தேடல் தொடங்கியதே..

Wednesday 10 July 2013

கீழக்கரையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்களுக்கு 'உயிரை காத்த உன்னத சேவை'க்காக பாராட்டு பத்திரம் - கோவை போலீஸ் கமிசனர் வழங்கினார்.

கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, சீரிய முறையில் பணியாற்றி வரும் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த யூசுப் சாகிப் அவர்கள் மகனார் முஹம்மது அனஸ் அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அனஸ் அவர்களுக்கு கடந்த 08.05.2013 அன்று உயிரை காத்த உன்னத சேவைக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வழங்கினார்.


காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்கள்  கோவை நகரின் பிரதானப் பகுதியான லக்ஸ்மி மில் சந்திப்பு அருகே உள்ள AXIS வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, சிக்கி தவித்த வங்கி பணியாளர்களை, விரைந்து மீட்டு அவர்களின் உயிரை காத்தமைக்காக, இந்த பாராட்டுப் பத்திரம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 


வெளிநாடு செல்லாமல் நமது தாய்நாட்டிலேயே பணி புரிய வேண்டும் குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்கிற நல்ல நோக்கோடு சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளில் பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 



பின்னர்  அதே வருடத்தில் அரசு தேர்வு எழுதி, 2011 ல் சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.  அதனை தொடர்ந்து ஓராண்டாக  சப் இன்ஸ்பெக்டரக்கு உண்டான‌ பல் வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, பணியில் இணைந்தார். தற்போது தனது சிறப்பான பணியினால் பல்வேறு பாராட்டுகளை பெற்று வருவது கீழக்கரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது. 

சப் இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்கள், இன்னும் பல்வேறு சாதனைகள் புரிந்து, உயரிய விருதுகளை பெற்று, காவல் துறையில் ஜொலிக்க, கீழை இளையவன் மற்றும் கீழக்கரை டாட் காம் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment