தேடல் தொடங்கியதே..

Tuesday 23 October 2012

கீழக்கரையில் குடிநீருக்காக தினமும் போராட்டமாகி வரும் வாழ்க்கை - அடை மழை பெய்தாலும் அகலாத அவலம் !

கீழக்கரை நகருக்குள் ஒரு காலத்தில், மழை நீரை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும் குளங்களும், ஊரணிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே அசுர வேக நகர்மயமானதாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும் குலங்களெல்லாம், அறிச்சுவடுகள் கூட தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டு காணாமலே போய் விட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி கீழக்கரையில் 1990ஆண்டு, கிணறுகள் மற்றும் ஊரணிகள் குறித்த விபரப் பதிவேட்டின் படி  10 குளங்களும், ஊரணிகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று ஒரு நீர் நிலை கூட நகருக்குள் காணப்படவில்லை என்பது அதிர்ச்சி ரக தகவல். இந்நிலையில் பலத்த மழை பொழிவு இருந்தாலும் கூட, குடிநீருக்காக மக்கள் படும் கஷ்டங்கள் குறைந்த பாடில்லை.

படம் : 'FORTH BOY' நெய்னா

கீழக்கரை நகரில் பெரும்பாலான குடி தண்ணீர் தேவைகள் தீர்க்கப்படுவதில், தற்போது 500 பிளாட்டு பகுதியிலிருந்து எடுத்து வந்து, நகருக்குள் விற்கப்படும் மாட்டுமாட்டு வண்டி தண்ணீர் பெருமளவு பங்கு வகிக்கிறது.  இவ்வாறு விற்கப்படும் குடி தண்ணீர் ஒரு குடம் 5 ரூபாய்க்கும், தனியார்  லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் ஒரு குடம்  6 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது இன்னும் சிறிது காலங்களில் 10 ரூபாய் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கீழக்கரை ந‌க‌ராட்சியில் பெரும்பாலான‌ தெருக்க‌ளில் உள்ள பொது குழாய் மூலம் குடிநீர் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌ட்டு வந்தாலும், இவைகளும் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால், குறைந்த அளவே விநியோகிக்கப்படும் குடிநீரும் கூட, குடிக்க தகுதி இல்லாமல் கலங்கிய நிலையில் வருவதாலும் நல்ல குடி தண்ணீர்  கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


'நீரின்றி அமையாது உலகு' என்பது பெரியோர்கள் வாக்கு. அரசுத் துறைகளில் தவறு செய்வபர்களை 'தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும்' என்று அரசியல் சாணக்கியர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். அவ்வாறு .தண்ணீர் இல்லாத காடு', 'வறட்சியான மாவட்டம்' என்று அடை மொழிகளால் அழைக்கப்பட்டு வரும் நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், கடந்த தி.மு.க ஆட்சியின் போது  616 கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. மராமத்து செய்கிறோம்; பராமரிப்பு செய்கிறோம்.. என்ற பெயரில் மாதத்தில் பாதி நாள்கள் காவிரி நீர் வினியோகம் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 



இதனால் பொது மக்கள் காலை முதலே குடங்களை தூக்கி கொண்டு குடி தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலை காணப்படுகிறது. ஒரு சில நேரங்கள் லாரியில் விற்கப்படும் தண்ணீரோ, மாட்டு வண்டி தண்ணீரோ வராமல் போவதால், என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டு வாசல் படிகளிலேயே காத்துக் கிடக்கின்றனர். இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, ISI முத்திரைகள் இல்லாத, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் வியாபாரமும் களை கட்ட துவங்கியுள்ளது. இருப்பினும் தற்போது நகர் முழுதும் போடப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் மூலம் ஓரளவு தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment