தேடல் தொடங்கியதே..

Friday 21 September 2012

கீழக்கரையில் அமைதியில் ஆரம்பித்து ரகளையில் முடிந்த நகராட்சி கூட்டம் !

கீழக்கரை நகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை அன்று  மாலை 4 மணியளவில் நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகம்மது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 நலத் திட்ட பொருள்கள் மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் அமைதியான முறையில் துவங்கிய கூட்டத்தின் முடிவில் தகாத வார்த்தையால் சென்ற நகர் மன்ற கூட்டத்தில் 10 ஆவது வார்டு கவுன்சிலர் பேசியதாக கூறியும், அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவருடன் சில கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால், கூட்டம் சலசலப்புடன் நிறைவுற்றது.




இந்த கூட்டத்தில் 10வது வார்டு உறுப்பினர் அஜ்மல்கான் மூலம் கொண்டு வந்துள்ள நலத் திட்ட பொருளில் "கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நவீன குளிர்சாதன வசதியுடன் மீன், கோழி, ஆடு, காய்கறி விற்பனைக்காக 25 கடைகளை கட்டவும், உணவுபொருட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் வகையிலும், வசதியை ஏற்படுத்தும் பொருட்டும் மத்திய அமைச்சர் சரத்பவார் பரிந்துரை நிதியில், மீன்வளத்துறை மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த விண்ணப்பத்தை நகர் மன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நகர் மன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது என்றும் எந்த எழுத்து மூல ஆவணமும் இல்லாமல் இனி நலத் திட்ட பொருளாக அரசியல் கட்சிகளின் வேண்டுதல்களை ஏற்கக் கூடாது என்றும் கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா (20வது வார்டு), முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), ஜெயபிரகாஷ் (21வது வார்டு) சாகுல்ஹமீது (5வது வார்டு) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




மேலும் ஒருமையிலும், தகாதமுறையிலும் சென்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் அஜ்மல்கான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் க‌வுன்சிலர் அஜ்ம‌ல்கான் வ‌ருத்த‌ம் தெரிவிக்க‌ மறுத்ததால், பெரும் கூச்சல் குழப்பத்துடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. க‌வுன்சில‌ர் அஜ்மல்கானுட‌ன்  சில கவுன்சிலர்கள் நேருக்குநேர் கைகலப்பில் ஈடுபட முய‌ன்ற‌ன‌ர். நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த கமிஷனர் முகம்மது முகைதீன் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்து கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

No comments:

Post a Comment