தேடல் தொடங்கியதே..

Wednesday 15 February 2012

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் - மோட்டார் சைக்கிள் பேரணி !

ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி 'புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த 2012 ஆம் ஆண்டில் 'இணைந்தால் இயலும்' (TOGETHER IT IS POSSIBLE) என்ற தலைப்பை முன் வைத்து அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் இறந்து வருகிறார்கள். 


 


நம் கீழக்கரை நகரிலும், பலர் புற்று நோய்க்கு ஆளாகி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். முன்பெல்லாம் எந்த வகையான புற்று நோயாக இருந்தாலும் குணப்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விட முடியும்.

புகையிலையின் பயன்பாடு தான் புற்று நோய்க்கான முதல் காரணமாக இருக்கிறது. இதற்கான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைந்தே காணப்படுகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் அடிக்கடி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனடிப்படையில் ஒரு சிறப்பான விழிப்புணர்வுக் குழு நம் கீழக்கரையில் முஹம்மது சதக் கல்லூரி வளாகத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. 
விழிப்புணர்வுக் குழுவினரின் உற்சாகப் பேரணி



இதில் டி. ஜி. வைணவ கல்லூரியின் 20 பேர்கள் கொண்ட தேசிய மாணவர் படையும், ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனமும் இணைந்து நம் சுற்று வட்டார பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணி கடந்த 4 ஆம் தேதி சென்னை மேயர் திரு. சைதை துரை சாமி அவர்களால், சென்னை மெரீனா கடற்கரையில் கொடியசைத்து துவக்கப்பட்டது. இந்த பேரணி தமிழகம் முழுதையும் 3150 கிலோ மீட்டர்கள் சுற்றி, விழிப்புணர்வு செய்து 19 ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
பேரணியினரால் வழங்கப்படும் விழிப்புணர்வு நோட்டீஸ்



இது குறித்து நம்மிடையே பேசிய இக்குழுவின் தலைவர் லெப்டினன்ட் டாக்டர் எஸ். சந்தோஸ் பாபு அவர்கள் கூறுகையில், "இந்த மோட்டார் சைக்கிள் பேரணியின் முக்கிய நோக்கமாக மக்களுக்கு புற்று நோய் வராமல் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், புற்று நோய் வகைகளை தெரியபடுத்துதல், புகையிலையினால் ஏற்படும் தீங்குகளைத் தெரியப்படுத்துதல், புற்று நோய் குறித்த தமிழக அரசின் பங்களிப்பை மக்களுக்கு தெரியப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். எங்களுடைய இந்த முயற்சிக்கு கீழக்கரை மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது ", என்று மிகுந்த மகிச்சியுடன் தெரிவித்தார்.

புகைப்பதை விடுவோம்.. புகையிலை ஒழிப்போம்... புற்று நோயில்லாத நம் கீழக்கரை நகரை உருவாக்குவோம். 

No comments:

Post a Comment