தேடல் தொடங்கியதே..

Thursday 8 March 2012

கீழக்கரையில் இன்று +2 பொதுத் தேர்வுகள் துவக்கம்... எதிர் கொள்ள தயாராகும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் !

தமிழகமெங்கும் இன்று (08.03.2012) +2 தேர்வுகள் துவங்கியது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும், எப்படி தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்று வாட்டார மாணவ மாணவியர்களும் இந்த தேர்வுகளை சிறப்பாக எழுத தயாராகி விட்டார்கள். பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் அவர்களோடு கை கோர்த்து, உயரிய கனவுகளோடு களமிறங்கி விட்டார்கள்.



இது குறித்து ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியில் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் லெப்பைத் தம்பி மாஸ்டர் அவர்களிடம் கேட்ட போது "தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல.. எதிர் வரும் இறுதித் தேர்வினை எப்படி சிறப்பாக எழுத போகிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். 


கீழக்கரையின் பள்ளிக்கூட சாலை , மேலத் தெரு

இந்த இறுதித் தேர்வுக்காக, பெற்றோர்களாகிய நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்கு இடையூறாக தொடர்ந்து தொல்லைதரும் 'தொல்லைக்காட்சி பெட்டிகளை' இன்னும் இரண்டு மாதங்களுக்காவது ( மார்ச்,ஏப்ரல் மட்டுமாவது ) மூடி விட்டு,அவர்களுடைய எதிகால வாழ்க்கைக்கு உதவ வேண்டும்" என்று மிகுந்த எதிர் பார்ப்புடன் கூறினார்.



ஹமீதியா பெண்கள்  மேட்ரிகுலேசன் பள்ளி, கீழக்கரை 


+2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முறையாக படித்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயாராவதற்கான சில வழிகள்:
  • பத்தாம் வகுப்பு மாணவர்களும் இன்னும் நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  • முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கொண்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது மூன்று முறையாவது சுயமாக தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முறையான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் நீண்டநேரம் கண்விழித்து படிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் ஆழ்மனதில் பதியும்.
  • அனைத்துக் குழந்தைகளின் ஞாபகத்திறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். சிலருக்கு பலமுறை படித்தாலும் ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்கு கவனச் சிதறலும் ஒரு காரணம். எனவே, முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
  • தேர்வுக்கு தயாராகும் போது, டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும், படிக்கும்போது முக்கியமானவற்றை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். படித்த பிறகு, அந்த குறிப்புகளை பார்த்து மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம். பிறகு அதனை பார்க்காமல் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்தால், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
  • நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கீழக்கரையின் பள்ளிக்கூட சாலை , மேலத் தெரு


நம் கீழக்கரையில் கடந்த காலங்களில், அரசு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் வெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டபொழுது, "படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம்" என்று பதிலளித்தார்கள் . மேலும் "நாங்கள் 9ஆம் வகுப்பு ஆரம்பிக்கும் போதே எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம்" என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து புரிந்து கொண்டவர்களாக...

நம் கீழக்கரையில் இன்று முதல் தேர்வுகளை எழுத, மிகுத்த எதிபார்ப்புடன் களமிறங்கி இருக்கும் +2 மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக வெற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கனவுகள் விதையுங்கள்.. அறிவின் தோட்டத்தில்... (இறைவன் நாடினால்)
வெற்றியின் அறுவடை தூரமில்லை !

1 comment:

  1. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete