தேடல் தொடங்கியதே..

Friday 29 June 2012

கீழக்கரை கடற்கரை பகுதிகளில் சுகாதாரக் கேடு எதிரொலி - கலெக்டர் திடீர் ஆய்வு !

நம் கீழக்கரை நகரின் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரப்பும் மனித கழிவுகளின் எச்சங்களையும், துர் நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளின் மிச்சங்களையும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளின் சொச்சங்களையும் மலை போல் கொட்டி குவித்து வருகின்றனர். 




இதனால் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமாக திகழ்ந்த நம் கீழக்கரை, தற்போது கண்டுபிடிக்க முடியாத, பல புதுப் புது வியாதிகளின் தாயகமாக, குபைக்கரையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை புனரமைப்பு செய்து, மீண்டும் புதுப் பொலிவுடன் மாற்ற, நம் நகரின் பல்வேறு அமைப்புகளிலுள்ள சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 




கடந்த வாரம் நம் நகருக்கு வருகை புரிந்த  மீன் வளத் துறை அமைச்சர் மாண்பு மிகு. கே.ஏ.ஜெயபால் அவர்களிடம் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக (KMSS) இந்த சுகாதார கேடு குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கண் துடைப்புக்காக நகராட்சி ஊழியர்களின் திடீர் கிளீனிங் !


இந்நிலையில் இந்த பகுதிக்கு இன்று (29.06.2012) காலை 11 மணியளவில் திடீர் நேரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்கள் கடற்கரை பெட்ரோல் பங்க் பகுதியிலிருந்து கால் நடையாகவே துர் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல்,  குப்பைகள் குவிந்த கிடக்கும் பகுதியின் கடைசி எல்லை வரை சென்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டார். துர்வாடை அதிகமாக இருந்த காரணத்தினால் வந்த வழியே திரும்பாமல், 18 வாலிபர்கள் தர்ஹா பாதையின் வழியாக திரும்பி சென்றனர். உடன் கீழக்கரை நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான், கலங்கரை விளக்க அதிகாரிகள், கடலோர கண்காணிப்பு அதிகாரிகள், கீழக்கரை சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் சென்றிருந்தனர். 




இது குறித்து மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்களிடம் கேட்ட போது " இந்த குப்பைகள் அனைத்தும் 'மாஸ்டர் கிளீனிங்' என்ற அடிப்படையில் விரைவில் அகற்றப்படும். மீண்டும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டாதவாறு அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர் முயற்சிகள் மட்டுமே திருவினையாக்கும்... என்பதோடு மட்டுமல்லாமல், பொது மக்களின் மேலான ஒத்துழைப்பும் இத் தருணத்தில் அவசியமான ஒன்றென்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. pls tellt0 collector about area of "அஞ்சு வாசல் கிட்டேங்கி" this is area of which all disease comminnig or pls give collector mobile tell him








    "அஞ்சு வாசல் கிட்டேங்கி"

    ReplyDelete