தேடல் தொடங்கியதே..

Wednesday 8 February 2012

கீழக்கரையில் நடந்த 'புதிய மருத்துவ காப்பீட்டு' திட்டத்தின் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

கீழக்கரையில் இன்று (08.02.2012) கிழக்குத்தெருவிலுள்ள கைராத்துல் ஜலாலியா பழைய பள்ளிக் கட்டிடத்தில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடை பெற்றது.






இந்த மருத்துவ முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை அளித்தனர். ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளும், புதிய காப்பீட்டு திட்டமான, முதலமைச்சர் மருத்துவ திட்டத்தின் மூலம் பயன் பெறும் வழி முறைகளையும் கேட்டறிந்தனர்.






இது குறித்து மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த முஹம்மது இபுராஹீம் அவர்கள் கூறுகையில், "இந்த மருத்துவ முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இங்கு எனக்கு E.C.G, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு நல்ல மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்தான பிறகு, அதை விட சிறப்பான திட்டங்களுடன், இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயலாற்ற முனைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும், இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி தலைவி ராவியத்துல் கதரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.







கட‌ந்த ‌தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் இந்த புதிய திட்டத்தில் நீக்கப்பட்டு உள்ளன. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில 1.50 லட்சம் ரூபாய் ரூபாய் வரை வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகப்பட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவினை பெற இயலும்.




முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படுகிறது.

புதிய முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஹசீன் அவர்களை 8012266677 என்ற எண்ணிலோ அல்லது மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்களை 9444463923 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு கேட்கலாம். 

No comments:

Post a Comment