தேடல் தொடங்கியதே..

Saturday 12 May 2012

கீழக்கரை நகருக்குள் சாக்கடை ஆறுகளை கடக்க 'படகு போக்குவரத்து' - பொது மக்கள் வேண்டுகோள் !

கீழக்கரை நகரின், இரண்டு முக்கிய பகுதிகளில் காலம் காலமாக... சாக்கடை கழிவு நீரில் கால் நனைக்காமல் கீழக்கரை வாசிகள் கரையை கடப்பது என்பது குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது.

என்ன கொடுமை சார் இது !  (இடம் : கொந்தக் கருணை அப்பா பள்ளி அருகில்)
பகுதி 1 : கீழக்கரை 21 வது வார்டுப் பகுதிக்குட்பட்ட கொந்தக் கருணை அப்பா தொழுகைப் பள்ளி மற்றும் வள்ளல் சீதக்காதி பிரதான சாலையை இணைக்கும் இணைப்பு சாலை

பகுதி 2 : கீழக்கரை 1 வது வார்டுப் பகுதியை சேர்ந்த பருத்திக்கார தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் புதிய பேருந்து நிலையம், புதிய மீன் கடை (சந்தை கடை) பகுதியை இணைக்கும் இணைப்பு சாலை

என்ன கொடுமை சார் இது !  (இடம் : தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி அருகில்)
 

இந்த இரண்டு பகுதிகளிலும், சாக்கடை நீர் ஆறாக பெருக்கெடுத்து, மடை திறந்த வெள்ளமென ஓடி மணம் கமழ்ந்து வருகிறது !?.. இதனால் இந்த பகுதியின் கரைகளை கடக்க முடியாமல் முதியவர்களும், பெண்மணிகளும், பள்ளிக் குழந்தைகளும், தொழுகைக்கு செல்பவர்களும் தட்டுத் தடுமாறி வருகின்றனர். இந்த சாக்கடை பள்ளங்களுக்குள், நடை நீச்சல் அனுபவம் இல்லாத பலர் விழுந்து 'சாக்கடை குளியல்' போட்டுச் செல்வது அன்றாட நிகழ்வாகி வருகிறது.


இது குறித்து அந்த பகுதி பொது மக்களிடம் கேட்ட போது "நாங்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை? இந்த வழிந்தோடும் சாக்கடையில்  எங்கள் வாழ்க்கை கழிந்து வருகிறது. இப்படி ஆண்டாண்டு காலமாய் தேங்கும் சாக்கடையால் மலேரியா, யானைக்கால் மட்டுமல்ல.. விரைவில் சாவும் எங்களுக்கு வந்து விடும். 

எனக்கு யானைக்கால் வருமோ !  (இடம் : கொந்தக் கருணை அப்பா பள்ளி அருகில்)
'நல்லா படம் எடுத்து போடுங்க.. நீங்க மகாராசனா இருப்பிய..' ஏதாவது நல்லது நடக்கட்டும். முடிஞ்சா இந்த கீழக்கரையில்  இக்கரையிலிருந்து அக்கறைக்கு போக காலையிலும் மாலையிலும் ஒரு இரண்டு மணி நேரமாவது படகு போக்குவரத்து துவங்கினால் தேவலை" என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் சாக்கடையை கடந்தபடியே கவனத்துடன் பேசினார். 


இது குறித்து 21 வது வார்டு கவுன்சிலர் ஜெயப் பிரகாஷ் அவர்கள் கூறும் போது "இந்த சாக்கடை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க கோரி நகராட்சி அலுவலர்கள் முதல் மாவட்ட கலெக்டர் வரை மனுக்கள் கொடுத்தாகி விட்டது. இது வரை எந்த ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளும் இல்லை. இந்தப் பகுதியில் முறைப்படி வாறுகால்கள் விரைவில் அமைத்துக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாத போது, பொது மக்களை ஒன்று திரட்டி, மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 


கீழக்கரை நகரின் எல்லை பகுதிகளாக இருக்கும்  21 வது மற்றும் 1 வது வார்டு பகுதிகளில் சாக்கடை கழிவு நீரில் உருவாகும் கொலை வெறி கொசுக்களும், தண்ணீர் புழுக்களும் நகரின் மையப் பகுதிகளுக்கு, நம் வீட்டின் முற்றத்திற்கு வரவா போகிறது ? என்று எகத்தாளம் பேசுவதை விட்டு விட்டு.. சற்று சுற்றுப் புறத்தை சீர் படுத்துவோம்.. வரும் முன் காப்போம் !

No comments:

Post a Comment