தேடல் தொடங்கியதே..

Wednesday 4 January 2012

கீழக்கரை நகராட்சி தலைவர் - தமிழக அமைச்சர்கள் சந்திப்பு, பொலிவு பெறுமா நம் கீழக்கரை ?

சென்னையில் பல்வேறு அமைச்சர்களை சந்தித்து, நல்ல பல கோரிக்கைகளை அவர்களிடம் மனுவாக அளித்துள்ள நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரியா அவர்கள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ். விஜய் அவர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி அவர்கள், சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள்,  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் அமைச்சர் பழனிச்சாமி அவர்கள் ஆகியோரை சந்தித்து  வளர்ச்சிப்பணிகளுக்கான கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளார்.



இது குறித்து நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த ஹமீது இப்ராகிம் அவர்கள் கூறும் போது, "கீழக்கரை நகர் மன்ற தலைவர் அவர்கள், நம் நகர் வளர்ச்சிக்கு தேவையான, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து, நமதூரின் முக்கிய பிரச்சனைகளை களைய, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ,அமைச்சர் பெருமக்களிடம் பெறப்பட்ட வாக்குறுதிகளை  விரைவில் நிலை நிறுத்த, நம் நகர் நலனை முன்னிறுத்தி, இடை விடாது முயற்சி மேற் கொள்ள வேண்டும். அதற்கான உள்ளத்தின் உறுதியை, இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.



இந்த அமைச்சர்களின் சந்திப்புகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராபியத்துல் காதரியா அவர்களிடம் கேட்ட போது "நம் கீழக்கரையின் அனைத்து குறைகளும் விரைவில் களையப்பட்டு, அனைத்து அத்தியாவசிய பணிகளும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும் என அனைத்து அமைச்சர்களும் உறுதி மொழி அளித்திருப்பதாக", மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



முதன் முறையாக, கீழக்கரை நகராட்சியை பொறுப்பு ஏற்றிருக்கும் அ.தி.மு.க அரசு, நிச்சயம் நம் கீழக்கரை நலனில் அக்கறை கொண்டு, அனைத்து ஆக்க பணிகளிலும் தன் ஒத்துழைப்பை தரும் என்பதை நாம் நிதர்சனமாக நம்புவோம்.  தமிழக அமைச்சர் பெருமக்களிடம் பெறப்பட்ட வாக்குறுதிகள் காக்கப்படுமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment