தேடல் தொடங்கியதே..

Saturday 18 February 2012

கீழக்கரையில் இலஞ்சப் பேர்வழிகளை பிடித்துக் கொடுத்தால் ரூ.5000 ரொக்கப் பரிசு - கீழை இளையவன் வலைத்தளம் அறிவிப்பு

கீழக்கரையில் இலஞ்சப் பணம் 'கடமை நெறி தவறா ??' அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல், 'எந்த ஒரு வேலையும் நடைபெறாது' என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது வருகிறது. குறிப்பாக நம் கீழக்கரையில் அதிக அளவு இலஞ்சப் பணம் பரிமாறப்படும் முதல் மூன்று இடங்களில் கிராம நிர்வாக அலுவலகம் இடம் பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இராமநாதபுரம் தாலுகா அலுவலகம் 
இந்த அலுவலகங்களில் காலை முதல் அலைமோதும் மக்கள் கூட்டம், பல்வேறு பணிகளுக்காக, கையொப்பம் பெற அதிகாரிகளை நாடுகிறார்கள். குறிப்பாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, சாதி சான்றிதழ் பெற, இருப்பிட சான்றிதழ் பெற, பாஸ்போர்ட்டுக்கான சான்றிதழ் பெற, மருத்துவ காப்பீட்டுக்கு சான்றிதழ் பெற என்று திருவிழா போல, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

அதிலும் இந்த பட்டா மாறுதலுக்காக இங்கு வருபவர்கள் தான், அதிகாரிகளின் கண்களுக்கு பணம் காய்க்கும் மரமாக காட்சியளிக்கிறார்கள். இந்த பட்டா மாறுதலுக்காக, இந்த இலஞ்சப்பேர்வழிகள்  அப்பாவிகளிடம் வசூலிக்கும் கட்டாயத் தொகை ரூ.3000 முதல் ரூ.5000 வரை  என்று தெரிய வரும் போது திகைப்பு மேலிடுகிறது.

ஆகவே இலஞ்சப் பணம் கொடுக்காமல் பட்டா மாற்றி சாதனை புரிந்து , இந்த இலஞ்சப் பேர்வழிகளை, முறையாக இலஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிடித்து கொடுத்தால், எங்களின் கீழை இளையவன் வலை தளம் சார்பாக ரூ.5000 பரிசுத் தொகையும், அவர்களுக்கான  பாராட்டு விழாவில் வெள்ளிக் கோப்பையும் வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராமநாதபுரம் இலஞ்ச ஒழிப்பு அலுவலகம்

           இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி
இந்த பட்டா மாறுதலுக்கு முறையாக விண்ணப்பிக்க, என்ன மாதிரியான வழிமுறைகளை பின் பற்ற வேண்டும் என்று தாலுகா அலுவலகத்தில் வெளிப்படையான அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் சட்டப் பேரவையில் அறிவித்தபடி, பட்டா மாறுதலுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் படி, பட்டா மாறுதல் சம்மந்தமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு செய்யாமல், ஒவ்வொரு திங்கள்கிழமையும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்து பட்டா மாறுதல் பெறலாம். 
இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வைக்கபட்டிருக்கும் அறிவிப்பு பலகை
 
கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு வகிக்கும் கிராமங்களில் செவ்வாய்க்கிழமைகளில் மனு அளிக்கலாம். இவ்வாறு மனுஅளிப்போருக்கு உரிய படிவத்தில், ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். பட்டா கோரும் நிலம் முழுப் புலமாக இருந்தால, 15 தினங்களுக்குள்ளும், உள்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்ய வேண்டியது இருந்தால் 30 தினங்களுக்குள்ளும் பட்டா மாற்றம் செய்து தரப்படும்.
மனு அளிக்கும் நேரத்தில் உள்பிரிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பட்டா பெறும்போது. உரிய கட்டணம் செலுத்திய செலான் சமர்ப்பித்தால் போதுமானது. மனு அளிக்கும்போது, நிலப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கவும், அலுவலக விசாரணையின்போது அசல் ஆவணம் சமர்ப்பித்தால் போதுமானது. இப்புதிய திட்டம் 25-7-2011 முதல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசானை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

1 comment: