தேடல் தொடங்கியதே..

Friday 3 February 2012

கீழக்கரையில் 'குப்பைக்கு குட்பை' சொல்ல சமூக ஆர்வலர்களின் பல் முனை முயற்சிகள் !

கீழக்கரை நகரின் தற்போதைய முக்கிய பிரச்சனையாக, எல்லோராலும் பேசப்பட்டு வரும் இந்த குப்பை பிரச்சனையில் கீழக்கரை நகராட்சி, வெல்பேர் அசோசியேசன் தொண்டு நிறுவனம் தவிர இந்த குப்பை பிரச்சனையை தீர்ப்பதற்காகவே கீழக்கரை நல சங்கம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தி, குப்பை பிரச்சனைகளை களைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அது போலவே கீழக்கரையில் கடந்த 01.02.2012 அன்று கீழக்கரை பைத்துல் மாலில் நடைபெற்ற குத்பா கமிட்டி கூட்டத்திலும், இந்த குப்பை பிரச்சனை விவாதிக்கப்பட்டு, சிறப்பான தீர்மானங்களை எடுத்துள்ளனர்.






இவை எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக இந்த குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை காண, கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த ஜனாப். அஹமது லாபீர் அவர்கள் சென்ற மாதம் சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் எக்ஸ்னோரா என்ற தொண்டு அமைப்பினரை அழைத்து வந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 
http://www.keelaiilayyavan.blogspot.in/2012/01/blog-post.html 

கீழக்கரை நகரை தூய்மையாக்குவதின்  தொடர் முயற்சியாக கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நேற்று (02.02.2012) மதியம் மணியளவில் செயல் திட்ட முன் மாதிரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மதுரை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் திரு. நாகராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.






இதில் குப்பைகளை கையாள்வது சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சிறப்பாக விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், கல்லூரி முதல்வர்களும் நடைமுறைபடுத்த இருக்கும் செயல் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற தங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என்று ஒற்றை குரலில் உறுதி மொழி அளித்தனர்.






இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மேலத்தெருவைச் சேர்ந்த அஹமது லாபீர் அவர்கள் பேசுகையில், "நம் கீழக்கரை நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் முதல் 35 டன் வரை குப்பைகள் சேர்கின்றது. இதனால் கொட்டப்படும் குப்பைகள் மலை போல் குவிந்த விடுகிறது. இவற்றை தவிர்க்க நாம் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து விடும் போது நம்மால் 'WASTE MANAGEMENT' என்று சொல்லக் கூடிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக குப்பைகளை கையாள முடியும். 






இந்த நல்ல திட்டத்திற்கு தாய்மார்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. இதன் முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதரசாக்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை கொண்டே இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க இருக்கிறோம். நம் கீழக்கரையில் ஏறத்தாழ 22 கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்த கல்வி கூடங்களில் பக்கத்து ஊர்களில் இருந்து இங்கு வந்து கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தவிர கீழக்கரையை சார்ந்த மாணவ, மாணவிகள் மட்டும் 4000 பேர் படிக்கின்றனர். இந்த மாணவ மணிகளின் மேலான பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார். 




கீழக்கரை வாழ் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, நம் கீழக்கரை நகராட்சியை குப்பைகள் இல்லாத நகரமாக, மத்திய மாநில அரசுகளின் 'முன் மாதிரி நகராட்சி விருதுகளை பெறக் கூடிய சிறப்பான நகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அல்லது இது போன்ற நல்ல முயற்சிகளை எடுப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment