தேடல் தொடங்கியதே..

Thursday 30 May 2013

கீழக்கரையில் 'திடீர்' மின் கட்டண உயர்வால் புழுங்கும் பொதுமக்கள் - விளக்கம் தர மறுக்கும் அலுவலர்களுக்கு பொது நல அமைப்பினர்கள் கடும் கண்டனம் !

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்து, உடனடியாக ஏப்ரல் 1ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அதிரடியாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாயினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டு துள்ளாட்டம் போட்டது. இப்போது மீண்டும் மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என வெளியாகி இருக்கும் செய்தியால் பொது மக்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர் .






இந்நிலையில் கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தத் சென்ற பொது மக்களுக்கு, பேரதிர்ச்சியாக ரூபாய் 2500 கட்ட வேண்டிய இடத்தில் திடீரென 6000 ஆக உயர்ந்திருந்தது. இதனால் அவ்வளவு தொகையை எடுத்து செல்லாத பொதுமக்கள், பணம் கட்டாமலேயே வீடு திரும்பினர். பலர் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கும் போது 'துட்டு இருந்தா கட்டு.. இல்லைனா வீட்டுக்கு நடைய கட்டு..' என்று இரக்கமில்லாமல் விரட்டியடிப்பது தினமும் நடந்து வருகிறது.

சாம்பிள் 'மின் கட்டண  கொள்ளை' இரசீது 




இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் மின்சார கட்டண வசூல் மையம் நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் மின்சாரக் கட்டணம் செலுத்த வயது முதிர்ந்தவர்களும், பெண்களும் 80 ரூபாய் ஆட்டோக்கு வாடகை கொடுத்து அங்கு செல்கின்றனர். தற்போது மின்சார வாரியத்தால் திடீரென இரட்டிப்பு பணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் நொந்து போயுள்ளனர்.

எதற்காக இந்த தொகையை வசூல் செய்கிறீர்கள்..?என்று முறையாக அலுவலர்களிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை.  இது போன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி மின்சாரக் கட்டணத்தை தாறு மாறாக உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.  உடனடியாக இது குறித்து விளக்கம் தரப்படாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து நேரடியாக பாதிக்கப்பட்ட கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையை சேர்ந்த 'வீனஸ்' FOURTH BOY நெய்னா அவர்கள் நம்மிடையே பேசும் போது "இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல என்று தெரியவில்லை. மின் கட்டணம் செலுத்த அட்டையில் மின் கணக்கீட்டாளர் குறித்து சென்ற தொகையை எடுத்து சென்றேன். அங்கு கட்ட வேண்டிய தொகையை பார்த்தால் CC CHARGES, ARREARS, DEPOSIT அது.. இது.. என்று ஏகத்துக்கு போட்டு தீட்டி விட்டார்கள்.

அது சம்பந்தமாக கனிவுடன் அலுவலர்களை அணுகி தகவல் பெற முயன்றும் பயனில்லை. 'பேசாமே பணத்தை கட்டீட்டு போங்க. எங்கள் கிட்டே சட்டம்லாம் பேசப்படாது.' என்று மட்டும் பதில் வருகிறது. அங்கு என்னைப் போலவே 50 க்கும் மேற்பட்டோர் மிகுந்த குழப்பத்துடன் பணம் கட்டாமலேயே திரும்பி செல்வதை பார்க்கும் போது மனசு தாங்க வில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட பொது நல அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தீர்வு காண முயல வேண்டும்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு  முன்னர் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது மின் கட்டண உயர்வு குறித்து பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் "தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரக் கட்டணத்தை திருத்தி அமைத்து அமல்படுத்தச் சொன்னாலும் அதற்கான சுமையை அரசே ஏற்கும். கூடுதல் கட்டணச் சுமை நுகர்வோர்களிடம் சுமத்தப்படாது. கட்டணம் மாற்றியமைக்கப்பட்டால் எவ்வளவு என்பது குறித்து அறிந்து அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மக்கள் பாதிக்கப்படாத வகையில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்" என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார வாரிய அலுவலர்களின் 'சோம்பேறித்தனம்' குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் மின்சார கணக்கெடுப்பு பணியாளர்களின் மெத்தனப் போக்கால் அவதியுறும் பொதுமக்கள் !
http://keelaiilayyavan.blogspot.in/2012/06/blog-post_29.html

என்னப்பா நடக்குது எங்க ஊருலே...

No comments:

Post a Comment