தேடல் தொடங்கியதே..

Wednesday 11 January 2012

நெருங்கி வரும் அரசு பொது தேர்வுகள் - கனவுகளில் தேர்ச்சி பெற பெற்றோர்கள் தயாரா?

நம் கீழக்கரை இளைய சமுதாயத்தின் எதிர் காலத்தை தீர்மானிக்க போகும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் இன்னும் இரண்டே மாதங்களில் துவங்க இருக்கிறது. அனைத்து பள்ளிகளும் முனைப்பாக தங்கள் மாணவர்கள் அரசு தேர்வுகளை எதிர் கொள்ள தயார் படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே சமச்சீர் கல்வி குழப்பத்தால் திணறிப் போயிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் புதிய பாட திட்டத்தில் தேர்வெழுத காத்திருக்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி கனவுலகில் மிதந்து வருகின்றனர். 

ப்ளே ஸ்டேஷன் சென்டரில் நேரம் கழிக்கும் மாணவர்கள்



ஆனால் நம் மாணவர்களின் நடவடிக்கைகள் பெற்றோர்களின் கனவுகளை மெய்பிக்குமா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் பொன்னான நேரங்களை, படிப்பதற்கு செலவிடாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பெற்றோர்களிடம் அடம் பிடித்து பணம் வாங்கி சென்று ப்ளே ஸ்டேஷனிலும், சமூக வலைதங்களிலும் காலம் கழிப்பது, வீட்டிலிருந்தால் தொலைக்காட்சி பெட்டியை கண் சிமிட்டாமல் மணிக்கணக்கில்  பார்த்து கொண்டிருப்பது ,செல் போனில் நேரத்தை வீணடிப்பது, புதிதாக கட்டியிருக்கும் ஜெட்டி பாலத்தில் போய் மீன் பிடிப்பது என இவர்களின் சாகச பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

ஜெட்டி பாலத்தில் மீன் பிடிக்கும் மாணவச் செல்வங்கள்
செல் போனுக்குள் தலை கவிழ்க்கும் மாணவன்

இது வரை ஐந்து முறை நூறு சதவீத தேர்ச்சியை  பெற்ற கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தாளாளர் சாதிக் காக்கா அவர்கள் இது குறித்து கூறும் போது, "போட்டி நிறைந்த இந்த உலகத்தின் சிகரங்களை தொட, முதல் படிக்கட்டாக இந்த பள்ளி பொது தேர்வுகள் இருக்கிறது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற பள்ளிகளில் நடத்தும் சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் நல்ல முறையில்  பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

இதில் சிறப்பான வெற்றிகளை பெற, வீண் விளையாட்டுக்களை அத்தனையும் இப்பொழுதே ஓரம் கட்டி விட்டு அதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தி இந்த மூன்று மாதங்களிலாவது தொலைக்காட்சி பெட்டிகளை மூடி விட்டு, தங்கள் பிள்ளைகள் படிக்க ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்", என்று மிகுந்த அக்கறையுடன் தெரிவித்தார்.

தாளாளர் சாதிக் காக்கா அவர்கள்

இது குறித்து கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முஹம்மது மீரா அவர்கள் கூறும் போது "நம் கீழக்கரை மாணவர்களின் தகப்பனார்கள் வேலை நிமித்தமாக பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு தாய்மார்களிடம் மட்டுமே உள்ளது. அந்த தாய்மார்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளோடு தொடர்பு கொண்டு, தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து வாரம் ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்கால வாழ்கையை மனதில் கொண்டு அவர்களின் படிப்பு சம்பந்தமான அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த முக்கியமான நேரங்களிலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையில் இருக்கும் செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டும்", என்று தெரிவித்தார். 

தலைமை ஆசிரியர் முஹம்மது மீரா அவர்கள்

எதிர் காலம் பற்றிய கனவுகள்... மாணவர்கள் காண்கிறார்களோ, இல்லையோ ஆனால் நிச்சயம் பெற்றோர்கள் காண்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று கனவுலகில் வாழும் பெற்றோர்கள், வர இருக்கும் அரசு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்களா? என்பதை பிள்ளைகள் தான் கூற வேண்டும். 

தங்கள் பிள்ளைகள் பற்றிய  எதிர்கால கனவுகள் மெய்ப்பட இன்றே அவர்களை கண்காணிக்க ஆரம்பியுங்கள். 'உன்னால் முடியும்' என்ற ஊக்கத்தை அவர்கள் நெஞ்சில் உரமாய் ஏற்றுங்கள். நம் கனவுகள் ஜெயிக்கும்.. காலம் வெகு தூரமில்லை.