தேடல் தொடங்கியதே..

Saturday 28 July 2012

கீழக்கரையில் அவசர கதியில் கட்டப்பட்டு வரும் குப்பை கிடங்கில் தரமற்ற பணிகள் - கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு !

கீழக்கரையின் குப்பைகள் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க, குப்பை கிடங்கை விரைந்து கட்டி முடிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்ற நிலை தற்போது உள்ளது. இதற்கிடையே தொடர் இடயூறுகளாலும், சமூக விரோதிகளின் அடாவடியாலும் முடங்கி கிடந்த சுற்றுச்சுவர் கட்டும் பணி பல்வேறு தடைகளையும் தாண்டி, பலத்த காவல்துறை கண்காணிப்புடன் அவசர கதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர் மன்ற கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், இடி மின்னல் ஹாஜா, சாகுல் ஹமீது, முகைதீன் இபுறாகீம், பாவா கருணை, அன்வர் அலி, தங்கராஜ் ஆகியோர்கள் அவசர கதியில் கட்டப்பட்டு வரும் குப்பை கிடங்கில் தரமற்ற பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 




இது குறித்து நகர் மன்ற கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் கூறும் போது "இங்கு நடக்கும் வேலைகளை பார்க்கும் போது, கண்களில் நீர் வருகிறது. நிச்சயம் இந்த சுற்றுச் சுவர் எத்தனை ஆண்டுகள் தாங்கும் என்று தெரியவில்லை. மக்கள் பணம் இப்படி வீணடிக்கப்படுவது மிகுத்த வருத்தமளிகிறது. கான்கிரீட் என்றால் ஆயுதம் கொண்டு உடைப்பதே கடினம், ஆனால் இங்கு 'கோழி கிளைத்தாலே பள்ளமாகி விடும்' போலிருக்கிறது. ஒப்பந்ததாரர் செய்யும் இந்த தரமில்லாத வேலைகளுக்கு நகராட்சி பணம் பட்டுவாடா செய்யக் கூடாது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 




இது குறித்து நகர் மன்ற கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா அவர்கள் கூறும் போது "எதை சொல்லுவது.. எதை விடுவது... நான் நல்லதை எடுத்து சொன்னால் குப்பை கிடங்கின் வேலைகளை நிறுத்த சதி செய்வதாக கூட சொன்னாலும் சொல்லுவார்கள். பரவாயில்லை... சொல்றேன் கேளுங்க ... ஹாலோ பிளாக் என்று சொல்லப்படும் கட்டுமானப் பொருளின் தரம் மிக மோசமாக இருக்கிறது, லேசாக கையை வைத்து அடித்தாலே மாவாக நொறுங்குகிறது. 




12mm கட்டுமான முறுக்கு கம்பிகள் உபயோக்கிக்க வேண்டிய இடத்தில் 8mm உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரெடி மிக்ஸ் இயந்திரத்தில் கலவையை குழைக்காமல் கைகளால் குழைகிறார்கள், சலங்கை மண்ணை உபயோகிக்காமல் குருத்த மண்ணை உபயோயக்கிறார்கள். இந்த தரமற்ற வேலை தொடர்ந்தால், இந்த சுற்றுச் சுவர் மதிலை இனி சமூக விரோதிகள் யாரும் இரவில் வந்து இடிக்க வேண்டியது இல்லை. இரண்டு வருடத்தில் தானாகவே விழுந்து விடும்," என்று விரக்தியுடன் தெரிவித்தார்.




இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம கேட்டபோது “கட்டுமானப்பணி அதி வேகமாக நடை பெற்று வருகிறது.  ஒரு பகுதி முழுவதும் சுற்றுச் சுவர் கட்டும் பணி முடிவடைந்து தற்போது குப்பைகளை தரம் பிரிக்க குப்பை கிடங்கின் நடுவே சிமெண்டு தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே வேகத்துடன் வேலை நடந்தால் எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவடைந்து விடும். 

இங்கு நடைபெறும் வேலைகள் தரமில்லாமல் இருப்பதாக சில கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு 'தொடர்ந்து தொட்டதெற்கெல்லாம் குறை' கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் எந்த பணிகளும் சிறப்பாக நடக்காது. நாங்கள் தொடர்ந்து வேலை நடக்கும் இடத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்து வருகிறோம். அவ்வாறு தரம் இல்லாத வேலைகள் இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 




நம் கீழக்கரை நகருக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் (2009-2010) குப்பை கிடங்கு  சுவர் கட்ட ரூ.20,00,000 மும்,  ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் IUDM கீழ் (2011-2012) சுற்றுச் சுவர் கட்ட ரூ.21,00,000 மும் , குப்பை கிடங்கில் (விண்ட்ராஸ்) சிமெண்டு தளம் அமைக்க ரூ.29,00,000 மும், ஆக மொத்தம் ரூ.70 இலட்சத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குப்பை கொட்டும் தளம் என்பது கீழக்கரையின் குப்பைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமைய இருக்கும் தருணத்தில், அரசாங்கம் ஒதுக்கியுள்ள சிறப்பான நிதியிலிருந்து தரமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், குப்பைகளை போக்க வந்த பணத்தினை யாரும் எள்ளளவும் கூறு போட்டு விடக் கூடாது என்பதும், காலத்திற்கும் மாண்பு மிகு முதல்வர் அவர்களின் பெயர் சொல்ல உறுதியுடன் நிலைத்து நிற்கும் கட்டுமானமாக குப்பை கிடங்கு அமைய வேண்டும் என்பதும் பொது மக்கள் அனைவரின் எதிர் பார்ப்பாக இருக்கிறது.

1 comment:

  1. நகரில் உள்ளாட்சி அமைப்பு என்று ஒன்று இருப்பதையே மறக்க முயல்வோம்.இதை பற்றி சிந்தித்து ஏன் நம் சக்தியை வீணாக்க வேண்டும்? இறைவா, இன்னும் நான்கு வருடங்களை எப்படி கடத்த போகிறோம். எங்கள் ஊருக்கு விதிக்கப்பட்டது இதுதானா?

    யார் சொல்லுவது உண்மை? யார் சொல்லுவது பொய்? நீயே தீர்ப்பு நாளின் அதிபதி.

    மொத்தத்தில் இது நல்லதுககு இல்லை

    ReplyDelete