தேடல் தொடங்கியதே..

Sunday 5 August 2012

கீழக்கரை வண்ணாந்துறை அபாய வளைவில் ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் - கீழக்கரை ரோட்டரி சங்கம் அர்ப்பணிப்பு !

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த விபத்துக்களில் சிக்குபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த பகுதியில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகையோ, ஒளிரும்  பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளோ, வேகத்தை கட்டுப் படுத்தும் தடுப்பு வேலிகளோ  இல்லாதது தான் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இராமநாதபுரம் - கீழக்கரை சாலை !

இதனையடுத்து கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர் ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை சாலையின் இரு புறங்களிலும் அமைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக‌, கடந்த வருடம் சாலைகளின் இரு ஓரங்களின் வளைவுகளிலும் ஏராளமான‌ கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள்.

கீழக்கரை - இராமநாதபுரம் சாலை !

இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது . தற்போது சமூக விரோதிகளால் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு விட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் காவல்துறை சார்பில், வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால் அதையும் லாரிகளில் வருபவர்கள், தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி சென்று விடுகின்றனர். தற்போது இங்கு தடுப்பு வேலிகளும் இல்லை.

இந்த விபத்துப் பகுதியில் சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி, வளைவின் இரு மருங்கிலும் மீண்டும் இரும்பு தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும். நம் நகரின் பொது நல அமைப்பினர்க்ளும் முயற்சி மேற்கொண்டு ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை ஓட்ட முயற்சிகள் மேற்க் கொள்ள வேண்டும். இந்த தருணத்தில், மக்கள் நலனை முன்னிறுத்தி பல நல்ல முயற்சிகள் எடுத்து வரும் கீழக்கரை ரோட்டரி சங்கத்தினருக்கு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

  1. கீழை இளையவனின் வரவேற்கத் தக்க கருத்து குவியலோடு எமது கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    ஹேர் பின் வளைவாக இருக்கும் வண்ணான் துறை சாலையின் இரு மருங்கிலும் உள்ள பனை மரங்கள், நிலத்தடி ஆதாரத்தை கருவறுக்கும் அனைத்து காட்டு கரு வேல மரங்களயும் வேரோடு களைய வேண்டும்.அத்துடன் இந்தியா சில்க ஹவுஸ் விளம்பர பலகையையும் நீக்க வேண்டும். சமபந்தப்ப்ட்ட அரசு நிர்வாகங்கள் இணைந்து இதை செய்வார்களேனால் ஓட்டுனர்கள் குறிப்பாக வெளியூர் காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் பயனாக வளைவின் ஆரம்பத்திலிருந்து வளைவின் முடிவு வரை இரு புறமும் தெளிவான பார்வை கிடைக்கப் பெற்று விபத்துகளை தவிர்க்க ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக செயல்பட முடியும்.

    இப்போது பஸ்ஸில் வந்தால் கூட வளைவில் வரும் வாகனங்கள் குறிப்பாக நானோ, ஆம்னி,சுவிப்ட் போன்றவை பார்வைக்கு தெரிவதில்லை.

    இது போல திருப்புல்லாணி மற்றும் தெற்குதரவை முச்சந்தியிலும் வாகன ஓட்டிகளுக்கு வளைவில் எதிர் வரும் வாகனத்தின் பார்வைக்கு இடையூராக இருக்கும் அனைத்து சாலை ஓர மரங்களையும் களைய வேண்டும்.

    இப்போது வரும் நாகரீக சிறு வண்டிகள் மிகச் சிறிய விபத்துகளை கூட பழைய காலத்து அம்பாஸிடர் வண்டிகளை போல் தாக்கு பிடிப்பதில்லை. அப்பளம் போல் நொருங்கி விடுகின்றன. உயிர் சேதமும் அதிகம். தினசரி தொலை காடசியிலும், பத்திரிகை வாயிலாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    வருன் முன் காக்க சங்கை ஊதி விட்டோம்.

    ReplyDelete