தேடல் தொடங்கியதே..

Tuesday 26 June 2012

கீழக்கரையில் குளிர்ச்சி தரும் மங்குஸ்தான், லிச்சி பழங்களின் அனல் பறக்கும் விற்பனை - கடும் விலையால் பொதுமக்கள் வருத்தம் !

நம் கீழக்கரை நகரின் வள்ளல் சீதக்காதி சாலையில் (ஜும்மாபள்ளிவாசல் முன்புறம்), மங்குஸ்தான் மற்றும் லிச்சி பழங்களின் விற்பனை களை கட்டி இருக்கிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் விளையும் இந்த பழங்கள், நம் ஊருக்கு வருடம் தோறும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குற்றாலம் சீசன் துவங்கப்படாத நிலையில், இந்த பழங்களின் விலை ஒரு கிலோ ரூ.200 க்கு விற்பனையானாலும், இதனை போட்டி போட்டு வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். 



இது குறித்து திருநெல்வேலி பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் அவர்கள் கூறும் போது "சென்ற ஆண்டு சீசன் முன் கூட்டியே துவங்கிய காரணத்தினால், இந்த பழங்களின் விலை ரூ.120 ஆகவே இருந்தது. இறைவன் நாடினால், இன்னும் ஒரு மாத காலத்தில் விலை படிப் படியாக குறையும். இந்த கீழக்கரை பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை மினி லாரிகளில் பழங்களை கொண்டு வந்து விற்கிறோம். இந்த முறையும் விற்பனை சிறப்பாக இருக்கிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



இருப்பினும் பொது மக்களில் பலர் விலையை கேட்டதும், வந்த வழியே திரும்பி விடுகின்றனர். தற்போது நடுத்தர வாசிகளுக்கு, கடும் விலை உயர்வால் எட்டாக் கனியாக இருக்கும் இந்த பழங்கள், வரும் மாதங்களில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. vry yummy news
    never mind about rate v need good n safty furits

    ReplyDelete