தேடல் தொடங்கியதே..

Wednesday 21 November 2012

கீழக்கரை அருகே ஈமு கோழிகள் மீது இலட்சக் கணக்கில் முதலீடு - முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் !

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களிடம், ஈமு கோழிகளை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்தது. ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குரு திடீரென தலைமறைவானர். இதனையடுத்து நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தவர்கள், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். 

இதைத் தொடர்ந்து  சுசி ஈமு உரிமையாளரும், நிர்வாக இயக்குனருமான குருசாமி, கைது செய்யப்பட்டார். இந்த நிறுவனத்தின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது வரை தமிழகம் முழுவதும் குருசாமி மீது 4 ஆயிரம் பேர் புகார் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர். இப்பரிந்துரையை ஏற்ற ஈரோடு ஆட்சியர் சண்முகம் அவர்களும் சுசி ஈமு நிறுவனர் குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில் கீழக்கரை அருகே திருப்புல்லாணியில் ஈமு கோழிகளின் மீது முதலீடு செய்து, ஏமாற்றத்துடன் காத்திருக்கும் திரு. தங்கராசு அவர்களின் குடும்பத்தார்கள் நம்மிடையே பேசும் போது "சுசி ஈமு பண்ணையில் ரூ.300000 முதலீடு செய்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஈமு 12 கோழிகளை  வாங்கி வந்தோம். கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில், அமைந்துள்ள எங்கள் வீட்டின் முன் பகுதியில் சிறிய பண்ணை  அமைத்து பராமரித்து வருகிறோம் . எங்களுக்கு இந்த  ஈமு கோழிகளை வளர்க்க ஊக்கத்தொகை, போனஸ் கொடுப்பதாகவும், கோழிகள் நல்ல வளர்ச்சி அடைந்த உடன், அவர்களே திரும்ப கோழிகளை வாங்கி கொள்வதாகவும் வாக்குறுதி தந்து இருந்தார்கள்.




ஆனால் வாக்களித்தபடி ஊக்கத் தொகை, போனஸ் என்று எதுவும் கொடுக்க வில்லை.தொடர்ந்து இதற்கான தீவனங்கள்  தருவதையும்  நிறுத்தி விட்டார்கள். ஒரு கோழி தினமும் 1 கிலோ தீவனம் உண்ணும். இந்த பகுதியில் இதற்கேற்ற  தீவனங்களும் இல்லை. இதனை சரிவர பராமரிக்க முடியாமல் இரண்டு கோழிகள் இறந்து விட்டது. நாங்கள் முதலீடு செய்தது போதாதென்று, இதற்கு தீவனங்கள் போட்டு தீர முடியவில்லை. தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கடவுள் தான் இதிலிருந்து எங்களை மீட்டு காப்பாற்ற வேண்டும்." வேதனையுடன் தெரிவித்தார்கள். 

இது தவிர இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இதே போன்று மோசடி நடந்தேறியுள்ளது. மோசடிகள் பலவிதம்; அதில் ஈமு கோழி மோசடி புது விதம். ஈமு கோழிகளுக்கு இதுவரை நிறுவனங்கள் மூலமாக தீவனம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாக நிறுவனங்கள் தீவனம் வழங்காததால், ஈமு பண்ணைகளில் முதலீடு செய்துள்ள விவசாயிகள் தங்களது ஈமு கோழிகளுக்கு தீவனம் கிடைக்காமல் படாத பாடு பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈமு கோழிப் பண்ணைகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோழிகள் தீவனம் இன்றி பசியால் வாடி வருகின்றன. இது போல் பண்ணைகளில் இருக்கும் கோழிகள் தவிர தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் 3 முதல் 3.5 லட்சம் கோழிகள் வரை இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.




இதற்கான தீவனத்திற்காக தமிழக முதல்வர் அவர்கள் சில கோடிகளை ஒதுக்கி வாழ்வளித்தார். ஆனால், கோழிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்தத் தீவனம் போதுமானதாக இல்லை. மற்ற பண்ணைகளில் இருக்கும் ஈமு கோழிகள், பராமரிக்க ஆள்களும் இன்றி, தீவனமும் இன்றி அனாதையாகக் கிடக்கின்றன. அனைத்துக் கோழிகளுக்கும் தீவனம் வழங்க தினமும் ரூ. 3.5 முதல் ரூ. 4 கோடி வரை செலவாகும். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.  
Face Book Comments :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, புதுசு புதுசா திட்டங்கள் போட்டு, ஏமாற்றும் திருட்டுப் பேர்வழிகள் இருக்கத் தான் செய்வார்கள். ஆகவே நம் மக்கள் எந்த முதலீடுகள் செய்வதாக இருந்தாலும், ஒன்றுக்கு பல முறை யோசனை செய்வதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே இந்த தொழிலில் முதலீடு செய்து இருப்பவர்களை நேரடியாக சந்தித்து, விசாரித்த பின் முடிவுகள் எடுப்பது நலம்.
    23 hours ago · Like · 4
  • Mahasin Salha this vry sad news, gov should nessary action on them0 hours ago · Like

2 comments: