நம்
கீழக்கரை நகரில் வயது வித்தியாசமின்றி, பின்னிரவு நேரங்களில் உக்கிரமான
நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற திடீர் ஆபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. அது
சமயம் விரைந்து மருத்துவமனை கொண்டு செல்லாத போது, பாதிக்கப்பட்டவரின் இதய
துடிப்பு மெல்ல.. மெல்ல... குறைந்து மூர்ச்சையாகி விடும் நிலை ஏற்படுகிறது. இது
போன்ற சமயங்களில் இதையத்தை முடுக்கி விட தற்போது அதி நவீன ஷாக்
ட்ரீட்மென்ட் கருவி மூலம், நம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது. இந்த உயிர் காக்கும் சிகிச்சையை திறம் பட செய்ய,
பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி
நேரமும் பணியில் இருக்கின்றனர்.
இது குறித்து அரசு தலைமை மருத்துவர் திரு.இராஜமோகன் அவர்கள் கூறும் போது "நம் அரசு மருத்துவமனைக்கு, இதய துடிப்பை சீர் செய்வதற்கான நவின ஷாக் ட்ரீட்மென்ட் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக இதய துடிப்பை சீர்செய்ய முடியும். தற்போது கீழக்கரை அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக செயல்படாமல் இருந்த மகப்பேறு பிரிவு புனரமைக்கப்பட்டு, பிரசவம் தொடர்பான சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள், ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம் உள்பட அனைத்தும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது குழந்தை பிறப்புகள் நடை பெற துவங்கியுள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாயாகுளத்தில் வசித்து வரும் பழனி (வயது 42) என்பவர் மாராடைப்பு ஏற்பட்டு, சுய நினைவின்றி, கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இதய துடிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்ததை உணர்ந்த தலைமை மருத்துவர் ராஜ்மோகன், மருத்துவர்கள் சாகுல் ஹமீது, ஹசீன், ஜவாஹிர் ஹுசைன் மற்றும் முத்தமிழரசி ஆகியோர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு புதியதாக வரவழைக்கப்பட்ட நவீன ஷாக் ட்ரீட்மென்ட் கருவி மூலமாக பாதிக்கப்பட்டவரின் இதயதுடிப்பை சீர் செய்து சிகிச்சை அளித்தனர். இது போன்ற ஷாக் ட்ரீட்மென்ட் சிகிச்சை நம் பகுதி மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்படுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள், பிரசவம் மற்றும் அவசர சிகிச்சை தேவைகளுக்காக, கீழக்கரை அரசு மருத்துவமனையின் 04567 - 244551 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment