தேடல் தொடங்கியதே..

Wednesday 21 March 2012

கீழக்கரையில் புதிதாய் முளைத்திருக்கும் 'ஹைடெக் வட்டிக் கடைகள்' - அலைமோதும் பரிதாபத்துக்குரிய பொது மக்கள் !

தங்க நகைகளுக்கு ஈடாக கடன் பெற்று, காலம் முழுதும் வட்டி கட்டுவது என்பது இன்று தவிர்க்க முடியாத ஆறாவது விரலாகிவிட்டது. அதிபராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் ஒரு முறை இந்த மாய வலையில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... செக்கு மாடாகி சுற்றிச் சுற்றி நுரை தள்ளிச் சாக வேண்டிய சூழல் தான் தற்போது எங்கும் நிலவுகிறது. தற்போது நம் கீழக்கரையிலும் தங்க நகைகளை அடமானம் பெற்றுக் கொண்டு, கேட்கும் பணத்தை, கை நிறையக் கொடுக்கும் ஹைடெக் 'உடனடி தங்க நகை கடன்' வழங்கும் நிறுவனங்கள் பொது மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து வருகிறது.


வட்டிக் கடைகளின் கூடாரங்கள் இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை

இந்த அதிநவீன வட்டிக் கடைகள் 'மார்வாடு செய்யும் சேட் ஜி' க்களையும் விஞ்சும் வண்ணம் அநியாய வட்டிகளை வசூல் செய்து வருகிறது. நம் கீழக்கரை நகரிலுள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில், மூன்று புதிய நிறுவனங்கள்  திறக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் கடைகளில் எந்த நேரமும், பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இது குறித்து  வட்டி கட்ட முடியாமல் தங்க நகைகளை இழந்த நடுத்தெருவைச் சேர்ந்த முகைதீன் கருணை அவர்கள் கூறும் போது "அவசர தேவைகளுக்காக, பணம் தேவைப்படும் போது சில மணி நேரங்களிலேயே, பணத்தை புரட்ட, வேறு வழியில்லாமல் தான் இங்கு வருகிறோம். இங்கு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளும் வட்டிக் கடை ஊழியர்கள், புரியாத மொழியில், கண்ணுக்கு தெரியாத எழுத்துக்களில் எழுதி இருக்கும், பல பக்க தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர்.



வள்ளல்கள் வாழும் ஊரிலே... வட்டிக் கடையா ?

இங்கு பணத் தேவைகளுக்காக, அவசர கோலத்தில் வரும் எங்களை போன்றவர்கள், அவர்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்தை போட்டு விட்டு பணத்தை வாங்கி செல்கிறோம். வட்டி விகிதமோ, அவர்களின் நடைமுறை விதிமுறைகளோ எங்களுக்கு தெரியாது. சில மாதங்கள் வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், உடனே நகைகள் ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வந்து விடுகிறது. வட்டி கட்ட கொஞ்சம் தாமதித்தாலும், இங்கு தங்கும் தங்கம் நிச்சயம் நம்மிடம் திரும்பாது. என் மனைவியுடைய தாலி சங்கிலி, இந்த அநியாய வட்டிக் கடையில், திருப்ப முடியாமல் மூழ்கி விட்டது" என்று வழியும் கண்ணீருடன் தெரிவித்தார்.  

இது குறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். முஹம்மது அபுதாகிர் அவர்கள் கூறும் போது  "சில தனியார் வங்கிகளும் கந்துவட்டி வசூலில் இறங்கி இருக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டியைவிட இந்த வங்கிகள் அதிகமாகவே வாங்குகின்றார்கள். கடந்த 2003-ம் ஆண்டு கந்து வட்டித் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 


வட்டிக் கடைகளின் கூடாரங்கள் இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை


ஆனால், இந்த சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை புள்ளிவிவரங்கள் இல்லை, ஜாமீனில் எளிதில் வெளி வர முடியாத அளவுக்கு சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டுமே இதற்குத் தீர்வு" என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார். 

தங்கத்தின் விலை உயர்வால் நகைகளை அடமானம் வைத்து, கடன் பெறுவோர் தற்போது அதிகரித்துள்ளனர். அதற்கேற்ப நகை கடன் வர்த்தகத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. வங்கிகளின் தனிநபர் கடன், வாகனக் கடன், வியாபார கடன் பெற பல ஆவண நடைமுறைகளை முடிக்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசமும் அதிகம். ஆனால், நகை கடனில் குறைந்த நேரத்தில் உடனடி பணம் கிடைப்பதால், இங்கு அதிகளவில் மக்கள் குவிகின்றனர். வங்கிகளில் நகை கடனுக்கு தனியாரை விட குறைந்த அளவே கடன் அளிப்பதால், தனியார் நகை கடன் நிறுவனங்களிடம் மக்கள் செல்கின்றனர்.




நம் கீழக்கரையில் வட்டியில்லா கடன் திட்டத்தை 'இஸ்லாமிய பைத்துல்மால்' மற்றும் இன்ன பிற சமூக நல அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு தானிருக்கிறது எனபது மட்டும் இனிப்பான செய்தி. அதே நேரம் இன்னும் வீரியமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அமைந்தால், பல குடும்பங்களின் வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை. இறைவன் காட்டித் தந்த வழிதனில்...வட்டிப் பிணி நெருப்பில் வறுபடும், மனித நேயத்தை சீரமைப்பு செய்ய, வட்டியின் கொடிய வலைதனில் இருந்து மீள, ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்காத வரை... வட்டிக் கடைக் கூடாரங்கள் இங்கு முகாமிட்டுக் கொண்டே தானிருக்கும்...

1 comment:

  1. namma ooru perum pullikal ninathal vattiya uruthiya olikkalam.ithu pondra hi tech kanthu vatti kadai kalum kilakaraiya vittu kaliyayedum

    ReplyDelete