தேடல் தொடங்கியதே..

Friday 28 September 2012

கீழக்கரையில் மண் வாசனையுடன் பெய்த மிதமான மழை !

கீழக்கரை நகர மக்கள், கடந்த சில மாதங்களாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் தகித்து வந்த நிலையில், நேற்று (27.09.2012) இரவு 9 மணியளவில் லேசான தூறலுடன் மண் வாசனையுடன், மழை  பெய்ய துவங்கியது. பலத்த இடி, மின்னல்களை தொடர்ந்து 2 மணி நேரம் விடாது பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீச துவங்கியது. 



கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் பெய்த மழையால், சாலையோரங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. மழை பெய்து கொண்டிருக்கும் போது மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால், நகரெங்கும் இருளில் மழையை இரசித்தவாறு பாதசாரிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.  கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் மழையின்றி கிணறுகள் வறண்டு காணப்பட்ட நிலையில், இந்த மழையால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் பொதுமக்கள் அனைவரும் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


இராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எங்கு நோக்கினும் வெப்பத்தால் வறண்டு காணப்பட்ட அனைத்து நீர் நிலைகளும், இந்த மிதமான மழையால் நனைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே, இவை நிரம்பும் என்பதால், இன்னும் பெரிய கன மழைகளை மக்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment