தேடல் தொடங்கியதே..

Wednesday 18 April 2012

கீழக்கரையில் போதிய இட வசதியின்றி தவிக்கும் 'அரசு பொது நூலகம்' - கவனிப்பார் யாருமுண்டா ?

கீழக்கரையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முஸ்லீம் பஜாரில், அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இது அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், ஊரின் மத்தியில் பிரதானமான இடத்தில் இருந்தது.  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு தேர்வுகளுக்கு முயற்சிப்போர், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாக பயனடைந்து வந்தனர்.

போதிய இடவசதியின்றி இயங்கும் நூலகம்


நூலக கட்டிடம் மழை காலங்களில் ஒழுகும் நிலையிலும், மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும் இருந்தது. இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் பெய்த கன மழையின் விளைவாக, விலை மதிக்க முடியாத, நூற்றுக்கணக்கான புத்தகங்கள், நூலகத்தில் புகுந்த மழை நீரால் வீணாகியது. அந்த கட்டிடம் பழுதடைந்து, தற்போது இடிக்கப்படும் நிலையில் உள்ளதால் அரசு பொது நூலகம், கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்பு நகரில், ஒரு குறுகிய சந்திலுள்ள கடைசி வீட்டின் மாடியில் இயங்கி வருகிறது.

நூலகம் செயல்படும் அன்பு நகரின் சந்து




இந்த சிறிய வீட்டில், இட நெருக்கடி காரணமாக, புத்தகங்கள் வைக்க பயன்படுத்தும் பீரோக்களும், ராக்கைகளும் வீதியிலேயே கிடத்தப்பட்டிருக்கிறது. அங்கு வாசிப்புப் பகுதியில் 6 வாசகர்கள் மட்டுமே அமர்ந்து வாசிக்கக்கூடியதான ஆசன வசதிகள் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே நூலகத்திற்கு அரசு சார்பில் தனியாக இடம் ஒதுக்கி கட்டுமானம் செய்து தர வேண்டுமென இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இட நெருக்கடியால் தெருவில் கிடக்கும் நூலக மேஜைகள், பீரோக்கள்




இது குறித்து கீழக்கரை நூலக பொறுப்பாளர் திரு.கோவிந்தராஜனிடம் கேட்ட போது  "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தேவையான தகவல்களடங்கிய நூல்கள் உட்பட, பல அரிய நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக - புத்தகங்களை பார்வைக்கு வைக்க போதிய இட வசதி இல்லை. கீழக்கரை நகர் பகுதிக்குள், நூலகத்திற்கு யாரும் இடம் தராத காரணத்தால் தான், தற்போது புற நகர் பகுதியில் இயங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

கட்டு கட்டாய் புத்தகங்கள் ஓய்வெடுக்கும் அறை !
'ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது' என்றார் மகாத்மா. இது போன்ற பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய பணிகளுக்கு - அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் உதவி பெற அனுமதி உள்ளது. தன்னிறைவு திட்டத்தின் விதிகள் படி - திட்ட மதிப்பீட்டில், பொது மக்கள் மூன்றில் ஒரு பங்கு வழங்கினால், தமிழக அரசு இரண்டு பங்கு வழங்கும். ஆனால் கட்டிடப் பணியை அரசு ஒப்பந்தக்காரர்களே செய்வர். ஆனால், 50% பொதுமக்கள் செலுத்தினால் கட்டிடப் பணியை - ஆர்வலரே தரமான முறையில் கட்டலாம் என்பது விதிமுறை.

நூலக அடுப்பாங்கரையில் நூல்கள் !
இதனைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவரும், நூலக வாசகர் வட்டத்தின் புரவலர்களும் புதிய நூலக கட்டிடம் கட்டுவது குறித்து, நம் நகரில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் எடுத்துரைத்து ஆவன செய்யுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

“காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த நூல்களே"   

 நூல்கள் வாழ..  நூலகம் தேவை... வாழ வைக்க யாருமுண்டா ?

No comments:

Post a Comment