தேடல் தொடங்கியதே..

Sunday 2 June 2013

குற்றாலத்தில் துவங்கிய சாரல் மழையால் ஆர்ப்பரிக்கும் அருவிகள் - குற்றாலம் நோக்கி படையெடுக்கும் கீழக்கரைவாசிகள் !

'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சமயத்தில் தென் மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இக்காலங்களில் குற்றால அருவிகளில் விழும் மூலிகை கலந்த இந்த தண்ணீரில் குளித்து மகிழவும், நோய் பிணியை அகற்றி செல்லவும் குற்றாலம் நோக்கி நம் கீழக்கரைவாசிகள் மட்டுமின்றி பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். 



தற்போது குற்றாலத்தில் குளு, குளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் அருமையாக விழத்  தொடங்கி உள்ளது. இந்நிலையில் கீழக்கரையில் நேற்று முன் தினம் இரவு குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் தூறியது. குற்றாலம் சீசன் காலங்களில் கீழக்கரையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகளின் கோடை விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் குற்றாலம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆண்டு தோறும் சீசன் தொடங்குவதற்கு அறிகுறியாக மே மாத இறுதியிலேயே குற்றாலம் பகுதியில் தென்றல் காற்று வீச தொடங்கி விடும். இதற்கிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விட்டதால் குற்றாலம் மலை பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை முதல் இதமான சூழல் நிலவுகிறது. 'கத்திரி வெயில்' எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட நிலையில் நேற்று முதல் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கி தொடங்கியுள்ளதாலும், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதாலும் குற்றாலம் சீசன் விரைவில் தொடங்கும் குளுகுளு சூழல் உருவாகியுள்ளது. 



இதனால் அங்கு பருவ மழை தொடங்கியிருப்பதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மெயினருவி மற்றும்  ஐந்தருவியில் 4 பிரிவுகளில் அமோகமாக தண்ணீர் விழுகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. இது சீசன் துவங்குவதற்கான அறிகுறி எனவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குறித்த காலத்தில் சீசன் தொடங்கி விடும் எனவும் தெரிய வருகிறது.

குற்றாலம் சீசன் குறித்து நாம் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

என்ன நண்பர்களே.. நாமும் குற்றாலத்திற்கு ஒரு விசிட் அடிப்போமா..?

No comments:

Post a Comment