தேடல் தொடங்கியதே..

Saturday 25 February 2012

வாடிக்கையாகி வரும் ஆர். எஸ். மடை அருகே தாக்குதல்கள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கீழக்கரை பொது மக்கள் வேண்டுகோள்

நேற்று முன் தினம் (22.02.2012) இரவு 9 மணியளவில் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த கிதிர் மரிக்கா என்பவரின் மகன் அப்துல் அலீம்  இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு தனியார் பேருந்து ஒன்றில் திரும்பி கொண்டிருந்த போது, இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி, 10 க்கும் மேற்ப்பட்ட ஆர்.எஸ்.மடையை சேர்ந்த மர்ம நபர்கள், கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்ட அப்துல் அலீம்

பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிகிறது. தற்போது இவர் மேல் சிகிச்சைக்காக, இராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போன்று இரவு நேரங்களில் பேருந்தில் பயணிக்கும், கீழக்கரை  பொது மக்கள் மீது, இது போன்ற வன் முறை தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெறுவது வருத்தமளிக்கிறது.


இராமநாதபுரம் அருகில் ஆர். எஸ். மடை கிராமம்


இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட எந்த ஒரு நபர்களும் கைது செய்யப் படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட அலீம் அவர்கள் கூறுகையில் "என்ன காரணங்களுக்காக, என் மீது இந்த கொலை வெறி தாக்குதல் நடை பெற்றது என்று தெரியவில்லை.என்னை போன்று எந்த ஒரு அப்பாவியும் பாதிக்கப்படக் கூடாது" என்று சரியாக பேசவே முடியாமல் தெரிவித்தார்.  


நன்றி : தினத் தந்தி

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, நேற்று காலை 11 மணியளவில்  300 க்கும் மேற்பட்ட கீழக்கரை பொதுமக்கள், இராமநாதபுரம் எஸ். பி அலுவலகத்திற்கு திரண்டு சென்று மனு கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறித்தி, கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் சார்பாகவும் முதலமைச்சர் தனிப் பிரிவு, தென் மண்டல சரக காவல் துறை தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கீழக்கரை பொது மக்களிடம் இருந்து  பெறப்பட்ட  மனு மீது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை அதிகாரிகளால் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

1 comment: