தேடல் தொடங்கியதே..

Sunday 11 March 2012

கீழக்கரையில் புதிய 'மெடிக்கல் கிளினிக்' உதயம் - பொது மக்கள் மகிழ்ச்சி!

கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள, பழைய கைராத்துல் ஜலாலியா ஆரம்ப பள்ளி வளாகத்தில் இன்று (11.03.2012) 10 மணியளவில், பொது மக்களின் மருத்துவ சேவைக்காக புதிய மெடிக்கல் கிளினிக்கை 'கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்ட்' சார்பாக துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ மனையை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திறந்து வைத்து, மருத்துவ பணிகள் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.




இது குறித்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்டின் தலைவர் முஹம்மது ஜுல்பிகார் அவர்கள் கூறும் போது, "நம் கீழக்கரை நகரில் குறிப்பாக கிழக்குத் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவமனைகளோ, அவசர சிகிச்சைகளுக்கான வழிகளோ இல்லை. நமது கீழக்கரை நகரமும், மிக வேகமாக பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லை. பல சிறப்பு சிகிச்சைகளுக்கு இராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் தான் தற்போது உள்ளது.

தலைவர் முஹம்மது ஜுல்பிகார் அவர்கள்



ஆகவே தான், நம் மக்களுக்கு மிக அருகாமையிலேயே, நல்ல தரமான சிகிச்சைகளை, மிகக் குறைவான கட்டணத்தில் செயல்படுத்த முனைந்துள்ளோம். இதனால் பொது மக்களுக்கு, வீட்டிலிருந்து, மருத்துவமனைக்கு செல்லும் போக்குவரத்து செலவுகள் பெருமளவு குறைகிறது. இறைவன் நாடினால், விரைவில் இன்னும் பல சிறப்பு மருத்துவர்களை முழு நேரப் பணிகளில் அமர்த்தி சேவையாற்ற இருக்கிறோம்" என்று மிகுந்த அக்கறையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்தார்.




இது குறித்து இந்த மருத்துவமனையின் டாக்டர். ஜவாஹீர் ஹுசைன் அவர்கள் கூறும் போது "நம் நகர் மக்களின் நலனுக்காக, எந்தவித இலாப நோக்கமுமின்றி துவங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவ சேவையை, பொது மக்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.


டாக்டர்.ஜவாஹீர் ஹுசைன் மற்றும் டாக்டர். அல்-அம்ரா அவர்கள்

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கீழக்கரை  முஸ்லீம் டிரஸ்டின் தலைவர் ஆசீக் அவர்கள் கூறும் போது " இது போன்ற நம் கீழக்கரை நகர் மக்களுக்கான, மருத்துவ சேவைகள் வரவேற்கத்தக்கது. நமது ஊரில் பல்வேறு விதமான சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனைகளை நாடி, தொலை தூரம் பயணித்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான தரமான சிகிச்சைகளை வழங்க துவங்கி இருக்கும் இந்த நல்ல சேவை, தொய்வில்லாமல் தொடர இறைவனை வேண்டுகிறேன்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.


கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்டின் மருத்துவ சேவைகள், மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment