பல நல்ல நோக்கங்களை மனதில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் எத்தனையோ தொண்டு அமைப்புகளும், ஆதரவு இல்லங்களும் இருக்கும் போது, கடந்த சில ஆண்டுகளாக, அநாதை இல்லங்கள் என்ற பெயரில் புதிதாய் முளைத்திருக்கும் இந்த 'அவமானச் சின்னங்களால்' அனைத்து அமைப்புகளின் கண்ணியமும் சீர் குலைந்து வருகிறது. தற்போதைய சூழ் நிலையில் இந்த ஆதரவு இல்லங்கள் பணம் பண்ணும் புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது. ஆண்டிகளாய் கீழக்கரையில் கால் பதித்த சில ஆசாமிகள், ஆதரவு இல்லங்கள் மூலம், ஐந்தாண்டுகளுக்குள் கோடிகளில் புரண்டு வரும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கிழக்கு தெருவை சேர்ந்த சகோதரி ஆமினத்து அவர்கள் கூறுகையில், " அனாதைகளின் பண விசயத்தில் நமது மார்க்கம் மிக கண்டிப்பாக நடக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் மார்க்கத்தை கற்றறிந்த இந்த ஆசாமிகள் துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, வருடத்தில் இரு முறை பறந்து, அங்கு பணி புரியும் நம் நகரவாசிகளிடம், லட்சக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அத்தனையும் ஏப்பம் விட்டு, விட்டு.. பிஞ்சு குழந்தைகளை பசியும், பட்டினியுமாக போட்டு, சரியான உடுமானம் கூட கொடுக்காமல், 'சைக்கோ தண்டனைகள்' கொடுத்ததை நான் கண்ணுற நேர்ந்த போது நெஞ்சே வெடித்து விட்டது. "யாரு பெத்த புள்ளைகளோ.. இங்கே வந்து, பசியும் பட்டினியுமா கெடந்து கஷ்டப்படுது", என்று கண்களின் ஓரமாய் பூத்த கண்ணீரை மறைத்து கொண்டு பேசினார்.
கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் முஹம்மது ஜுல்பி அவர்கள் கூறும் போது, நமது மாவட்டத்தில் எத்தனையோ சிறப்பாக செயல்பட்டு வரும் அநாதை இல்லங்கள் இருக்கும் போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் இது போன்ற 'அடாவடி ஆதரவு இல்லங்கள்' விசயத்தில் உடனடியாக அரசு தலையிட்டு, இவற்றை மூட உத்தரவிட வேண்டும். இது சம்பந்தமாக நாங்களும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகமும் இணைந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும், சம்மந்தப்பட்ட துறையினருக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம். உள்ளூர் காவல் துறையினர் இவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல், தண்டனை பெற்று தர ஆவண செய்ய வேண்டும்" என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.
இந்த அநாதை இல்லங்களுக்கு 'ஒரு பக்கம் வள்ளல்கள் வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். மற்ற்றொரு பக்கம் இந்த ஆசாமிகள் வாரிச் சுருட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த வள்ளல்கள் வருடம் ஒரு முறை ஊர் வரும் போதாவது, மறக்காமல் நேரம் ஒதுக்கி, சம்பந்தப்பட்ட ஆதரவு இல்லங்களை நேரடி ஆய்வு செய்ய வேண்டும். தங்களால் வழங்கப்பட்ட கொடைகள், முறையாக செலவு செய்யப் பட்டதா ? அல்லது ஏப்பம் விடப்பட்டதா ? என கண்காணிக்க வேண்டும்.
வெளி நாடுகளில் ஓடாய் தேய்ந்து உழைக்கும் நம் சொந்தங்கள், அநாதை இல்லங்களை புகைப்படத்தில் காட்டி யாராவது பணம் கேட்டால், அது ஒரு பைசாவாக இருந்தாலும் சரி.. உடனே வாரி வழங்கி விடாமல், விபரம் அறிந்த உள்ளூர் வாசிகளிடம் நன்றாக விசாரித்து விட்டு கொடுப்பது நல்லது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். ஒரு முறை ஏமாறுபவன் தான் மனிதன்.. மறுமுறை ஏமாறுபவன் முட்டாள்... விழிப்புடன் இருப்போம். விழிப்புணர்வு பெறுவோம் ..


