தேடல் தொடங்கியதே..

Wednesday 30 May 2012

கீழக்கரையில் மீன்பிடித் தடை காலம் முடிவடைந்ததால் கடலுக்குள் செல்லும் விசைப் படகுகள் - மீனவ நண்பர்கள் மகிழ்ச்சி!

தமிழக கடல் பகுதிகளில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு தோறும் 'ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை' கடலில் மீன் பிடிப்பதற்கான தடை காலம் அமல் படுத்தப்படுகிறது. இதையொட்டி அமலுக்கு வந்த  மீன் பிடி தடை காலம் இன்றோடு (29.05.2012) முடிவடைகிறது.  இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.


நம் கீழக்கரை நகரின் பூர்வீக தொழிலாக, இந்த மீன் பிடித் தொழில் கருதப்படுகிறது. கீழக்கரை மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. கடந்த 45 நாள்களும் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விசைப் படகுகள் தற்போது டீசல் நிரப்பப்பட்டு, கடலுக்குள் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இத்தனை நாளும் விதிக்கப்பட்டிருந்த தடை நாட்டுப்படகுகளுக்கு பொருந்தாது என்பதால், நேற்று  வரை மீனவர்கள், பைபர் படகு மற்றும் கட்டு மரத்தில் மட்டும் சென்று கடற்கரை ஓரங்களில் மீன் பிடித்து வந்தனர்.



இவர்கள் பிடித்து வரும் மீன்களையும், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குவதால், கரை வலையில் பிடித்து வரப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஆழ்கடலில் மீன் பிடிக்க விசைப் படகுகள் செல்லாததால், மீன் கடைகளில் அனைத்து மீன்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இதனால் கடல் உணவு வகைகளை பிரதான உணவாக உண்ணும், நமது ஊர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். தற்போது தடைக் காலம் முடிவடைந்ததையொட்டி கீழக்கரை, காஞ்சிரங்குடி, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதி மீனவ நண்பர்கள், விசைப் படகுகளுடன் கடலுக்குள் செல்ல தயாராகி விட்டனர்.

தடை காலம் முடிவடைந்து கடலுக்குள் செல்வது பற்றி புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த மீனவத் தோழர். ஜனாப்.முஹம்மது ஜலீல் அவர்கள் கூறியதாவது:-



"மீன் பிடிக்க போகாத 45 நாட்களும் விசைப் படகுகளுக்கு பெயின்ட் அடித்து பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டோம். படகில் உள்ள சிறு சிறு பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ததோடு, வலைகளையும் பிரித்து மீண்டும் பிண்ணி சீர்படுத்தினோம். தமிழக அரசு எங்களுக்கு மீன் பிடி தடை காலத்தில் ரூ.2000 வழங்கியது எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்னும் இந்த தொகையை உயர்த்தி வழங்கினால் நன்றாக இருக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.



ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை, மறுபடியும் முத்தமிடக் காத்திருக்கும் விசைப் படகுகளும், மீண்டும் ஆர்வமுடன் கடல் அன்னையின் மடியில் தவழ அணி வகுத்து நிற்கும் மீனவ பெருமக்கள் மட்டுமல்ல...  இவர்களை துயரங்களுடன் கடலுக்குள் வழியனுப்பி விட்டு 'என்று திரும்பும் எங்கள் குடும்பத் தலைவனின் படகு ??' என்று கவலைகளுடன் காத்திருக்க மனைவி மக்களும் இன்றைய தினம் தயாராகி விட்டார்கள்.  இவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெறவும், கனவுகளுடன் கடலுக்குள் சென்று திரும்பும் நம் கட்டிளங் காளைகள் அனைவரும், கூடைகள் ததும்ப, ததும்ப மீன்களை கரையேற்ற நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்...

No comments:

Post a Comment