தேடல் தொடங்கியதே..

Tuesday 7 May 2013

கீழக்கரையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலிலும் அயராது உழைக்கும் பெண்மணி !


கீழக்கரையில் தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் மிக உக்கிரமாக அனலை கக்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளான 04.05,2013 முதலே கடுமையான வெப்பம் மக்களை பெரிதும் வாட்டி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானோர் வெயிலின் உக்கிர தாண்டவத்தில்   இருந்து தங்களை காக்கும் பொருட்டு, சாலையோர கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் இளநீர், தர்பூசணி, மோர், பழ ஜூஸ் போன்றவற்றை வாங்கி அருந்தி வருகின்றனர். 



இந்நிலையில் கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (லூலூ சென்டர்) எதிரே, சுட்டெரிக்கும் வெயிலின் கடுமைக்கு இடையிலும், கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த பாத்திமா என்கிற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி, இளநீர் வியாபாரம் செய்து உழைத்து வருவது அனைவரையும் 'ஒரு நிமிடம்' நின்று, உழைப்பின் மகத்துவத்தை  சிந்திக்க தூண்டியுள்ளது. இளநீர் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு, மிக கனமான இளநீரை, நொடிப் பொழுதில் அவரே அரிவாளால் சீவி கொடுப்பதோடு, உள்ளிருக்கும் இளம் வழுக்கையை வெட்டி கொடுக்கிறார். ஆண்களே செய்வதற்கு கொஞ்சம் சிரமப்படும் இந்த வேலையை மிக இலாவகமாக செய்வது, அனைவரையும் ஆச்சரியப் பட வைக்கிறது. 


இது குறித்து சகோதரி பாத்திமா அவர்கள் கூறும் போது "நானும் எனது கணவர் அவர்களும் இணைந்து இந்த இளநீர் விற்பனையை ஐந்து வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறோம். இறைவன் அருளால், இந்த தொழில் பரக்கத்தாக இருக்கிறது. ஒரு இளநீர் அதன் அளவு மற்றும் வகைக்கு ஏற்ப ரூ.15 முதல் 25 வரை விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் உள்ளூர் இளநீர், பொள்ளாச்சி இளநீர் மன நிறைவான வகையில் கிடைக்கும். பல வருடங்களாக இந்த தொழிலில் இருப்பதால், மிக விரைவாக சீவி, வெட்டி கொடுப்பது சுலபமாகத் தெரிகிறது." என்று தெரிவித்தார்.

(சகோதரி பாத்திமா அவர்களின் கணவர். இஸ்மாயில் காக்கா அவர்கள், கீழக்கரை ஹமீதியா பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவலராக பணியாற்றியவர் எனபது குறிப்பிடத் தக்கது.)

இந்த அகினி நட்சத்திர வெயிலின் தாக்கம், எதிர் வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதலே காலை 8 மணிக்கு சுட்டெரிக்க துவங்கும் வெயில் நேரம் ஆக, ஆக அதன் உக்கிரம் தலை கிறுகிறுக்க வைத்து விடுகிறது . இதனால் மாலை நேரங்களில் கீழக்கரை புதிய ஜெட்டி பாலம் பகுதியில், காற்று வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment