தேடல் தொடங்கியதே..

Saturday 10 August 2013

கீழக்கரை கிழக்குத் தெருவில், TNTJ சார்பாக நடை பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை - நூற்றுக் கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர் !

கீழக்கரை கிழக்குத் தெரு பால் பண்ணை அருகில் நேற்று பெருநாள் தினத்தன்று (09.08.2013), சரியாக காலை 7.30 மணிக்கு நடை பெற்ற திடல் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இதே நேரத்தில் 500 பிளாட் டீச்சர்ஸ் காலனி அருகாமையில் TNTJ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திடலிலும், தெற்குத் தெரு அக்சா நகர் அருகாமையில் அமைக்கப்பட்டு இருந்த திடலிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது.  



கிழக்குத் தெருவில் பெருநாள் பேருரையை சகோதரர். சத்தார் அலி அவர்களும், தெற்குத் தெருவில் சகோதரர்  ஸுஜா அலி அவர்களும் ஆற்றினார்கள். இந்த வருடம் கீழக்கரை நகரில் பெரும்பாலான ஜமாத்தார்கள், திறந்த வெளித் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை TNTJ '500 பிளாட்' கிளையின் சார்பாக நடை பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை நகரில், இஸ்லாமிய மக்களின் வசத்திக்கு ஏற்ப, வருடம் தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 500 பிளாட், தெற்குத் தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட மூன்று பகுதிகளில், நோன்புப் பெருநாள் 'திடல் தொழுகை' நடை பெற்று வருகிறது. நேற்றைய பெருநாள் தினத்தில் (09.08.2013), 500 பிளாட் பகுதியில் நடை பெற்ற திடல் தொழுகை, சரியாக காலை 7.30 மணிக்கு துவங்கி, குத்பா பேருரையுடன் முடிவுற்றது. 

பெருநாள் பேருரையை சகோதரர். அமீர் அப்பாஸ் அவர்கள் ஆற்றினார்கள். இந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

Friday 9 August 2013

கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள் - முக நூல் நண்பர்களின் அழகிய அணிவகுப்பு !

முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கியத் திருநாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் அகிலத்தில் வாழும் கோடான கோடி மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது. கீழக்கரை இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு, பின்னர் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற திறந்தவெளி திடல் மற்றும் பள்ளிவாசல்கள் நோக்கி விரைந்தனர்.

அங்கு திரளாக குழுமிய இஸ்லாமிய பெருமக்கள் ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தினர். மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.  அதே போல், தமது உறவினர்,நண்பர்கள், இல்லம் சென்று பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

கீழக்கரை நகரில் பல்வேறு பகுதிகளில் பெருநாள் தினமான இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வரிசை இதோ :














 

கீழக்கரையில் KECT சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை - இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர் !

கீழக்கரையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு,  KECT சார்பாக இன்று காலை 7.45 மணியளவில் புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு தொழுதனர். தொழுகையின் இறுதியில் தீனியா பள்ளியின் தாளாளர். கல்வியாளர் ஜபருல்லாஹ் அவர்கள், பயான் செய்து குத்பா ஓதினார்கள். மேலும் வடக்குத் தெரு நாசா (தைக்கா) வளாகத்தில்  KECT சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் அஹமது ஹுசைன் ஆஸிப் அவர்கள் பயான் செய்து குத்பா ஓதினார்கள்.




படங்கள் ஆனா முஜீப் அவர்கள் 

கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்...  இன்னும் வரும்....

கீழக்கரை வடக்குத் தெரு பள்ளியில் இன்று பெருநாள் தினத்தில் நடைபெற்ற ஜும்மா தொழுகை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் !

புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று (வெள்ளிக் கிழமை) நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஜும்மா தினமாக இருப்பதால், காலையில் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய இஸ்லாமிய பெருமக்கள், ஜும்மா தொழுகைக்கு காத்திருந்து, அதற்குரிய நேரத்தில் தொழுதனர். 


கீழக்கரை நகரில் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும், குத்பாவுடன் தொழுகை இனிதே நடைபெற்றது. கீழக்கரை வடக்குத் தெரு ஜும்மா பள்ளியிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள், இந்த ஜும்மா தொழுகையை நிறைவேற்றி விட்டு, நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் ஸலாத்தினை தெரிவித்தவர்களாக நெஞ்சோடு ஆரத் தழுவி, அன்பை வெளிப்படுத்தினர். 







கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்...  இன்னும் வரும்....

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை - அக மகிழ்வோடு பங்கேற்ற இஸ்லாமிய பெருமக்கள் !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி வாசலில் இன்று (09.08.2013) காலை 10 மணியளவில் ஈகைத் திருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். தொழுகையின் பின்னர் பெருநாள் குத்பா ஓதப்பட்டது. தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் ஸலாத்தினை தெரிவித்துக் கொண்டவர்களாய் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டனர். 



 

 கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்...  இன்னும் வரும்....