தேடல் தொடங்கியதே..

Saturday 17 November 2012

கீழக்கரையில் கோழிக்கறி விலைச் சரிவால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி !


கீழக்கரையில் 'மீன் ' பிரதான உணவாக இருந்தாலும் கூட, தற்சமயம் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் ரூ.150 க்கு குறைவாக நல்ல மீன்களை வாங்க முடிவதில்லை. கீழக்கரையில் தற்போது ஒரு கிலோ ஆட்டுக் கறி ரூ.400 ஆகவும், மாட்டுக் கறி விலை ரூ.180 ஆகவும் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், 'இறைச்சிகள் எல்லாம்' வெறுமெனே காட்சிப் பொருளாக, பார்க்க மட்டுமே முடிகிறது. இந்நிலையில் தற்போது கீழக்கரையில் கோழிக்கறி விலை  நீண்ட  நாள்களுக்குப் பிறகு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உயிர்க் கோழி ரூ.63 க்கும், கறிக் கோழி ரூ.100 க்கும், சில இடங்களில் ரூ.90 க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோழிக் கறி கடைகளில் நேற்று முதலே கூட்டம் அலை மோதுகிறது. 







இது குறித்து கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவில் வாப்பா  பிரைலர்ஸ் கோழிக்கறி கடையின் உரிமையாளர். ஜனாப். அகமது காக்கா அவர்கள் கூறும் போது  "கர்நாடகாவில் கறிக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கர்நாடகாவில் இருந்து செல்லும் கறிக் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக கறிக் கோழிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேவையில்லாத இந்த பறவை காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் கறிக் கோழிகளை கேரளாவுக்குள் அனுமதிப்பதில் கடந்த வாரம் சிக்கல் நீடித்தது. இதனால், கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.150 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கமடைந்தது.


சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் முட்டைகள், கறிக் கோழிகள் தேக்கம் அடைந்தன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 10 லட்சம் கிலோ வரை கறிக் கோழிகள் கேரளாவுக்கு செல்லும். இதனால் தமிழகமெங்கும் கோழிக்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ஆகவே இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே இந்த விலை குறைவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

இராமநாதபுரத்திலும், கீழக்கரையிலும் கோழி வறுவல், தந்தூரி சிக்கன், சிக்கன் பக்கோடா, பொரியல் என்று அனைத்து சிக்கன் ஸ்டால்களும் குறைந்த விலையில், தங்கள் விற்பனையை முடுக்கி விட்டுள்ளது. இதனால் 'சிக்கன் பிரியர்கள்'  பெரும் சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளனர். 

4 comments:

  1. இவ்வளவா...! தகவலுக்கு நன்றி... கீழை இளையவன்

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி... கீழை இளையவன்

    ReplyDelete
  3. உன்கள் தளத்தில் என்னுடைய Kingdom of கீழக்கரை... தொழில்நுட்ப தளத்தை இணைக்கும் மாறு கேட்டு கொள்கின்றேன்.

    அன்புடன்,
    Kingdom of கீழக்கரை...

    ReplyDelete