தேடல் தொடங்கியதே..

Saturday 4 August 2012

கீழக்கரையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தினரின் பங்களிப்பில் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார நலத் துறையினரும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கமும் அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியும் கடந்த வியாழன் அன்று (02.08.2012) மாலை 4 மணியளவில், ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். பேராசிரியர் A.அலாவுதீன் தலைமை வகித்தார். தாளாளர். பேரா.J.சாதிக் காக்கா, நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர்.M.H. செய்யது ராசிக்தீன் அறிமுக உரை நிகழ்த்தினர். 




இராமநாதபுரம் சுகாதார நலத் துறை துணை இயக்குனர் திரு.S.பாலசுப்ரமணியன் 'வரும் முன் காப்போம்' என்ற அடிப்படையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கீழக்கரை மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர் அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் P.பாலசுப்ரமணியன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆசாத் ஹமீது நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியின் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 6.45 மணியளவில்  நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.




நம் கீழக்கரை நகரில் தொடர்ச்சியாக மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். கடந்த மாதம் கீழக்கரை தெற்குத் தெருவை சேர்ந்த அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாத குழந்தை அறியப்படாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது அனைவரையும் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தில் ஆழ்த்தியது. 

அதே நேரம் 'கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் அறவே இல்லை' என்று கீழக்கரை முன்னாள் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான், சமீபத்தில் ஒரு தொலைகாட்சி பேட்டியின் போது தெரிவித்திருந்தார். இவருடைய தவறான கருத்துக்கு, கீழக்கரை நகரின் சமூக ஆர்வலர்களும், பொது நல அமைப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இது போன்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மன ஆறுதல் அளிப்பதாக பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment