தேடல் தொடங்கியதே..

Thursday 14 June 2012

கீழக்கரையில் பழுதடைந்த மின் கம்பங்களால் நெருங்கி வரும் அபாயம் - உயிர்ப் பலி ஏற்படும் முன் தவிர்க்கப்படுமா ?

கடற்கரை நகரமாகத் திகழும் நம் கீழக்கரை நகரில் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மிகுந்த நெருக்கத்திலான வீடுகளும், மிகக் குறுகிய சாலைகளும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் சமீப காலமாக மின் கம்பங்களிலிருந்து, உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் கடந்த காலங்களில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. 




இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நகரின் மையப் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பி நள்ளிரவில் திடிரென அறுந்து விழுந்தது. இரவு நேரமாக இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால், பள்ளிக் குழந்தைகள் நடமாடும் அந்த பகுதியில், கடுமையான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.




மேலும் கீழக்கரை நகரில் இருக்கும் பெரும்பாலான மின் கம்பங்கள் கடலின் உப்புக் காற்றாலும் சிதிலமடைந்தும், சேதமடைந்தும், மிகப் பழையதாக, முறித்து விழும் நிலையில் காணப்படுகிறது. பல இடங்களில் எப்போது முறித்து விழுமோ? என்று அச்சப்படும் வகையில், ஊசலாடும் எலும்புக் கூடாக, மின் கம்பங்கள் காட்சியளிக்கிறது. இதனால் பொது மக்கள் அச்சத்துடனே நடமாடும் அவல நிலையில் உள்ளனர். பல மின் கம்பங்களில் மின்சார வயர்கள் சிக்கலான வகையில் பின்னிப் பிணைந்து உரசி கொண்டிருப்பதால், அடிக்கடி தீப்பொறிகளுடன், மக்கள் நடமாடும் வீதிகளில் விழுகிறது.



இது குறித்து பலமுறை முறையான புகார் மனுக்கள் அளித்தும் பயன் ஏதும் இல்லை. எனவே பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனடியாக மாற்றி, நம் நகரின் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க அனைத்து பொது நல அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

1 comment: