தேடல் தொடங்கியதே..

Friday, 25 May 2012

கீழக்கரையில் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற முகைதீனியா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா !

தமிழகமெங்கும் கடந்த 22 ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் கடந்த வருடங்களை போல பெண்களே அனைத்து பாடங்களிலும் முன்னிலை வகித்தனர். நம் கீழக்கரை நகரிலும் பெண்களே பெருவாரியான பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற வடக்குத் தெருவைச் சேர்ந்த ஹாஜி. சுல்தான் செய்யது  மற்றும் ராசிகா பானு அவர்களின் மகளார். மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்று நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.




இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றி பெற்ற மாணவிகளை மென் மேலும் ஊக்கப்படுத்தும் முகமாகவும்  வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு சார்பாகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம்  மற்றும் கீழக்கரை நகராட்சி மன்றம் சார்பாகவும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்று காலை 10.30  மணியளவில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.




இந்த நிகழ்ச்சியில் வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ஜனாப். K.M.S. பசீர் காக்கா  தலைமை வகித்தார்கள். வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு உதவி தலைவர் ஜனாப். ரபீக் சாதிக் காக்கா மற்றும் உதவி செயலாளர் M.M.S முகைதீன் இபுறாகீம் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா மற்றும் கவுன்சிலர்கள் அன்வர் அலி, இடி மின்னல் ஹாஜா, அரூசியா பேகம், முகைதீன் இபுறாகீம், சாகுல் ஹமீது, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன், கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் கார் மேகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பள்ளியின் முதல்வர். ரஹ்மத்து நிஷா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர். ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் 'கல்வி மற்றும் IAS ஆட்சிப் பணி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்சிகளை பள்ளியின் துணை முதல்வர் திரு ஜனநாயக சேதுபதி தொகுத்து வழங்கினார்.





மாணவி மிஸ்பாஹ் பாத்திமா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

தமிழ் : 186     ஆங்கிலம் : 189     கணினி அறிவியல்  : 195     பொருளியல்  : 194

வணிகவியல்  : 198    கணக்குப் பதிவியல்  :  200



பெற்றோருடன் சாதனை மாணவிகள் !

ஆசிரிய பெருந்தகைகளுடன் சாதனை மாணவிகள்

நம் நகரில் முதலிடம் பெற்ற மிஸ்பாஹ் பாத்திமா அவர்கள் கூறுகையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனக்கு  IAS படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் இப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மிஸ்பாஹ் பாத்திமா, மிஸ்பாஹ் ஆயிஷா, முஹம்மது ஹம்சா பாத்திமா ஆகியோர்களுக்கு, கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா, வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் காவல் துறை சார்பு ஆய்வாளர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்


வாழ்த்துக்கள்.... கனவுகள் விதையுங்கள் ! அறிவின் தோட்டத்தில்.. வெற்றியின் அறுவடை தூரமில்லை...

Tuesday, 22 May 2012

கீழக்கரையில் முஹைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி 1161 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 100 ச‌த‌வீத‌ தேர்ச்சியுடன் 2 பள்ளிகள் !

நம் கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் + 2 தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர் கால பாதையை தீர்மானிக்கும் விதமாக இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இது வரை பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.




இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய‌ இரு ப‌ள்ளிக‌ளும் 100% ச‌த‌வீத‌ம் தேர்ச்சி பெற்றுள்ள‌து. இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் மாணவி ஆயிசத்துல் ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக‌ 1151 பெற்றுள்ளார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % ச‌த‌வீத‌ தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ள‌து.




ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி அதிக ‌ம‌திப்பெண்ணாக‌ 1154 பெற்றுள்ளார் 95% தேர்ச்சியை இப்ப‌ள்ளி பெற்றுள்ள‌து. ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகள் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக‌ 1128 மாண‌வி பெற்றுள்ளார்.




வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 21 May 2012

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம். மு.மு.க. முஹம்மது  சேக்னா லெப்பை அவர்களின் மகளும், ஜனாப். L.M.K.சேகு முதலியார் சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். முஹம்மது ஐதுரூஸ், ஜனாப். மு.மு.க.முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், ஜனாப் அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும் ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் அவர்களின் மாமியாரும், ஜனாப். அய்யூப் கான் அவர்களின் சிறிய தாயாருமான மு.மு.க.சித்தி ஹதீஜா பீவி அவர்கள் இன்று இரவு சுமார் 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)


அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் நாளை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கிழக்குத் தெரு சேகு அப்பா பள்ளியின் அறிவிப்பு பலகை

தொடர்புக்கு : 

ஜனாப். அஹமது அஸ்லம்    -   90033 18071
ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் காக்கா -    9942042516

தமிழகமெங்கும் இன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - இணைய தளங்களில் காண ஏற்பாடு !

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் 2 தேர்வு மையங்களில் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.




சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இன்று (22.05.2012 - செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.








 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:

பிளஸ் டூ விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின் வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் 30ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
    • விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அலுவலகம் (புதுச்சேரி) ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். டி.பி.ஐ. வளாகத்தில் விற்பனை கிடையாது.
    • விடைத்தாள் நகல் எந்த ஒரு பாடத்திற்கும் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணம் செலுத்த வேண்டும். இதர பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் ஆகும்.

    மறு கூட்டல், மறுமதிப்பீடு:
    •  அனைத்து பாடங்களுக்கும் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறு கூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்த பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மறு கூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கான கட்டண தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட டி.டியை நேரில் ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும்.
    •  

      • விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
      • மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1010 கட்டணம். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.505 கட்டணம். மறுகூட்டலுக்கு முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் ஆகும.
      • விடைத்தாள் நகல், மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் மாணவர்களையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ தொடர்பு கொண்டு தவறான வழிகாட்டுதல் அளித்து மார்க்கை அதிகரித்து தருவதாக கூறினால், அதை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் வசுந்தராதேவி கூறியுள்ளார்.

      பெயிலாகும் மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத் தேர்வு:
      • பிளஸ் டூ தேர்வில் பெயிலாகும் மாணவர்கள் இந்த வருடமே கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உடனடி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
        • இதற்கான விண்ணப்பங்கள் 23ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
        • அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185, 4 பாடங்களுக்கு ரூ.235, 5 பாடங்களுக்கு ரூ.285, 6 பாடங்களுக்கு ரூ.335 கட்டணமாகும்.


          • 2012 மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான பள்ளிக்கூட மாணவர்கள் எஸ்.எச். என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர்கள் படித்த பள்ளியில் பெற்று பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

          பிளஸ் 2  தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.