தேடல் தொடங்கியதே..

Sunday 12 February 2012

கீழக்கரையில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றுமை குரல்கள் - மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில், கீழக்கரையில் அறிவிக்கப்பட்ட மின் வெட்டான 8  மணி நேரத்தையும் தாண்டி, அறிவிக்கப்படாத மின் வெட்டாக 'நாளின் சரி பாதி, மின் வெட்டு போக மீதி' என்று சொல்லுமளவிற்கு பாதி நாள் மின் வெட்டாகவே கரைந்து விடுகிறது. 




இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து, குழந்தைகள், சிறுவர்கள், நெருங்கி வரும் அரசு போது தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், முதியவர்கள், அடுப்பாங்கரையில் வேர்வை சிந்தும் இல்லத்தரசிகள், வியாபார பெருமக்கள் என்று இந்த மின்வெட்டால் பாதிக்கப்படாத 'எந்த ஒரு தனி மனிதனும் இல்லை' என்று சொல்லுமளவிற்கு பொது மக்கள் அனைவரும் பேதமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.




இந்த தொடர் மின் வெட்டை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு, இந்த பிரச்சனையை கொண்டு செல்வதற்காக,  நாளை (13.02.2012) கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 ம‌ணிய‌ள‌வில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழக்கரையில் உள்ள  30 க்கும்  மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும், கட்சிகளும், மகளிர் அமைப்புகளும்  இணைந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கப் போவதாக, அவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதங்கத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அனைவரும் முன் வர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கீழக்கரையின் 30 க்கும் மேற்ப்பட்ட அமைப்புகள், ஒரு பொதுப் பிரச்சனைக்காக, ஒற்றுமையாக போராட முன் வந்திருப்பது, அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒற்றுமையோடு அனைத்து குரல்களும், ஓங்கி ஒலிக்கும் போது, நிச்சயம்  ஆட்சியாளர்களின் காதுகளில் தெளிவாய் விழுந்து, நல்லவை நடக்கும் என்பதை விரைவில் எதிர் பார்ப்போம்.

No comments:

Post a Comment