல்லாததால், மீன் கடைகளில் அனைத்து மீன்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இதனால் கடல் உணவு வகைகளை பிரதான உணவாக உண்ணும், நமது ஊர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். தற்போது தடைக் காலம் முடிவடைந்ததையொட்டி கீழக்கரை, காஞ்சிரங்குடி, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதி மீனவ நண்பர்கள், விசைப் படகுகளுடன் கடலுக்குள் செல்ல தயாராகி விட்டனர்.

தடை காலம் முடிவடைந்து கடலுக்குள் செல்வது பற்றி புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த மீனவத் தோழர். ஜனாப்.முஹம்மது ஜலீல் அவர்கள் கூறியதாவது:-



"மீன் பிடிக்க போகாத 45 நாட்களும் விசைப் படகுகளுக்கு பெயின்ட் அடித்து பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டோம். படகில் உள்ள சிறு சிறு பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ததோடு, வலைகளையும் பிரித்து மீண்டும் பிண்ணி சீர்படுத்தினோம். தமிழக அரசு எங்களுக்கு மீன் பிடி தடை காலத்தில் ரூ.2000 வழங்கியது எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்னும் இந்த தொகையை உயர்த்தி வழங்கினால் நன்றாக இருக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.



ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை, மறுபடியும் முத்தமிடக் காத்திருக்கும் விசைப் படகுகளும், மீண்டும் ஆர்வமுடன் கடல் அன்னையின் மடியில் தவழ அணி வகுத்து நிற்கும் மீனவ பெருமக்கள் மட்டுமல்ல...  இவர்களை துயரங்களுடன் கடலுக்குள் வழியனுப்பி விட்டு 'என்று திரும்பும் எங்கள் குடும்பத் தலைவனின் படகு ??' என்று கவலைகளுடன் காத்திருக்க மனைவி மக்களும் இன்றைய தினம் தயாராகி விட்டார்கள்.  இவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெறவும், கனவுகளுடன் கடலுக்குள் சென்று திரும்பும் நம் கட்டிளங் காளைகள் அனைவரும், கூடைகள் ததும்ப, ததும்ப மீன்களை கரையேற்ற நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்...

Tuesday 29 May 2012

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி - எழுச்சியுடன் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் !

நம் கீழக்கரை நகரில் பொது நல சேவைகளை முன்னிறுத்தி, அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும், சமூக நல அமைப்பாக சிறப்பாக உருவெடுத்திருக்கும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்திருக்கும் அஹமது முஸ்தபா வணிக வளாகத்தில் (பாண்டியன் கிராம வங்கி அருகில்) நேற்று (28.07.2012) இரவு 7.30  மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.




நல்ல பல சேவைகளை, நம் நகருக்கு ஆற்ற முனைந்திருக்கும் இந்த இயக்கத்தின் அலுவலகத்தினை 'HSC காக்கா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அல்ஹாஜ்.H. செய்யது அப்துல் காதர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். ஜனாப்.ஹமீது அப்துல் காதர் காக்கா மற்றும் முன்னாள் ஸ்டேசன் மாஸ்டர் ஜனாப். செய்யது இபுறாகீம் காக்கா ஆகியோர்கள் தலைமை தாங்கினர்.





ஜனாப்.P.A.Y. நூருல் அமீன் காக்கா, கீழக்கரை வர்த்தகர் சங்க தலைவர் ஜனாப். அஹமது சஹாப்தீன் காக்கா, கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா மற்றும் K.R.D.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல சங்க நிர்வாகிகள் பாரதி, ஹாஜா அனீஸ், அப்துல் அலி சித்திக், பசீர், கெஜி என்கிற கஜேந்திரன், சூசை இராயப்பன், விஜயன் நகர் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 




கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முயற்சியில் நடைபெற்ற மருத்துவ முகாம் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி.
                                 http://www.keelaiilayyavan.blogspot.in/2012/04/17042012.html


நம் கீழக்கரை நகரின் சமூக நலனில் மிகுந்த அக்கறையுடன் பேரார்வம் கொண்டு, பொது நல தொண்டாற்ற, சேவை மனப்பாங்கோடு, நல்ல தலைமையின் கீழாக ஒருங்கிணைந்திருக்கும், 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மென் மேலும் வளர எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Sunday 27 May 2012

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்ற 'டெங்கு காய்ச்சல் தடுப்பு' குறித்த கலந்துரையாடல் !

தற்போது நம் தென் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இந்த உயிர் கொல்லி நோயை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு ஆக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து உள்ளாட்சி நிர்வாகத்திலும், சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்போடு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.




நம் கீழக்கரை நகரில் 'டெங்கு காய்ச்சல் தடுப்பு' குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (26.05.2012) 4.30 மணியளவில் நகராட்சி கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்க்கு நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.




வேளானூர் அரசு மருத்துவர் டாக்டர். ராசிக்தீன்,  கீழக்கரை அரசு மருத்துவர் ராஜ மோகன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசினர்.  இதில் கீழக்கரையில் உள்ள பல்வேறு பொது அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.




இந்த கூட்டத்தின் முடிவில், அனைவரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டு, பின் வரும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் உறுதி மொழி அளித்தது.
  •    இந்த டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் தான் கடிப்பதால், நகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காலை மற்றும் பகல் வேளைகளில் தொடர்ச்சியாக கொசுக்களை ஒழிக்க புகை அடிப்பது.
  •      டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அனைத்தும் நல்ல தண்ணீரில் உற்பத்தியாவதால், நம் கீழக்கரை நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்ய தேக்கி வைக்கப்படும், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்வது.
  •      கீழக்கரை நகரின் 50 சதவீத குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் 'மாட்டு வண்டி தண்ணீர்' மற்றும் தனியார் டேங்கர் லாரிகளின் நீர் தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, உடனடியாக சுத்தம் செய்ய ஆவண செய்வது.
  •    கீழக்கரை மாலா குண்டு மற்றும் 500 பிளாட் பகுதிகளில் அமைந்திருக்கும் நல்ல தண்ணீர் கிணறுகளில் கம்பூசியா இன மீன்களை விடுவது மற்றும் அதன் சுற்றுப் புறங்களை சுத்தமாக பேணுவது.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? டெங்கு காய்ச்சலின் அடையாளம் மற்றும் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விளக்கங்களை காண, நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை பார்வையிடவும்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?விளக்கங்களுடன் கூடிய செய்தி http://www.keelaiilayyavan.blogspot.in/2012/05/sdpi.html

கீழக்கரையில் (மரண) வபாத் அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தை சேர்ந்த, மர்ஹூம். அஹமத் ஜலாலுதீன், மர்ஹூம். மதீனா  பீவி ஆகியோர்களின் முதலாவது மகளும், நடுத்தெரு மர்ஹூம். 'இன்சூரன்ஸ் சாவனா' அவர்களின் மனைவியும், ஆயிஷா பீவி, சேகு தாவூது உம்மா, ஜமால் யூஸுப், முஹம்மது அப்துல் காதர், ஹுசைன், ஆகியோரின் சகோதரியும்,   பஸிர், முஹம்மது அப்துல் காதர், சீனி, முஹம்மது முகைதீன், அபுல் கலாம் ஆசாத், செய்யது மீரா, மதீனா பீவி, மர்ஸுகா, பரிஹா, ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. சுபைதா பீவி அவர்கள் இன்று (27.05.2012)  காலை வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).




அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : (ஆனா மூனா) முஹம்மது முகைதீன் - 0091 74183 75896