தேடல் தொடங்கியதே..

Saturday 6 October 2012

கீழக்கரையில் குப்பையின் கோரப் பிடியில் இருந்து புத்துயிர் பெற்ற 'அஞ்சு வாசல் கிட்டங்கி' பகுதி !

கீழக்கரையில் குப்பைகளால் வஞ்சிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றாலும், தீராத வேதனையில் குமுறிய பொதுமக்கள் தற்போது கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட துவங்கியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதற்காக, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட இயக்கங்களின் பல்வேறு தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, கடற்கரையை ஒட்டிய கலங்கரை விளக்கம் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளால் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டது. 

இது... புதுசு !

இது... போன மாசம் !
 
அதே வேளையில் இன்னும் நகருக்குள் துப்புரவு பணியாளர்களால், பல காலங்களாக கண்டு கொள்ளப்படாத 'குப்பை களஞ்சியங்கள்' ஏராளமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதில் ஒன்றாக பழைய குத்பா பள்ளி பின்புறம் உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியும் (O.J.M.தெரு) இருந்து வந்தது. இந்த பகுதியில் காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகள், மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர்.




இந்நிலையில் தற்போது நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ( 9 வது  வார்டு ) ஆகியோர்களின் ஏற்பாட்டில் இந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்தியதோடு நில்லாமல், இந்த பகுதியில் பொது மக்கள் அமர்வதற்கு சிமிண்டாலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அழகுச் செடி வகைகளும் நடப்பட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இது குறித்து முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ( 9 வது  வார்டு )அவர்கள் கூறும் போது, "பல ஆண்டு காலமாக இந்த பகுதி குப்பை கொட்டும் இடமாகவே இருந்து வந்தது. 'இங்கு குப்பைகள் யாரும் கொட்ட வேண்டாம்' என பொதுமக்களை பல முறை வலியுறித்தியும் யாரும் கேட்ட பாடில்லை. இங்கு துர்நாற்றம் மிகுந்த கோழிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு நிலவி வந்தது. தற்போது மிக சுத்தமாக இருப்பது பார்ப்பதற்கே மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கு மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணிக்கு ஆள்களை வைத்திருக்கிறோம். இங்கு யாராவது குப்பைகள் தட்டுவது தெரித்தால், அந்த குப்பைகள் முழுவதையும் அள்ளி அவர்கள் வீட்டு வாசலில் கொட்டுவது என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரின் பார்வைக்கும் கொண்டு செல்வது என்றும் என முடிவெடுத்து இருக்கிறோம்." என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

இதே போன்று அந்தந்த பகுதி இளைஞர்கள், மாணவர்கள், தெருவாசிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது இறைவன் நாடினால், கொசுப் பண்ணைகளாகத் திகழும் இந்த குப்பை மேடுகள் சுத்தமாக்கப்பட்டு,  டெங்கு, மலேரியா, பைலேரியா, சிக்கன் குனியா என்று நீளும் நோய்களின் பட்டியல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சுகாதாரமான நகரமாக 'கீழக்கரை' உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

Comments :

  • Ahamed Kuthubdeen Raja :  அல்ஹம்துலில்லாஹ்...கனவு நனவாகிறது... உள்ளம் உவகை பெறுகிறது... இதைக் காணக் கண் கோடி வேண்டும்.
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல செய்தி... குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த அனைத்து இளைஞர்கள் பட்டாளத்துக்கும், இறைவன் நல அருள் பாலிப்பான். இந்த பகுதி துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் நகராட்சிக்கு தேர்வாகிய வார்டு பகுதி எனபது குறிப்பிடத்தக்கது.
  1. இன்று ஜும்மாவுக்கு பழைய குத்பா பள்ளிக்கு செல்லும் போது மனம் கொள்ளா சந்தோஷம்.. காரண்ம் ஐந்து வாசல் கிட்டங்கி வழியாக கடற்கரை செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டு மைக்ரோ பூங்காவும் அமைக்கப்பட்டு கண் கொள்ளா காடசியாக மாறியது தான்..

    இனி மேலாவது பொது மக்களும் அங்கு குப்பைகளை போடாது நகராட்சியின் சுகாதார நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.. அதையும் மீறி சில கேடு கெட்ட ஜன்மங்கள் அசுத்தப்படுத்தினால் நகராட்சி துப்பரவு பணியாளர்கள் உடனுக்கு உடன் குப்பைகளை அகற்றி இன்று போல என்றும் மிளிர நடவடிக்கையில் ஈடு பட வேண்டும்..

    நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த அப்ப்குதி ஒன்பதாவது வார்டு மக்கள் பிரதிநிதியும் , நகராட்சியின் துணை தலைவருமான சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள். இது போல உங்கள் சேவை மேன்மேலும் தொடர நல் வாழ்த்துகள்..

    இது சம்பந்தமாக கீழக்கரை டைம்ஸில் எமது பதிவு:

    29 August 2012 சீரழிந்து போன நகர் சுகாதாரத்தை சீர் செய்ய ஆணையர் அவர்களும், நகராட்சி தலைவியும் எடுத்து வரும் முயற்சிகளை மனதார பாராட்ட கடமைப் பட்டுள்ளோம் பணிகள் தொய்வு இல்லாமல் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுகிறோம்.

    மின்ஹாஜியார் பள்ளி முகப்பில் உள்ள சுகாதார சீர்கேட்டை சீர் செய்ய விரைந்து செயல்படுவதுடன் அருகில் உள்ள ஜும்மா நடைபெறும் பழைய குத்பா பள்ளி முகப்பிலும் கற்கள் மற்றும் கூழங்களை நீக்கி அந்த சாலையையும் காலதாமத்தை தவிர்த்து செப்பனிட அன்புடன் வேண்டுகிறோம்.

Friday 5 October 2012

இராமநாதபுரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் - பூரண மது விலக்கை அமுல்படுத்த SDPI கட்சி வலியுறுத்தல் !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி, SDPI கட்சி சார்பாக அக்டோபர் 2 முதல் 17 வரை மனித சங்கிலி போராட்டம், முற்றுகை போராட்டம், தெருமுனைக் கூட்டம், வீதி நாடகம், வாகனப் பிரச்சாரம், நோட்டிஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம் என பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 


அதன் ஒரு பகுதியாக கடந்த (அக்டோபர் 2) தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக்டோபர் 17 ல் தலைமை செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுகலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடை பெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் இராமநாதபுரத்தில் அக்டோபர் 2 அன்று மனித சங்கிலி போராட்டம் அரசு பணி மனை முன்பு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பூரண மது விளக்கை அமுல்படுத்தக் கோரும் இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Wednesday 3 October 2012

கீழக்கரையில் மீண்டும் டெங்கு பீதி - தேங்கும் குப்பைகளும் மர்ம காய்ச்சலுக்கு காரணமா ?

கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பலர் வினோதமான காய்ச்சல்களால் பாதிக்கப்படுவதும், இறுதியில் டெங்கு காய்ச்சல் என்று தெரிய வந்த சில நாள்களிலேயே உயிரிழப்பதும், இறந்தவர் 'டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை' என்று சுகாதாரத் துறையினர் முரண்டு பிடிப்பதும், சாக்கு போக்கு சொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம் கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு மாதிஹுர் ர‌சூல் சாலையில் வ‌சித்து வ‌ந்த‌ யூசுப் சாகிபு ம‌க‌ள் ஹ‌திஜ‌த் ரில்வியா (வயது 20) என்ற பெண்மணி ஒரு வார‌ கால‌மாக‌ காய்ச்ச‌ல் பாதித்து ராம‌நாத‌புர‌ம் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ந்துள்ளார்.  


இறுதியில் ப‌ரிசோத‌னை செய்த‌தில் டெங்கு இருப்ப‌தாக‌ தெரிய வந்த அடுத்த நாளே, அவரின் பிறந்த நாளன்று உயிர‌ழ‌ந்தார். க‌ட‌ந்த‌ மாதம் கீழ‌க்க‌ரை பெரிய‌ அம்ப‌லார் தெருவை சேர்ந்த‌ பாத்திஹ் ம‌வுலானா என்ற‌ இன்ஜினிய‌ரிங் மாணவரும் டெங்கு காய்ச்ச‌லில் ப‌லியானார். அதே போல் புது தெருவை சேர்ந்த‌ அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றைரை மாத‌ குழ‌ந்தை டெங்கு காய்ச்சலால் உயிர‌ழ‌ந்தது.

இந்த குப்பைகளில் எல்லாம் டெங்கு கொசு உருவாகாதா ??

கீழக்கரையை பொருத்தமட்டில் 'டெங்கு காய்ச்சல் இல்லவே.. இல்லை' என்று சுகாதாரத்துறையினர் மறுத்து வந்த நிலையில், தற்போது த‌மிழ‌க‌ அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில், நேற்று (02.10.2012) சென்னை தலைமை பூச்சியிய‌ல் வ‌ல்லுந‌ர் க‌திரேச‌ன் த‌லைமையில் அதிகாரிக‌ள் கீழ‌க்க‌ரையில் நோய் த‌டுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மேலும் அவர்களின் உத்தரவின் பேரில் நகர் முழுதும் புகை ம‌ருந்து அடிப்ப‌த‌ற்கும், கிண‌றுக‌ளில் டெமிபாஸ் என‌ப்ப‌டும் ம‌ருந்து ஊற்றுவ‌த‌ற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாத கணக்கில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 



டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக, நீர் தேங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குவளைகள், தெர்மாகோல் டப்பாக்கள், பழுதடைந்த குழாய்கள் குப்பைகளாக தேங்கி கிடக்கிறது. கடந்த வாரம் பெய்த மழை நீரின் மிச்சங்கள் இவற்றில் தேங்கியுள்ளது. தெருக்கள் தோறும் வெறும் புகை மாத்திரம் அடிப்பதால் எந்த பயனும் இல்லை. கொசுக்களின் பிறப்பிடமாகிய இது போன்ற ஆணி வேர்களை அழிக்காத வரை, டெங்குவை ஒழிப்பதில் சாத்தியமில்லை.

Comments :

 
  • Jamaludeen Jamal : our people many of them r not knowing serious abut this, pls do street views meeting, to meet people ... 
  • Nazir Sultan : சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கீழக்கரை சுகாதாரத்தை பற்றிய வரிகள் உண்மையாகி கொண்டிருக்கிறது என்று அறியும்போது மிக மன கஷ்டமும் கவலையும் ஏற்படுகிறது.

    மின்சார கட்டுப்பாடு..

    எரிபொருள் தட்டுப்பாடு..

    எனில்,

    தங்கு தடையின்றி

    இங்கு கிடைப்பது

    டெங்கு மட்டுமே !

 
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' : பொது மக்கள் அதிகம் புழங்கும் இது போன்ற பாதைகளில் குப்பைகள் மாத கணக்கில் குவிந்து கிடந்தால் டெங்கு காய்ச்சல் வராமல் என்ன செய்யும் ? டெங்கு கொசுக்களில் 500 பிளாட் டெங்கு கொசு, புது கிழக்குத் தெரு டெங்கு கொசு, பெரிய அம்பலம் தெரு டெங்கு கொசு என்று பிரிவினையா இருக்கிறது..?? 
    ஒரு இடத்தில் உருவாகும் கொசுக்கள் தான் நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நம் ஊரின் அனைத்து பகுதிக்கும் பாஸ்போர்ட், விசா இன்றி பறந்து வருகிறதே. இதில் குப்பைகளால் டெங்கு கொசு உற்பத்தியாகாது. நல்ல தண்ணீரில் அதுவும் காலையில் தான் இனப்பெருக்கம் செய்யும் என்று சுகாதாரத்துறையில் இருந்து ஒரு துப்புக் கெட்ட வாதம் வேறு.  

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம் !

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நகரில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க, போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் நேற்று நேரடி ஆய்வில் செய்த சென்னை தலைமை பூச்சியிய‌ல் வ‌ல்லுந‌ர் க‌திரேச‌ன் அவர்கள் உத்தரவின் பேரில் கீழக்கரையில் பரவியுள்ள டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கீழக்கரையில் சின்னக்கடை தெரு, நெய்னா முகம்மது தண்டையல் தெரு, அகமது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (03.10.2010) நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரதுறையினர் வீடு, வீடாக சென்று புகை மருந்து அடித்து வருகின்றனர். கிணறுகளில் அபேட் மருந்தும் ஊற்றி வருகின்றனர். இதனால் பொது மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சி அடைந்துள்ளனர்.

கீழக்கரையில் குப்பைகள் உருவாக்கிய 'தீண்டாமைச் சுவர்' - பாதை சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் பொதுமக்கள் அவதி !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடுத்தெரு ஜூம்மா பள்ளி பின்புறம், (நாச்சியா சிமெண்டு கடை சந்து) உள்ள பொது மக்கள் பயன்படுத்தும் சந்தில் முகப்பு பகுதியில், பின்னிரவு நேரங்களில் துர்நாற்றம் மிகுந்த குப்பைகளையும், கோழிக் கழிவுகளையும் சிலர் கொட்டி குவித்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் நடுத்தெரு ஜூம்மா பள்ளியின் மைய வாடி சுவற்றினை ஒட்டி குப்பைளை குவித்து வந்தனர். நடுத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், பல்லாண்டு காலமாக இங்கு கொட்டப்பட்டு வந்த குப்பைக்கு முடிவு வந்தது. ஆனால் தற்போது இதற்கு எதிர்புறம் உள்ள சந்தின் நுழைவுப் பகுதியில் குப்பைகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் ஜனாப். A.M.S. தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இங்கு குவிந்திருக்கும் குப்பைகளால் உருவாகி இருக்கும் தீண்டாமை குட்டிச் சுவரினால் இந்த பாதையினை பயன்படுத்த முடியாமல், இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். குப்பைகளால் பொது வழி முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டதால், பெண்களும், முதியவர்களும் 100 மீட்டர் தூரம் பாதை சுற்றியே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளதோடு, இந்த பகுதியில் மோசமான சுகாதரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் பலருக்கு கண்டு பிடிக்க முடியாத மர்ம காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு நலன் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Tuesday 2 October 2012

கீழக்கரையில் விழ இருக்கும் மரங்களால் எழ இருக்கும் ஆபத்துக்கள் - விரைந்து வெட்டக் கோரி நூதன முறையில் கண்டனம் !

கீழக்கரை சின்னகடை தெரு கருவாட்டுக் கடை அருகாமையில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரம் ஒன்று உயிர் பலி வாங்க காத்திருப்பது போல் பேயாட்டத்துடன் நிற்கிறது. எந்த நேரம் விழுவோ ? எத்தனை உயிர்களை காவு கொள்ளுமோ ? என்று தெரியாமல் இந்த பகுதி பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த மரம் பட்டுப் போய் ஆண்டுகள் பல ஆகிறது. இதனுடைய கிளைகள் மின் கம்பங்களை ஒட்டியவாறு செல்வதால் இது நிச்சயம் பேராபத்துக்களை விளைவிக்கும் என்பதால் விரைந்து இதனை வெட்ட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்கள் பலர் மனுக்கள் மூலம் வேண்டுகோள்  விடுத்தும் பயனொன்றும் இல்லை.



இந்நிலையில் மக்கள் நண்பன் டீம் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர், முறிந்து விழ இருக்கும் மரத்தில் ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டியுள்ளனர். அதில் இறந்து போன மரம் தன்னை அப்புறப்படுத்தக் கோருவது போல கண்டன கவிதையாக வடித்துள்ளனர். இந்த நூதன எச்சரிக்கை பலகையை பாதசாரிகள் பலர் பயந்தபடியே நின்று படித்த வண்ணம் செல்கின்றனர். இப்போதாவது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?? என்ற கேள்வி கணைகளை மனதில் ஏந்தியபடி இப்பகுதி பொதுமக்கள் காத்திருக்கின்றனர். 


இது குறித்து அல்லையன்ஸ் சமூக சேவை இயக்கத்தின் நிர்வாகி J.M.ஹபீப் முஹம்மது அவர்கள் கூறும் போது "பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், சிறு குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இது இருக்கிறது. இதே போன்று கீழக்கரையில் பல இடங்களில் பட்டுப் போன மரங்கள் கொலை வெறியுடன் காத்திருக்கிறது. கிழக்குத்தெரு முஸ்லீம் பஜாரிலும் மக்கள் அதிகம் நடமாடும் கடைகளுக்கு மத்தியில் (புறாக்கடை அருகில்) பட்டமரம் ஒன்று எந்த நேரமும் முறித்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே இது போன்ற அச்சுறுத்தும் மரங்களை வெட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.

Comments  :

 
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல முயற்சி.. சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது முன் வந்து நல்லது செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்... ஆனால் பொறுக்கும் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இறைவன் துணை செய்ய வேண்டும்.

    இதனை சிரத்தையுடன் எழுதி வைத்திருக்கும் நண்பர்கள் குழுவினை வாழ்த்துவோம்.. தொடரட்டும் 'மக்கள் நண்பன் டீமின்' மக்கள் பணிகள்...

Monday 1 October 2012

கீழக்கரையை சேர்ந்தவருக்கு 'O' NEGATIVE' இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !

கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த, ஆயிசத் சுல்பா என்ற பெண்மணி குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக, தற்போது இராமநாதபுரம் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு O' NEGATIVE இரத்த வகை அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் மிகவும் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  
 
 
மேலும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :           ஜனாப். ஜாபர்  -  9585566140

 "இரத்த தானம் செய்வோம்..  மனித உயிர் காப்போம்..." 

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்கரத் தெரு, மர்ஹூம் ஜனாப். ஜெயனுலாபுதீன், மர்ஹூமா. சுபைதா பீவி ஆகியோர்களின் மகனும், மர்ஹூம். 'சிந்துபாத்' J. சீனி முஹம்மது (சின்னக் கடைத் தெரு) அவர்களின் இளைய சகோதரரும், ஜனாப். சிந்துபாத் J. ஹபீப் முஹம்மது, ஜனாப்.J. ஆனா மூனா, ஜனாபா. J. தாதா ஹயாத்து பீவி, ஜனாபா.J. மும்தாஜ், ஜனாபா.J.ஹமீது நிஸா ஆகியோர்களின் சகோதரருமாகிய J. முஹம்மது பசீர் அவர்கள் இன்று (01.10.2012) மாலை சுமார் 6 மணியளவில், சென்னையில்  வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).


அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நாளை (02.10.2012) காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள ஆலந்தூர் கோலார் பள்ளிவாசல் மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :

ஜனாப். ஜனாப். ஹபீப் முஹம்மது  - 0091 7200129999
ஜனாப்.ஆனா மூனா - 0091 9894316688