தேடல் தொடங்கியதே..

Thursday 26 April 2012

கீழக்கரையில் 'மின்சார சப்ளைக்கு' இடையூறு தரும் மரக்கிளைகள் அகற்றம் - மின்சார வாரியம் நடவடிக்கை !

நம் கீழக்கரை நகரில் 8 மணி நேர மின்வெட்டு ஒரு பக்கம், பொதுமக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது என்றால் அதையும் தாண்டி, நள்ளிரவு நேரங்களில் உயரழுத்த மின்சார வயர்களில் மரக்கிளைகள் ஒன்றோடொன்று உரசுவதால் மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய வியர்வையில் நீந்தி, 'காலை' கரையை அடைய கண் விழித்து காத்திருப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.



இந்த பிரச்சனையை களைய உடனடியாக, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும், மின் வாரிய நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் முதல் கட்டமாக, வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்சார வயர்களில் உரசுமளவிற்கு வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளை, மின் ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து வெட்டி சீர்படுத்தினார்.



இது குறித்து மின் துறை ஆய்வாளர் ரிச்சர்ட் அவர்கள் கூறும் போது "இதே போல் நம் நகரின் அனைத்து பகுதிகளும் முறையாக ஆய்வு செய்து, மரக்கிளைகள் அகற்றப்படும்" என்று தெரிவித்தார்.  



வீதியில் வீழ்ந்த மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்தாததால், அப்பகுதியில் தொழில் புரியும் பலர் சில மணி நேரங்கள் அவதிக்குள்ளாயினர்.  பின்னர் நிலைமை சீரடைந்தது.

1 comment: