தேடல் தொடங்கியதே..

Friday 17 August 2012

கீழக்கரையில் ஒற்றுமையுடன் பணியாற்ற முனைந்திருக்கும் சேர்மன் மற்றும் துணை சேர்மன் - நடுநிலையாளர்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகர் மன்றம் பொறுப்பேற்று கடந்த பத்து மாதங்களில், நகர் மன்ற உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மை காரணமாக, மக்களுக்கான ஆக்கப் பணிகளில் பெருமளவு தேக்கம் ஏற்பட்டு வருகிறது. கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட பிளவால், பல குழுக்களாக இவர்கள் பிரிந்து நின்றனர். இதனால் பொறுப்பேற்றிருந்த  நகர் மன்றம் குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது சில கவுன்சிலர்களைத் தவிர பெரும்பாலானோர் மனக் கசப்புகளை களைந்து, ஒற்றுமையுடன் மக்கள் பணியாற்ற முனைந்திருப்பது நகரின் நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


ஆய்வுப் பணியில் சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள்

நம் கீழக்கரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மூடியிடப்படாத  கழிவுநீர் கால்வாய்கள், கொலைவெறி கொசுக்களின் உற்பத்தி தொழிற்சாலையாக திகழ்ந்து வருகிறது.  இந்த வாறுகால்கள் திறந்தே கிடப்பதால், சகிக்க முடியாத துர்நாற்றமும், பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதால் அடிக்கடி அடைப்பும் ஏற்பட்டு சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் இதில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கால் தவறி விழும் நிலையும் உள்ளது.

பல காலங்களுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் மூடிகள், தற்போது பல இடங்களில் முற்றிலும்  சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே பொது மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி, கழிவு நீர் கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் மூடிகளை அமைப்பதற்கு ரூ 5 இலட்சத்தை ஒதுக்கி, அதற்கான சிமென்ட் மூடிகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா மற்றும் துணை சேர்மன் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஒற்றுமையுடன் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்தனர்.

 மேலும் "முத‌ல் க‌ட்ட‌மாக‌ 500க்கும் மேற்ப‌ட்ட‌ சிமெண்ட் மூடிக‌ள் த‌யார் செய்யும் ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இவை தயார் ஆகி விடும் என்றும், மேலும் கீழக்கரை நகரில் எங்கெல்லாம் சாக்கடை கால்வாய்களுக்கு மூடி இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் மூடி அமைத்து இத்திட்டத்தை விரிவுபடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மிக விரைவில் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும் என்றும், இனி எதிர் வரும் காலங்களில் மக்கள்  பணிகள் சிறக்கும் என்றும்" நகர் மன்ற தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களும் நகர் மன்ற துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் அவர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

1 comment:

  1. சபாஷ். ஊர் நகர் நல விரும்பிகள் இதைதான் எதிர் பார்த்திருந்தோம்.மிக்க மகிழ்ச்சி. ஊர் நலம் கருதி மற்றவர்களும் மனம் மாற வேண்டுகிறோம்.

    இந்த ரமலானில் வல்ல இறைவன் நமக்கு கிடைத்த ஈகையாக இதை கருதி அவர்களை வாழ்த்துவோம். நாரே தக்பீர் ஈத் முபாரக்

    ReplyDelete