தேடல் தொடங்கியதே..

Saturday 5 October 2013

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்த 'அபாய மின் கம்பம்' அகற்றப்பட்டது !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் அருகாமையில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று இருந்து வந்தது. பள்ளி சிறுவர்களும், பொது மக்களும் அதிகம் நடமாடும் இந்த சாலை விழும் நிலையில் இருந்த, இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றக் கோரி பல்வேறு பொது நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், மின் துறையினருக்கு புகார் மனு அளித்து வந்தனர். 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ வரும் லிங்கை சொடுக்கவும் 

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் - உயிரிழப்புகள் ஏற்படும் முன் சீர் செய்யப்பட 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கோரிக்கை கடிதம் !


இந்நிலையில் நேற்று முன் தினம்  'ஒரு லாரி', இந்த மின் கம்பத்தில் மோதியதில் மேலும் முறித்து விழும் நிலையில் இருந்தது. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இந்த கம்பத்தை, இனியும் தாமதிக்காமல் மாற்ற மேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.அதன அடிப்படையில் பல வருடங்களாக சமூக ஆர்வலர்களால் இந்த இடத்தில் 'புதிய மின் கம்பம்' வேண்டி நடை பெற்ற போராட்டத்தை 'ஒரு லாரி' நிறைவேற்றி தந்துள்ளது.


இதனையடுத்து சேதம் ஏற்படுத்திய லாரி உரிமையாளர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்த மின்சார வாரியம், இன்று (05.10.2013) இந்த அபாய மின் கம்பத்தை மாற்றி, அந்த இடத்தில்  புதிய மின் கம்பம் பொருத்தி வருகிறது. இதனால் தற்போது கீழக்கரை பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக நிர்வாகி. சமூக ஆர்வலர். செய்யது இபுறாகீம் அவர்கள் கூறும் போது " இந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி பலமுறை மின்சார வாரியத்தினரிடம் புகார் செய்துள்ளோம். 

தற்போது இதற்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புகார் மனுக்களால் முடியாததை, லாரி முடித்து வைத்து விட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பழுதடைந்த மின் கம்பங்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்களிடம், கடந்த 2010 ஆம் ஆண்டு,  முறையீடு செய்தோம்.

அதற்கு கீழக்கரை நகரில் 585 மின் அளவிகள் பழுதான நிலையில் உள்ளதாகவும், இவை விரைந்து மாற்றப்படும் என்றும் மின்சார வாரியம் பதில் தந்து மூன்றாண்டுகள் முடிவடையப் போகிறது. இன்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கீழக்கரை நகருக்குள் இது போன்ற இன்னும் பல அபாயகரமான மின் கம்பங்கள் காணப்படுகிறது. அவை அனைத்தையும், ஒரு லாரி வந்து இடித்த பிறகு மாற்றுவதற்கு முனையாமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற மின்சார வாரியம் முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.


Friday 4 October 2013

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களை கண்காணிக்க 'கண்காணிப்பு கேமரா' !

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். வகுப்பறையில் மாணவர்களின் நடத்தை, பாடங்கள் கற்பிக்கும் போது அவர்களின் நிலை குறித்து அறியும் வகையில் பள்ளியில் 19 இடங்களில் கேமரா (ஆண்கள் பிரிவில் எட்டு கேமரா, மெயின் பிளாக்கில் 11 கேமராக்கள்) பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.



இதனை பள்ளியின் தாளாளர் டி.எஸ்.ஏ. ஹமீது அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சகர்பானு முன்னிலை வகித்தார். புதுப்பள்ளி இமாம் மன்சூர் அலி அவர்கள் துஆ ஓதினார்.

இது போன்ற கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதால் மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் முடியும் என்று ஹமீதியா மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகள் கண்காணிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் என்றும் இதனை தொடர்ந்து பெற்றோர்களுக்கு, பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறித்து எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 3 October 2013

கீழக்கரையில் அவசர ஆம்புலன்ஸ் தேவையா ? அழையுங்கள் - கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை அறிவிப்பு !

கீழக்கரை நகரில் அவசர ஆம்புலன்ஸ் தேவைப் படுவோர்களுக்கு உதவுவதற்காக, கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால் ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகரின் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இந்த சேவை செய்யப்படுகிறது.


ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் அழைக்க வேண்டிய அலைப் பேசி எண்கள் :

7418445575 / 9003435377

இஸ்மாயில் - செயலாளர், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை 


இது குறித்து நாம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை' புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் - பொது மக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் கை விட வேண்டும் - துணை சேர்மன் வேண்டுகோள் !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவரும், கீழக்கரை நகராட்சி துணை தலைவருமான ஜனாப். ஹாஜா முஹைதீன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 5 பக்கங்கள் கொண்ட தெளிவுரை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய நிதிகள் அனைத்தும் வீனடிக்கப்படுவதாகவும், நகர் மன்ற தலைவரின் கணவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், 


நியமனக் குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு குழு போன்ற நகராட்சி சட்ட விதிமுறை குழுக்கள் திட்டமிட்டு  நிராகரிக்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் '40 தொகுதிகளும் நமக்கே' என்று முழங்கி வரும் அ.தி.மு.க கட்சியினர், கீழக்கரை மக்களிடம் சென்று ஒட்டு கேட்க முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகவே கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் அனைவரும் கை விட்டு மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார். 







 'மாதிரி' கொள்ளை இரசீது 

கீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந்த பழம் பெரும் வீடுகள் - பகுதி 1

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து மீன் கடை செல்ல திரும்பும் வழியில் கம்பீரமாக காட்சி தரும் இந்த பழம் பெரும் வீட்டினை கடந்து செல்பவர்கள் ஒரு கணம் நின்று, வீட்டில் வெளிப்புற அழகை கண் இமைக்காமல் பார்த்து செல்வதை இன்றும் காண முடிகிறது. போர்த்துகீசிய கட்டிடக் கலை வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டின் முகப்பு அழகிய வளைவுகளால் அமைக்கப்பட்டு இருக்கிறது. 







நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்த வீட்டின் உட்புறம் முழுவதும் தேக்கு மரத்தினால் ஆன தூண்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றில் அழகிய கண் கவர் வேலைப்பாடுகள் அதிகளவில் உள்ளது. கீழக்கரை கஸ்டம்ஸ் சாலையில் இருந்த பழம் பெரும் 'பீனா செனா' கிட்டங்கியின் உரிமையாளர் மர்ஹூம். பீனா செனா செய்யது அபுதாஹிர் (லிட்டரி கிளப் 'P.S.மாமா' என்று அன்போடு அழைக்கப்படும் அப்துல் மஜீது அவர்களின் தந்தையார்) அவர்களுடைய பூர்வீக இல்லம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

பொறுத்திருங்கள்.. பழமைகள் பேசுவோம்.. (தொடரும்)

கீழக்கரையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கம் முயற்சி !

கீழக்கரை நகரில் வாகனங்களின் பெருக்கத்தால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வள்ளல் சீதக்காதி சாலை, முஸ்லீம் பஜார் வங்கி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் பெரும் துயரம் அடைந்து வருகின்றனர். நகரின் பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்கள் காலம் நேரம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து பல நேரங்கள் ஸ்தம்பிக்கிறது. கீழக்கரையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் "நோ பார்க்கிங்" விதி முறைகள் வாகன ஒட்டிகளால் கடை பிடிக்கப்படுவதில்லை.



இந்நிலையில் கீழக்கரையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கோரி, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 


Tuesday 1 October 2013

கீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு !

கீழக்கரை நகராட்சிக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிகள் குறித்தோ, நகராட்சியில் நடை பெற்று வந்த மக்கள் நலப் பணிகள் குறித்தோ, அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் அடித்து வந்த கொள்ளைகள் குறித்தோ, மக்கள் வரிப் பணம் தவறான வழியில் வீணடிக்கப்படுவது சம்பந்தமாகவோ, கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை  எவ்வித தகவலும் பொது மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. 


தகவல் அறியும் உரிமை சட்டம் நடை முறைக்கு வந்த பின்னர் பொது நல விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் உண்மையான செயல்பாடுகளை அறியும் நோக்கோடு, இந்த சட்டத்தின் வாயிலாக பல்வேறு ஆக்கப்பூர்வமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக, கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல், மனுதாரர் (கீழை இளையவன்) மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதல் மேல் முறையீடு 



இதனையடுத்து, கடந்த இரண்டாண்டு காலமாக, உரிய பதில் தராமல் அலைக்கழிப்பு செய்து வரும் கீழக்கரை நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரும் படி மாநில தகவல் ஆணையத்திற்கு, மனுதாரரால் புகார் செய்யப்பட்டது. அதனை ஏற்ற மாநில தகவல் ஆணையம், கீழக்கரை நகராட்சி மனுதாரருக்கு உடனடியாக பதில் அளிக்க கடந்த 22.07.2012 அன்று ஆணை பிறப்பித்தது. 

ஆணை 


அதன் பின்னரும் பதில் கிடைக்காததால், மீண்டும் மனுதாரரால் மாநில தகவல் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது.

கீழக்கரை நகராட்சி மீது ஆணையத்தில் புகார் 



அதனை பரிசீலித்த ஆணையம், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, கடந்த 13.09.2013 அன்று சென்னையில் உள்ள தமிழ் நாடு தகவல் ஆணையத்தில்  விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சம்மன் (அழைப்பாணை)



தீர்ப்பு 



அதில் கீழக்கரை நகராட்சி, மனுதாரருக்கு உரிய முறையில் பதில் அனுப்ப தவறியமைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 06.08.203 அன்று மனுதாரருக்கு கீழக்கரை நகராட்சி தகவல் அனுப்பியுள்ளதை ஆணையம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தீர்ப்பின் சாரத்தில் திருப்தியுறாத மனுதாரர் (கீழை இளையவன்) சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் (தகவல் மேலாண்மை ஒழுங்கு முறை விதிகள் 2007) பிரிவு 23 இன் படி இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டியும், மேல் முறையீட்டிற்கான சிறப்பு அனுமதி வேண்டியும் மாநில தகவல் ஆணையத்திற்கு மனு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Monday 30 September 2013

கீழக்கரையில் விஷப் பாம்புகள் அட்டூழியம் - கடும் பீதியில் உறைந்திருக்கும் பொதுமக்கள் !

கீழக்கரையில் புதுக் கிழக்குத் தெரு, மேலத் தெரு, ஆறு பங்களா பகுதிகளில் கருநாகம், நல்ல பாம்பு, சாரைப்பாம்பு போன்ற பல வகையான விஷ பாம்புகள் குவியல், குவியலாக இரவு நேரங்களில் 'ஹாயாக' சாலைகளில் நெளிந்து செல்கின்றன. சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த பாம்புகள் பல நேரம் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், வலம் வந்து விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும்  பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை, உதவிக்கு அழைப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது.



கீழக்கரையின் குறுகிய தெருக்களுக்குள் வசிப்பதை விட்டு விலகி, காற்றோட்டமாக, சுகாதாரமாக வாழும் எண்ணத்தில் புற நகர் பகுதிகளில் இல்லங்களை அமைத்து வரும் கீழக்கரை வாசிகளுக்கு, இந்த பாம்புகளின் படையெடுப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாள்களுக்கு முன்பு கீழக்கரையில் பாம்புக் கடித்ததால் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளதாக தெரிகிறது.



பட்டாணி அப்பா சாலை, பெரிய காடு, முஹம்மது காசீம் அப்பா, 500 பிளாட் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இரவு நேரங்களில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில், பல இடங்களில் நகராட்சி நிர்வாகத்தால் தெரு விளக்குகள் நிறுவப்படாததால் இரவு 7 மணிக்கெல்லாம் கும்மிருட்டு சூழ்ந்து விடுகிறது. இந்த வேளைகளில் பாம்புகளின் அட்டூழியமும் பெருகியுள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். 

இது குறித்து வனத்துறையிடம் புகார் தெரிவிப்பதும், அவர்களும் தொடர்ச்சியாக  பாம்புகளை பிடித்து சென்று வனப் பகுதிகளில் விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, குடியிருப்பை சுற்றிலும் உள்ள காலியிடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுவது தான். இங்கிருந்து வெளியேறும் பாம்புகள் தான் குடியிருப்பில் புகுந்து விடுகின்றன. எனவே  நகர் பகுதிகளில் வசிப்போர்கள் சுற்றுப் புறத்தில் புதர் மண்டிக் கிடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


வீட்டில் யாரையேனும் பாம்பு கடித்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியவை : 

பாம்பு கடித்துவிட்டால்,பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.

கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி) காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..?இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். 

முதலுதவி:-

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப் போடுவது நல்லது.

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும் போது தான் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம் 

பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். 

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் பாம்புகை அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத் தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக.. ஆமீன் 

படங்கள் : A.S டிரேடர்ஸ் கபார் கான்


FACE BOOK COMMENTS :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வசிப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. வாரம் ஒரு பாம்பு, இரண்டு தேள், ஒரு நட்வாக் கொல்லி, சில பல பூரான் வகைகள் போன்றவற்றை வீட்டின் முற்றத்தில் பார்த்து பார்த்து பழகிப் போன ஒன்று. 


    என்ன.. ஒரு விசேசம் இன்னும் கடி வாங்கவில்லை. கடித்து விட்டால்...? இளையவனின் பதிவை படித்து முதலுதவி முறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாக படுகிறது.
    15 hours ago · Like · 5
  • Keelakarai Ali Batcha தன்னுடைய தன்னலம் அற்ற சேவையாலும், தொடர் முயற்சியாலும் கீழக்கரை வாழ் நன் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டும் அல்லாது அதற்கான பரிகாரம், கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அனைவரும் அறியும் வண்ணம் எளிய நடையில் கொண்டு செல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. இது முகஸ்துதி அல்ல.உண்மையின் வெளிப்பாடு. தம்பி கீனா வானா நீவீர் மேன்மேலும் வள்ர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.


    சமீப காலங்களில் பாம்பு பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து வருகிறது.சமீபத்தில் ஒரு இளம் பாலகனை இழந்தது வேதனைகுரியது.பாம்பு கடிக்கு உடனடி வைத்திய உதவிக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்பது முற்றிலும் சரியான எச்சரிக்கையே. அதே நேரத்தில் நமதூர் அரசு மருத்துவமனையில் விஷ பாம்பு கடிக்கு தடுப்பு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும் சமூக ஆர்வலர்கள் கண்கானிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுச் சென்று இருப்பு இருக்க வழி காண வேண்டும்.மருத்துவர் இல்லாத் பட்சத்தில் (குறிப்பாக இரவு நேரத்தில் தலமை செவிலியர் தடுப்பு ஊசி போட அனுமதிக்க வேண்டும்.”ரெட் டேப்” இது விஷயத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது.

    இது போன்ற துர்மரணங்களிலிருந்து அனவரையும் காக்க படைத்தவனிடம் துவா செய்வோமாக. ஆமீன்.
    14 hours ago · Like · 2
  • Sunday 29 September 2013

    கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியை பழமை மாறாமல் புனரமைக்க ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை !

    கீழக்கரையில் பழமை வாய்ந்த தொழுகைப் பள்ளிகளுள் நடுத்தெரு ஜும்மா பள்ளியும் ஒன்றாகும். கீழக்கரை நகரின் நடு நாயகமாக திகழும் இந்த கலை நயமிக்க கல் பள்ளியில் அழகும், கம்பீரமும் நிறைந்த, பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் பிரதானமாக காணப்படுகிறது. நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் இந்த பள்ளியின் பல தூண்களில், தற்போது அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் முகப்பில் இருக்கும் மினராக்களில் வெடிப்புகளும் தென்படுகிறது.


    இதனால் நமக்கு கிடைத்த அரிய பொக்கிசமான இந்த பள்ளியை, மிக விரைவில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஜமாத் நிர்வாகிகள் இடையேயான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு  நிகழ்ச்சி இன்று (29.09.2013) மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர், ஜும்மா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது அவர்கள் (சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் துணை இயக்குனர்) கலந்து கொண்டு,புனரமைப்பு செய்வது சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 




    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி, ஜமாஅத் செயலாளர் ஹபீப் தம்பி, பொருளாளர் ஜமால் யூசுப், முன்னாள் செயலாளர் காதர் செய்யது இபுறாஹீம், ஜமாஅத் அங்கத்தினர்கள் ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), சிராங்கூன் டிராவல்ஸ் ஜுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    FACE BOOK COMMENTS :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அவசியம் செய்ய வேண்டிய நல்ல முயற்சி. இந்த தொன்மையான பள்ளியை, எந்த பாதிப்புகளும் இல்லாமல் பாதுகாத்து அடுத்த தலை முறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய கடப்பாடு ஜமாஅத்தினருக்கு உண்டு. இப்போது இருக்கும் பள்ளியின் அருமையான நிர்வாகத்தினர் சிறு சிறு குறைபாடுகளையும் உடனுக்குடன் கவனித்து சீர் செய்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். 

    இன்று பள்ளியை புனரமைக்க முதல் அடி எடுத்து வைத்திருக்கும் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கு பொறுமையையும், பொருளாதாரத்தையும் வல்ல நாயன் அல்லாஹ்.. அளவின்றி வழங்கி நல்லருள் பாலிப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
  • Nihal Iqbal முயற்ச்சிகள் மேம்பட வாழ்த்துக்கள்.. அல்லாஹ் நன்மையாக்கி தர துஆ செய்வோம்
    20 hours ago · Like · 1
  • கீழக்கரையில் நடை பெற்ற 'மழைத் தொழுகை' - இஸ்லாமிய மக்கள் திரளாக பங்கேற்பு !

    கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் இன்று (29.09.2013) காலை 8.30 மணியளவில் மஹதூமியா பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. குத்பா உரையாற்றி மழை தொழுகையை பழைய குத்பா பள்ளி தலைமை இமாம் S.R.M.ஹைதர் அலி மன்பஈ அவர்கள் நடத்தினார். 

     

     



    தொழுகை முடிவில் மாவட்ட தலைமை காஜி மௌலானா மவ்லவி V.V.A.சலாஹுத்தீன் அவர்கள், மழை பொழிவை எதிர்நோக்கி உருக்கமாக துஆ செய்தார். இதில் கீழக்கரை நகர் இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு இறைவனை இறைஞ்சினர். பெண்கள் தொழுவதற்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்ததால்,பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர்.இந்த தொழுகையில் கீழக்கரை நகரில் உள்ள அனைத்து ஜமாத்தினரும் திரளாக பங்கேற்றது  மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது.