தேடல் தொடங்கியதே..

Monday 29 April 2013

கீழக்கரையில் விற்பனைக்காக குவிந்திருக்கும் 'பலாப் பழங்கள்' - பலாப் பிரியர்கள் மகிழ்ச்சி !


கீழக்கரையில் தற்போது கோடை வெயில், வாட்டி எடுக்க துவங்கியுள்ள நிலையில், பொது மக்கள் கோடை காலத்துக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களை மாற்ற துவங்கியுள்ளனர். ஆகேவே சூடான ஆகாரங்களை தவிர்த்து, குளிர்ந்த நீர் சத்துள்ள பழங்களையும், நன்னாரி சர்பத், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, நுங்கு சர்பத்  அதிகம் விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். ஆண்டு தோறும் கேரளா, கடலூர் பண்ருட்டி பகுதிகளில் மார்ச் மாதங்களில் சீசன் துவங்கி ஜூன் மாதம் வரை பலாப் பழ விற்பனை களை கட்டும். 


இந்நிலையில் கீழக்கரைக்கு, நா வறட்சியை போக்கும் தர்பூசணி, பலாப் பழங்களும் விற்பனைக்கு அதிகம் வரத் துவங்கியுள்ளது. இந்த பலாப் பழங்களின் விற்பனை தற்போது, கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக் கடை அருகில்) களை கட்ட துவங்கியுள்ளது. கீழக்கரைக்கு விற்பனைக்கு வரும் பலாப் பழங்களை பொறுத்த வரையில், வெளி மாவட்டங்களான புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், பழங்களை விட கேரள மாநில பகுதியிலிருந்து பலாப் பழங்கள் அதிகமாக வருகிறது. 

தற்போது, பலாப் பழ சீஸன் துவங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து பலாப் பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. இது போன்ற மொத்த விற்பனை கடைகளில் இருந்து கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகளில் பழங்களை விற்பனை செய்கின்றனர்.



இது குறித்து கோட்டயம் பகுதியில் இருந்து வந்திருக்கும் பலாப் பழ வியாபாரி ஷாஜி அவர்கள் கூறும் போது "ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில், கேரளாவில் இருந்து பலாப் பழங்களை, கீழக்கரை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்.  ஒரு பலாப் பழம், அதன் உருவ அளவிற்கேற்ப  ரூ.80 முதல் ரூ.230 வரை விற்பனை நடை பெற்று கொண்டிருக்கிறது. இறைவன் அருளால் தற்போது விற்பனை சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் வசிக்கும் 'வீனஸ்' பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் கூறும் போது "கோடை நா வறட்சியை சற்று போக்கும் என்பதோடு, மற்ற பழங்களை விட விலையும் மலிவாக கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலாப் பழங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். புதுக்கோட்டை, பண்ருட்டி பகுதிகளில் விளைந்த பலாப் பழங்களின் நாவிற்கினிய ருசி போலவே, இந்த கேரளப் பழங்களுக்கும் உண்டு. கீழக்கரை நகரில் நீண்ட காலத்திற்குப் பிறகு, பலாப் பழங்களை பார்த்த மகிழ்ச்சியில், பலாப் பிரியர்கள் விரும்பி வாங்குகின்றனர்." என்று சுவைக்க தூண்டும் விதமாக பேசினார். 



முக்கனிகளில் முக்கிய கனியாகக் கருதப்படும், இந்த பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்  சிறந்தது. இந்த பலாக்காயை வாங்கி வந்து, கூட்டு செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய்க்கு உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் உண்டு.ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

1 comment:

  1. அது சரி. இந்த இடத்தில் ஒரு குப்பைத் தொட்டி இருந்ததே அது என்னவாயிற்று?

    ReplyDelete