தேடல் தொடங்கியதே..

Monday 27 February 2012

கீழக்கரையில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் கேஸ் சிலிண்டர்கள் - ஓர் எச்சரிக்கை தகவல் !

கீழக்கரை நகரை பொறுத்த மட்டில், மிகுந்த நெருக்கமான வீடுகளையும், மிக குறைந்த பரப்பளவைக் கொண்ட இருப்பிடங்களையும் ( 4 கோல் வீடுகள், 5 கோல் வீடுகள், 300 சதுரடிகள் ) அதிகளவில் கொண்டு காணப்படுகிறது. நம் கீழக்கரையில் சிறிய பரப்பளவில் வீடுகள் கட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், வீடுகளின் இல்லத்தரசிகள் பெருமளவு நேரங்களை செலவழிக்கும் இடமாக இருக்க கூடிய அடுப்பங்கரைகள், சமையலறைகள் மிக, மிக குறுகிய இடத்தில் 'கோழிக் கூடு' போன்றே அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.

நெருக்கமான வீடுகள் - கிழக்குத் தெரு
தற்போது விறகடுப்புகள் பெரும்பாலும் காலாவதியாகி விட்டதால், நமது ஊரில் 80 % க்கும் மேலாக கேஸ் அடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புதிதாக கட்டும் வீடுகளில் கூட 'புகைக் கூடு' என்று சொல்லக் கூடிய புகைப் போக்கிகள் அமைக்கப் படுவது இல்லை. இதனால் கேஸ் அடுப்புகளுக்கான சிலிண்டர்கள் காற்று கூட செல்ல வழியில்லாத, இந்த சிறிய அறையான, சமயலறையில் வைக்கப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் விநியோகிஸ்தர்களால் வழங்கப்படும் சிலிண்டர்கள் பல நேரம் பழுதடைந்தவைகளாக, கேஸ் கசிவு இருக்கக் கூடியதாக இருக்கிறது. இதை முறையாக சரி செய்யப்படவில்லை என்றால், பெரும் ஆபத்துக்களை இவை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, கீழக்கரை சின்னக்கடை தெருவில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் வபாத்தாகியது குறிப்பிடத்த்தக்கது.

நெருக்கமான வீடுகள் - நடுத் தெரு

இது குறித்து கீழக்கரை சேது கேஸ் ஏஜென்சி மேலாளர் மணி அவர்களிடம் கேட்ட போது, "இது போன்று கேஸ் சிலிண்டர் கசிவுகள் குறித்து, பொது மக்கள் புகார்கள் தெரிவித்ததின் பேரில் எங்களுக்கு சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் துரித நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். இது போன்று இனி வரும் காலங்களில் புகார்கள் எழாதவாறு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ", என்று உறுதியளித்தார்.


கீழக்கரையிலுள்ள சேது கேஸ் ஏஜென்சி



இவை ஒரு பக்கம் இருந்தாலும், நம் கவனமின்மையும் மற்றும் அடிப்படை எச்சரிக்கைகளை உணராமல் இருப்பதும் போன்ற காரணங்களினால் பெரும்பான்மை நேரங்களில் தான் இது போன்ற விபத்துகள் நிகழ்ந்து விடுகிறது.  இது போன்ற நேரங்களில் இந்த தீ மிகவும் வேகமாக பரவி 2 நிமிடங்களில் உயிர் அபாயம் விளைவிக்க நேரிடுகிறது. ஒரு முழு வீட்டை 5 நிமிடங்களுக்குள் பஸ்பமாக்கி விடும் இயல்பு இந்த தீக்கு உள்ளது. ஆகவே நாமும் மிகுந்த எச்சரிக்கையோடு இந்த கேஸ் சிலிண்டர்களை கையாள்வது அவசியமான ஒன்றாகிறது.

நெருக்கமான வீடுகள் - சின்னக் கடைத் தெரு
நாம் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியவைகள்:

1.   கேஸ் சிலிண்டரை வீட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்னால், அதை கொண்டு வரும் லோடு மேனை வைத்தே, முறையாக பரிசோதனை செய்து, பிறகு அதற்கான சிலிப்பில் கையொப்பமிடவும்.

2.  படுக்க போகும் முன்பு, மறக்காமல் கேஸ் சிலிண்டரை அணைத்துவிடுங்கள். புதிய மற்றும் பழுதில்லாத ட்யூப்களையே பயன்படுத்தவும்.

3.  புதிய வீடுகள் கட்டும் போது, போதிய இடவெளியோடு கட்டமைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு சமையலறையை கொஞ்சம் காற்றோட்டம் நிறைந்ததாக, விசாலமானதாக இருக்குமாறு கட்ட முயற்சி மேற்க் கொள்ளுங்கள்.

4.  சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக் கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன. இவற்றை மாதம் ஒரு முறையாவது, ஏதேனும் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டும்.

5.  வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்!

6.  இல்லத்தில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் சிறந்த முறையில் அமைத்துகொள்ளுங்கள்.ஓவர்லோட் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது வீட்டின் மின் இணைப்புகளை பராமரிப்பது நல்ல வழக்கமாகும்.

7.   எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அடுப்படியில் வைக்காதீர்கள்.

நெருக்கமான வீடுகள் - தெற்குத் தெரு

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய செயல்கள் :

1.  உங்கள் துணியில் தீப்பற்றிக்கொண்டால், உடனே நின்று, உடை களைந்து, தீ அணையும்வரை மண்ணில் உருளவும். ஓடினால் தீ இன்னும் பரவும் வாய்ப்பு உள்ளது.

2.  மூடிய கதவுகளை திறக்கும் முன்பு அவற்றின் வெளிபுறத்தில் தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்ளுங்கள். அவ்வாறு திறக்க நேரிட்டால், கதவின் தாழ்பாள், விரிசல்களில் தங்கள் பின்னங்கையை வைத்து பார்த்து சோதித்துகொள்ளுங்கள்.

3.  வெப்பத்தை அறிய உள்ளங்கையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால் தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.

4.  அதிகமான புகைமூட்டமுள்ள பகுதியை தவழ்ந்த நிலையில் மட்டுமே கடக்கவும். ஏனெனில், புகையும், நச்சுவாயுவும் முதலில் விட்டத்திலிருந்து தான் தொடங்கும்.

5.  கதவை திறந்து தப்பிக்கும் பொழுது, தீ மேலும் பரவாமல் இருக்க கதவை மூடிவிட்டு செல்லவும்.

6.  வீட்டிற்கு வெளியே வந்து அடைந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீ அணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும்.

7.  தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையதிற்கு உடனடியாக தகவல் அளியுங்கள். அவர்கள் தொலைபேசி எண்களை எப்போதும் மனதில் பதிய வைத்திருப்பது அவசியமாகும்.

சாலையோரம் அடுக்கப்பட்டு இருக்கும் சிலிண்டர்கள்

எதிர் பாராமல் தீ விபத்து எந்த நேரத்தில் ஏற்பட்டாலும், நாம் உடனடியாக அழைக்க வேண்டிய, நிச்சயம் மனதில் கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

  தீயணைப்புத் துறை உதவிக்கு - 101       அவசர போலீஸ் உதவிக்கு  - 100

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தரும் பாதுகாப்பு குறிப்புகள்

நம் கீழக்கரை பொதுமக்கள் இந்த கேஸ் சிலிண்டர் விசயத்தில் மிகுந்த கவனம் கொண்டு, இறைவன் நாடினால் விழிப்போடு இருந்து, 'ஆபத்துக்கள் வரும் முன் காக்க' முயற்சி மேற்க்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment