தேடல் தொடங்கியதே..

Monday 2 July 2012

கீழக்கரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 'பனை ஓலை பட்டைகள்' - மீண்டும் திரும்பும் நினைவலைகள் !

கீழக்கரையில் குப்பைகளை அகற்றி, அழிப்பது சம்பந்தமான முயற்சிகளும், குப்பை கிடங்கு குறித்த பிரச்சனைகளும் நாளுக்கு நாள் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது. அதே நேரத்தில் பொது மக்களும், குப்பைகளை கையாள வேண்டிய முறைகளையும், பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை குறைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும.



இந்த சாராம்சத்தின் அடிப்படையில், மீன் கடைகளுக்கு செல்லும் பொது மக்களில் சிலர், தற்போது பனை  ஓலைகளால் செய்யப்பட்ட பட்டைகளை எடுத்து செல்ல துவங்கி இருக்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. 


இது குறித்து புது கிழக்குத் தெருவை சேர்ந்த ரமீஸ் அவர்கள் கூறும் போது "இந்த ஓலை பட்டையில் மீன் வாங்கி செல்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்டையின் விலை 25 ரூபாய் தான். இதனை கழுவி சுத்தப்படுத்தி இரண்டு மாதங்கள் வரை கூட பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள் மாதத்திற்கு 50 ரூபாய்க்கு வாங்குவதை விட, இந்த பட்டைகள் தான் இலாபமானது. அனைவரும் இந்த ஓலை பட்டைகளை வாங்கி உபயோகப்படுத்த முன் வர வேண்டும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து நடுத் தெருவை சேர்ந்த ஹாமீது இபுராஹீம் அவர்கள் கூறும் போது "இது போன்று ஓலை பட்டைகளில் மீன் வாங்கும் போது, பழைய காலத்தின் நினைவுகளை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டம் வரை, நம் கீழக்கரையில் இந்த பட்டைகளின் பயன்பாடு, அனைவரிடமும் இருந்தது. பின்னர் பிளாஸ்டிக் பைகளின் வரவால், மெல்ல மெல்ல இதன் பயன்பாடு முற்றிலும் ஒழிந்து விட்டது. பொது மக்கள் மீண்டும் பயன்படுத்த துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது." என்று பழைய நினைவலைகளை அசை போட்டவாறு தெரிவித்தார். 



முதலில் இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஒழிந்தாலே, ஓரளவுக்கு மக்காத குப்பைகளின் பிரச்சனை முடிவுக்கு வரும். நம் நகரில் தேங்கும் குப்பைகளில் 40 % க்கும் மேல் இந்த பிளாஸ்டிக் பைகள் தான் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, எளிதில் மண்ணில் மக்கும், இந்த பனை ஓலை பட்டைகள் போன்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் இல்லாத கீழக்கரையை உருவாக்கும் முயற்சிகளில் வெற்றியடைய முடியும்.

1 comment:

  1. பனை ஓலைப்பட்டைகள் கிணற்றில் இருந்து நீர் அள்ளுவதற்கும்,கடையில் மீன் வாங்குவதற்கும் பலகாலங்களுக்கு முன் பயன் படுத்தி வந்தனர்.காலை வேளைகளில் மீன் பட்டையுடன் மீன் கடை நோக்கி செல்பவர்களை அநேகம் காணலாம்.பட்டை தயாரித்து விற்பவர்களும் உண்டு.உதாரணத்திற்கு பட்டையை செய்து விற்பனைக்கு விடும் ஒரு வீட்டிற்கு "பட்டைக்கார வீடு" என்றே பெயருண்டு.நாளடைவில் பட்டை தயாரிப்பவர்களும் காணாமல்ப்போய் விட்டனர்.இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பனை ஒல்லை பட்டையில் மீன்...வியப்பைத் தருகின்றது.

    ReplyDelete